முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
ஊராட்சியில் கிணறு வெட்ட எதிர்ப்பு: நுழைவாயில் கதவை பூட்டி விவசாயிகள் போராட்டம்
By DIN | Published On : 27th June 2020 06:14 PM | Last Updated : 27th June 2020 06:17 PM | அ+அ அ- |

சேந்தமங்கலம் அருகே ஊராட்சியில் கிணறு வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செல்லும் வழியில் உள்ள கதவை பூட்டி விவசாயிகள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் முத்துக்காப்பட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்னை உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜிடம், ஊராட்சி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதுக்கோம்பை என்ற பகுதியில் கிணறு வெட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கிணறு வெட்டுவதற்கான பூமி பூஜையை ஊராட்சி நிர்வாகத்தினர் நடத்த முயன்றபோது புதுக்கோம்பை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்போது பணிகள் தொடங்கடப்படவில்லை.
அங்குள்ள மாவூத்து ஆற்றில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலான முத்துக்காப்பட்டிக்கு குடிநீர் எடுத்து வரவேண்டுமெனில் புதுக்கோம்பையில் தான் கிணறை வெட்டியாக வேண்டும். இதற்கிடையே அங்குள்ள விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து, கிணறு வெட்டுவதற்கு யாரும் மாவூத்து ஆற்றுப் பகுதிக்கு செல்ல முடியாதவதறு இரும்பு கதவை அமைத்து அதற்கு பூட்டும் போட்டு விட்டனர். இத்தகவல் அறிந்த முத்துக்காப்பட்டி பகுதி மக்கள் சனிக்கிழமை நண்பகலில் திரண்டனர். இதனால் விவசாயிகளுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முத்துக்காப்பட்டி ஊராட்சி தலைவர் அருள்ராஜேஷிடம் பொதுமக்கள் உடனடியாக இப்பிரச்னைக்கு முடிவெடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனையடுத்து சேந்தமங்கலம் வட்டாட்சியர் ஜானகிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு காவல் துறையினருடன் வந்த வட்டாட்சியர் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகள் தரப்பில், மாவூத்து ஆற்றில் கிணறு வெட்டினால் அருகில் உள்ள நீராதாரங்கள் பாதிக்கப்படும். எனவே ஆற்றினுள் கிணறு வெட்ட அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
ஊர் பொதுமக்கள் தரப்பில், மாவூத்து ஆற்றின் அகலம் 165 அடிக்கு மேல் காணப்பட்டது. ஆனால் தற்போது 50 அடிக்கும் குறைவாக உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் தேவைக்காக கிணறு வெட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றனர். பின்னர் இரு தரப்பிலும் மனுக்களைப் பெற்ற வட்டாட்சியர் மாவூத்து ஆற்றுப் பகுதியில் பட்டா நிலம் எவ்வளவு, சரபங்கா மற்றும் புறம்போக்கு நிலம் எவ்வளவு என்பது தொடர்பாக ஆய்வு செய்தபின் கிணறு வெட்டுவது தொடர்பான முடிவை எடுக்கலாம் என்றார். அதன்பின் அங்கிருந்து இரு தரப்பும் கலைந்து சென்றனர்.