முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
ஆஸ்கர் விருது பெற்ற பாரசைட்டும் பார்த்திபனின் ஒத்த செருப்பும்
By நசிகேதன் | Published On : 03rd March 2020 03:06 PM | Last Updated : 03rd March 2020 03:06 PM | அ+அ அ- |

பாரசைட்டா, ஒத்தசெருப்பா என்றால் நமக்கு இயல்பாக ஏற்படும் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை.
உலகமே ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் உலகத் திரைப்படங்களுக்கு விருது வழங்கிடும் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் யாரும் சற்றும் எதிர்பாராதவிதத்தில் உலகுக்கு சிறந்த திரைப்படங்களைத் தரும் தென்கொரியா மொழித் திரைப்படமான பாரசைட் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேசத் திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளைப் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதற்கு காரணமான படத்தின் இயக்குநர் பொங் ஜீன் ஹொ நான்கு விருதுகளையும் பெருமையுடன் கைகளில் ஏந்தியபடி அமர்ந்திருக்கும் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தியது. ஆஸ்கர் சரித்திரத்தில் ஆங்கில மொழியில்லாத வேற்றுமொழி படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கியது உலகத் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திடும் வகையில் பாரசைட் திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு முன்னதாகவே உலகளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கது. பாரசைட் என்றால் ஒட்டுண்ணி என்று பொருள்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. அந்தத் திரைப்படம் தரைத்தளத்தில் செல்போனின் வைபைக்காகக்கூட கழிப்பறையின் கழிப்பிட உயரத்திற்கு சென்று அந்த வசதியைப் பெற்றிடும் சாதாரண தரைமட்ட மக்களுக்கும், உயர்தர குடித்தனக் காரர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கூறும் வகையில் அமைந்திருந்த படம். உயர்மட்ட குடித்தனக்காரர் வீட்டில் தரைமட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆண் முதலாவதாக வேலைக்கு சேர்ந்துவிட்டுப் பின்னர் படிப்படியாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி, தந்தை, தாய் ஆகியோரைத் தனிவகுப்பு எடுக்கும் ஆசிரியராக, வாகன ஓட்டுநராக, வீட்டு வேலைக்காரராக பணிக்கு சேர்க்கும் விதம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தமிழில் நடிகர் விஜய் நடித்து வெளியான மின்சாரக் கண்ணாவை ஒத்திருந்ததால் பல்வேறு விமர்சனங்களும், தமிழை நகலெடுத்து ஆஸ்கர் விருது பெற்ற படம் பரிசு பெற்றதாகவும் விறுவிறுப்புடன் சமாதானம் கட்டப்பட்டு வருகிறது. உயர்த்தனக் குடிக்காரர் தனது குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு சென்றதற்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்த குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அந்த வீட்டின் வசதியை திடீர் பணக்காரர்களாகத் தங்களை மாற்றிக்கொண்டு அதை முழுமையாக அனுபவிக்க முயற்சிப்பார்கள். அப்போது அந்த வீட்டில் ஏற்கெனவே வீட்டு உதவியாளராகப் பணியாற்றிப் புதிதாக அங்கு நுழைந்த குடும்பத்தினரால் துரத்தியடிக்கப்பட்ட பெண் சட்டென மீண்டும் அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த வீட்டின் ரகசிய அறைக்குள் அவர்கள் குடும்பம் நடத்தி வருவதும் தெரிய வரும். வீட்டில் நுழைந்தவர்களுக்கும், ஏற்கெனவே பணியாற்றியவர்களுக்குமிடையே தகராறு நடைபெற்று வரும் நிலையில் கடும் மழை காரணமாகத் தங்களது சுற்றுலாவைப் பாதியில் நிறுத்திவிட்டு வீடு திரும்பும் பணக்காரரிடமிருந்து தப்பித்து வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை புதிதாக வேலைக்குச் சேர்ந்த குடும்பத்தினருக்கு ஏற்பட்டு விடும், இதனிடையே புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் குடும்பத்திற்கும், ஏற்கெனவே பணிக்கு இருந்தவர்களுக்குமிடையே நடந்த தகராறில் கொலை நிகழ்வதும், இதனைத் தொடர்ந்து