முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
எட்டயபுரத்தில் காவலர்கள் தாக்கியதில் இளைஞர் தற்கொலை: உறவினர்கள் முற்றுகை போராட்டம்
By DIN | Published On : 27th June 2020 05:35 PM | Last Updated : 27th June 2020 05:41 PM | அ+அ அ- |

எட்டயபுரத்தில் காவல்துறையினர் தாக்கியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கட்டடத் தொழிலாளியின் சடலத்தை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் தேவரின அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு பின் ரூபாய் 4 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எட்டயபுரம் மேலத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி (29) கட்டித்தொழிலாளியான இவர் கடந்த சனிக்கிழமை 20ம் தேதி மாலை மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். இதில் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த இளைஞர் மதுபான கடைக்கு மீண்டும் சென்று மது அருந்தியுள்ளார். ரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் மது அருந்துவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்பிரிவு காவலர் கார்த்திக் உள்ளிட்ட காவலர்கள் மதுபானக் கடைக்கு விரைந்துச் சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருசக்கர விபத்து என தெரிய வந்ததால் பின்னர் அவரை எச்சரித்து எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கடந்த ஒரு வாரமாக இருசக்கர வாகனத்தை மீட்டுச் செல்ல அந்த இளைஞர் காவல் நிலையத்திற்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கணேசமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கடந்த 20ஆம் தேதி காவல்துறையினர், கணேசமூர்த்தியை தாக்கி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டதாலும் அதன் தொடர்ச்சியாக குடும்பத்திற்குள் பிரச்னை தொடர்ந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருந்த இருந்த கணேசமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் காவலர்கள் மீது புகார் தெரிவித்தனர். மேலும் உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை பெற மறுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் உயிரிழந்த கணேசமூர்த்தி குடும்பத்திற்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் சார்பில் ஒரு லட்சமும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சார்பில் ஒரு லட்சமும் மாவட்ட காவல்துறை சார்பில் 2 லட்சமும் என மொத்தம் 4 லட்சம் நிதியுதவி கணேசமூர்த்தி மனைவி ராமலட்சுமியிடம் வழங்கப்பட்டது. மேலும் ராமலட்சுமிக்கு அரசு வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கணேசமூர்த்தியின் சடலம் அவரது குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், வட்டாட்சியர் அழகர் பசும்பொன் தேசிய கழகத்தின் தலைவர் ஜோதி முத்துராமலிங்கத்தேவர், அனைத்து இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் நெல்லை ஏ.எம்.மூர்த்தி தேவர், மாமன்னர் பூலித்தேவன் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் காந்திநகர் செல்லத்துரை மற்றும் தேவர் இன அமைப்புகளின் பிரதிநிதிகள் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.