தில்லியில் ராணுவம் அழைக்கப்பட்டது: கரோனா மையங்களில் பராமரிப்பு

புது தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காகத் துணைநிலை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். 
தில்லி ராதா ஸ்வாமி மையத்தில் இந்திய - திபெத் படையினர்
தில்லி ராதா ஸ்வாமி மையத்தில் இந்திய - திபெத் படையினர்

புது தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காகத் துணைநிலை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். 

உலகில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நாலாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

புது தில்லியில் ஆயிரக்கணக்கான படுக்கைகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ மையங்களின் பராமரிப்புக்காகத் தற்போது துணைநிலை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டின் தலைநகர் தில்லியில் புதன்கிழமை ஒரே நாளில் 3,900 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தில்லியில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்காக சுமார் 13,400 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6,200 படுக்கைகளில் நோயாளிகள் இருக்கின்றனர்  எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் அடுத்த வாரத்தில்  ராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பராமரிப்பில் கூடுதலாக 20 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய மையங்கள் தயாராகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பயணிகள் பெட்டிகளிலும்  ஆன்மிக மையமொன்றிலும் ஏற்படுத்தப்படும் சுமார் 10 ஆயிரம் படுக்கைகளும் இவற்றில்  அடங்கும்.

தில்லியில் வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் நோயாளிகளைக் கவனிப்பதற்காக ராணுவத்தினர் அழைக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜூலை மாத இறுதியில் புது தில்லியில் 5.5 லட்சம் பேர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட நேரிடலாம் என்றும் 1.5 லட்சம் படுக்கைகள் தேவைப்படலாம் என்றும்  தில்லி அரசு மதிப்பிடுகிறது.

இதனிடயே, தில்லியின் மிகப் பெரிய கரோனா தொற்றாளர்கள் பராமரிப்பு மையத்தின் பராமரிப்புப் பணியை இந்திய - திபெத் எல்லைக் காவல் படையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

தில்லியில் சத்தர்பூரிலுள்ள ராதா ஸ்வாமி வியாஸ் மையத்தில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட மையத்துக்கு இந்திய - திபெத் எல்லைக் காவல் படையினர் வந்து, தில்லி அரசு அலுவலர்களுடனும் மையத்தினருடனும் ஆலோசனை நடத்தினர்.

இந்த மையத்தின் பணிகளை இந்திய - திபெத் படையினர் கவனித்துக் கொள்வார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜூன் 26 ஆம் தேதி முதல் 2 ஆயிரம் படுக்கைகளுடன் இந்த மையம் செயல்படத் தொடங்கும் என்றும் விரைவில் 10 ஆயிரத்து 200 படுக்கைகளாக உயர்த்தப்படும் என்றும் இந்திய - திபெத் படை உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தப் பணியில் இந்திய - திபெத் படை மற்றும் மத்திய ராணுவ துணைநிலைப் படைகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களும்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணைநிலை மருத்துவப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com