பணக்காரர் வீட்டில் நடைபெறும் விருந்தினர் கூடியிருக்கும் நிகழ்ச்சியில் சண்டை பெரிதாகிப் பணக்காரர் பலியாகி கலவரத்தில் ரத்தசாட்சிகள் நிகழ்ந்து விருந்து பாதியில் முடிவடையும். தனது உடல் நறுமணம் குறித்து மிகவும் கேவலமாக விமர்சித்த முதலாளியைக் கொலை செய்த ஓட்டுநர் ரகசிய அறைக்குள் அடைக்கலமாக வாழ்வதும், அந்த வீட்டில் அதற்குப் பிறகு குடியேறுபவர்களுக்கிடையே ஏமாற்றி ஓட்டுநர் வாழ்வதும், பணக்காரரானால் அந்த வீட்டை விலைக்கு வாங்கி நாம் வாழலாம் என்கிற தரைமட்டக்காரர்களின் கனவுடன் படம் நிறைவுறும். இதுதான் ஒட்டுண்ணியின் கதையம்சமாக இருந்தது. இதுவரை ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட படங்கள் கதைசொல்லியாகவோ அதன் பிரமாண்டத்திற்காகவோ பெரிதாகப் பேசப்பட்டு விருது பெற்றவையாக இருக்கும் நிலையில் மிகவும் சாதாரண கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் அயல்மொழித் திரைப்படம் விருதுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் பரிசை வென்றிருப்பது பெரும் ஏமாற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் நமது தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த ஒத்தசெருப்பை இணைத்துப் பார்க்க தோன்றியது. இந்தத் திரைப்படம் ஒரே நடிகர் மட்டுமே காட்சியில் தோன்றி பல கதாபாத்திரங்களுக்கும் பதில் சொல்லும் விதமாக ஒரே அறைக்குள் பல்வேறு உணர்வுகளையும், கொலைகளையும் விவரிக்கும் படமாகவும் அமைந்திருந்தது.
குருவிக்காக ஏங்கும் ஒருவர் தனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மனைவி, மனைவிக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் என வரிசையாகக் கொலை செய்த விதத்தை கூறி மனநிலை பாதிக்கப்பட்டதால் அவர் கொலை புரிந்திருக்கலாம் என்று முடிவு செய்து அவர் சிறையை விட்டுக் குழந்தையுடன் வெளியேறுவதாக அமைந்திருந்த படம் வித்யாச வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட படங்கள் வரிசையில் ஒத்தசெருப்பு இல்லாதது குறித்து பார்த்திபன் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
ஒத்தசெருப்பு ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால் பாரசைட்டுக்கு இணையாக இந்த அயல்நாட்டு மொழித் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தையும் விமர்சகர்கள் பதிவு செய்து வருகின்றனர். பாரசைட்டை ஒப்பிட்டுப் பார்க்கையில் அதனை விடவும் ஒத்தசெருப்பு திரைப்படம் 100 சதவிகிதம் தகுதியானது என்றும் ஒரு சாரார் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வித்தியாசமான முறையில் மிகவும் துணிச்சலுடன் வெற்றியையோ தோல்வியையோ மையம் கொள்ளாமல் வெளிவந்த தமிழ்ப் பட முயற்சியை ஆஸ்கர் வரையாவது கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றுவதையும் விமர்சகர்கள் தெரிவிக்க தவறவில்லை.
ஆஸ்கருக்கு சென்றிருந்தால் ஒத்தசெருப்பு விருதுப் பட்டியலுக்கு சென்றிருக்குமா, விருதினைப் பெற்றிருக்குமா என்பதை விடவும், நல்ல முயற்சிக்கு ஆஸ்கர் வரை சென்றிருக்கிறது என்கிற திருப்தியை தமிழ்த் திரையுலக ரசிகர்களும், பார்த்திபனும் பெற்றிருப்பார்கள். ஆஸ்கர் விருதுக்கு ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மாநில மொழித் திரைப்படங்களைத் தேர்வு செய்து அனுப்பி வைக்கும் இந்திய திரைப்பட தேர்வுக் குழுவினர் ஒத்தசெருப்பு போன்ற வித்தியாச திரைப்படத்தையும் ஏனைய மொழித் திரைப்படங்களோடு இணைத்திருக்கலாம்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற வித்தியாச திரைப்படக் கலைஞர்களை அவமதிக்காமல் இந்தியத் தேர்வுக் குழுவினர் முயற்சி செய்ய வேண்டும் என்பது சாதாரண திரைப்பட ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது பாரசைட் திரைப்படம் ஆஸ்கர் விருதினைப் பெற்றதால் ஏற்பட்ட எதிர்வினையாகக் கருதலாம். ஒரு தென்கொரிய மொழித் திரைப்படம் உலகளவில் திரைப்பட ரசிகர்களிடையே மாற்றுச் சிந்தனையின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது யாராலும் தவிர்க்க முடியாத உண்மை.