முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
குன்னூரில் மானெக் ஷாவின் 12ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 27th June 2020 04:37 PM | Last Updated : 27th June 2020 04:37 PM | அ+அ அ- |

இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக விளங்கிய ஃபீல்டு மார்ஷல் மானெக் ஷாவின் 12ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1971ம் ஆண்டு பங்களாதேஷ் நாடு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த சாம் மானெக் ஷா தனது ஓய்வு காலத்தில் குன்னூரில் உள்ள வண்டிசோலைப் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் நாள் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அவருக்கு வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 12ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ஒய்.வி.கே.மோகன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் மட்டும் கலந்து கொண்டு உதகையில் உள்ள அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
ஆண்டு தோறும் ராணுவம் சார்பில் அணிவகுப்பு நடத்தப்பட்டு விமரிசையாக நடத்தப்படும் நிகழ்ச்சி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலான ராணுவ வீரர்களை வைத்து இந்தப் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராணுவ பயிற்சி கல்லூரியை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்று அவரது கல்லறையில் புகழ் அஞ்சலி செலுத்தினர்.