கை கழுவுங்கள்! விலகியிருங்கள்! காத்துக் கொள்ளுங்கள்!

கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள முக்கியமான மூன்று எளிய வழிகள்...
கை கழுவுங்கள்! விலகியிருங்கள்! காத்துக் கொள்ளுங்கள்!

கரோனா வைரஸைக் கண்டு உலகமே அதிர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தது என்ன? என்பது அறியாமல் வல்லரசுகளிலிருந்து வழிப்போக்கர்கள் வரை விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காற்றின் வழியோ, கழிப்பறைகள் வழியோ, கொசுக்கள், பறவைகள் போன்றவற்றின் வழியோ, இதுபோன்ற வேறெந்த வழியோ கரோனா வைரஸ் பரவுவதில்லை.

பிரதானமாகப் 'படுதல் - கான்டாக்ட்' மூலம்தான்  கரோனா வைரஸ் பரவுகிறது.

'படுதல் - கான்டாக்ட்'டைத் தவிர்த்து கரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ள எளிதான முக்கிய வழிகள் என மூன்றைக் குறிப்பிடுகின்றன மருத்துவ வட்டாரங்கள்.

1. பெரும்பாலும் வாய், கண், மூக்கு வழியேதான் உடலுக்குள் இந்தக் கிருமிகள்  தொற்றுவதாகக் கூறப்படுகிறது.

நாம் வெளியே செல்லும்போதோ, வாகனங்களில் ஏறி இறங்கும்போது, பிற இடங்களைத் தொடும்போதோ, அந்த இடத்தில் கரோனா பாதிக்கப்பட்ட (இன்றைய சூழ்நிலையில் அத்தகைய பாதிப்பு இருப்பது  அவருக்கேகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை) ஒருவர் தும்மியதால், இருமியதால், எச்சில் துப்பியதால்  படிந்திருக்கும் கிருமிகளைக் கொண்டுள்ள ஈரப் பிசுக்குகள் நம் கைகளிலும் ஒட்டிக் கொண்டுவிடும்.  அதே கைகளால் நாம் முகத்தில் என்ன செய்தாலும் மிக எளிதாக நமக்குள்ளும் வைரஸ்கள் புகுந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

எனவே, எப்போது நாம் வெளியே சென்றாலும் நம் கைகள் பல இடங்களில் பட்டிருக்கும். எனவே, வெளியே சென்றுவிட்டு வந்தால், வெளியிடங்களில் புழங்கிவிட்டு வந்தால் உடனடியாகக் கைகளை நன்றாக சோப்பிட்டுக் கழுவ வேண்டும். வெளியே இருக்கும்போது கைகளால் முகத்தைத் துடைப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது (ஏனெனில், நம்மை அறியாமல் நம் கைகளில் கிருமி படிந்திருக்கக் கூடும்). எனவே, கை கழுவுங்கள், கழுவுங்கள், கழுவிக் கொண்டே இருங்கள்!

2. ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு ஈரப் பிசுக்குகள் பரவுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மவோ, இருமவோ நேரிடும்போது அருகில் இருக்க நேரிட்டால், அவற்றிலிருந்து வெளிப்படும் கிருமிகளைத் தாங்கிய ஈரப் பிசுக்குகள், மிக எளிதாக நம் உடலுக்குள் நுழைந்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, இருமல், தும்மல்களை எதிர்கொள்ளாமல் விலகியிருங்கள்.

3. இவ்வாறு எதுவும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அருகில் நாம் இருக்க நேரிட்டால், அவருடைய மூச்சுக்காற்று, உமிழ்நீர்ச் சிதறல் வழியிலோ, வேறு விதத்திலோ வெளியேறக் கூடிய கிருமிகளை ஏந்திய ஈரப் பிசுக்குகள் நம்மைத் தொற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.

ஆகவே, வெளியிடங்களுக்குச் செல்லும்போது அருகருகே நிற்கவோ, இருக்கவோ, புழங்கவோ வேண்டாம். ஒருவரிடமிருந்து மற்றொருவர் ஆறடி விலகியிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்தியாவில் இது எந்தளவுக்கு  சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. என்றாலும் விலகித்தான் இருந்தாக வேண்டும். எனவே, முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து விலகியிருங்கள் - சமூக  இடைவெளி - சோஷியல் டிஸ்டன்சிங்.

எனவே, படுதலைத் தவிர்ப்போம், கை கழுவுவோம், விலகியிருப்போம், தற்காத்துக் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com