முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
சாத்தான்குளம் சம்பவம்: புதுவை முதல்வர் கண்டனம்
By DIN | Published On : 27th June 2020 05:08 PM | Last Updated : 27th June 2020 05:08 PM | அ+அ அ- |

முதல்வர் நாராயணசாமி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இறந்த சம்பவத்துக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் சிறைக்கு கொண்டுபோய் அடைத்தபோது இறந்துள்ளனர்.
இது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம். இச்சம்பவத்தில் காவல் அதிகாரிகள் இருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையானது மனித உயிர்களுக்கு பாதுகாப்பானகாக இருக்க வேண்டும். அதுவே உயிர் கொல்லியாக இருக்கக் கூடாது. இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண பிரச்னைக்காக காவல் நிலையத்துக்கு கொண்டுச்சென்று சிறையில் அடைத்தது தவறு. இது காவல்துறையின் மெத்தனபோக்கு, அராஜக போக்கு ஆகும். இது தவிர்க்கப்பட வேண்டும். இச்சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுபோன்ற சம்பவம் புதுவையில் நடந்திருந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருப்போம் என்றார் முதல்வர் நாராயணசாமி.