மீட்டுருவாக்கப்பட வேண்டிய சித்திரை முழுநிலவு இந்திர விழா

மீட்டுருவாக்கப்பட வேண்டிய சித்திரை முழுநிலவு இந்திர விழா

பௌர்ணமி ஔி ஞாபக சக்தியை அதிகரிக்கும் என நம்பப்படுவதால்தான் மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளன்று மக்கள் மலையைச் சுற்றி வலம் வருகின்றனர்...

தமிழ்நாட்டில் பெரும்பாலான திருவிழாக்கள் அறுவடை முடிந்து ஓய்வாக உள்ள பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறும். தமிழ் வருடத்தின் முதல் திங்களான சித்திரை பௌர்ணமி நன்னாளில் கடற்கரைக்கருகில் வசிக்கும் மக்கள் மாலைப்பொழுதில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கடற்கரையில் கூடி விளையாடி மகிழ்வர். தங்களுடன் கொண்டுவந்த உணவுப் பொருள்களை உண்டு களிப்பர். அன்றைய நாளில் வெயிலின் உக்கிரத்தைத் தணிப்பதற்கும் கடலினின்று எழும் முழு மதியின் அழகைக் கண்டு ரசிக்கவும் மக்கள் கூடுவர்.

சூரியனிடமிருந்து ஔிக்கதிர்களைப் பெற்று ஔிரும் சந்திரன் இரவில் ரம்மியமான ஔிக்கற்றையை வீசுவதால் பண்டைத் தமிழர் தங்களது வசிப்பிடங்களில் நிலா முற்றம் அமைத்து வெண்ணிலவின் பயனைத் துய்த்தனர்.

நிலவொளியில் மீனவர்கள் கடல் மணற்பரப்பில் மீன்பிடி வலைகளைப் பரப்பி உலர்த்துவதை சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. அறிவியல் ரீதியாக சூரியன் உடலோடு தொடர்புடையதாகவும் சந்திரன் மனதோடு தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. மனம் மூளையோடு தொடர்புடையதாகும் என்பது இங்கு நோக்குதற்குரியது.

பௌர்ணமி ஔி ஞாபக சக்தியை அதிகரிக்கும் என நம்பப்படுவதால்தான் மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளன்று மக்கள் மலையைச் சுற்றி வலம் வருகின்றனர். மனிதனது வாழ்க்கையினை விண்கோள்கள் கட்டுப்படுத்துகின்றன என்ற கருத்தேற்றத்தின் அடிப்படையில் மக்கள் நல்ல கோள்களின் சேர்க்கை கூடிவரும் நேரத்தில் விழாக்களைத் தொடங்குவர்.

இவ்விழாக்களைப் பெரும்பாலும் வளர்பிறை மற்றும் நிறைமதி நாட்களில் தொடங்குவது தமிழர் மரபாகும். சித்திரை மாதம் பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரத்தில் மக்கள் துன்பமின்றி வாழ இறைவனை வேண்டி நடத்தப்படும் தீவகசாந்தியாகிய இந்திர விழா முழுமதி நாளில் தொடங்கியதனை,

          சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

          வெற்றிவேன் மன்னற்குற்றதை யொழிக்கெனத்

          தேவர் கோமா னேவாலிற் போந்த

          காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப்

          புழுக்கலு நோயையும் விழுக்குடை மடையும்

          பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து

          துணங்கையர் குரவைய ரணங்கெழுந்தாடிப்

          பெருநில மன்ன னிருநில மடங்கலும்

எனச் சிலப்பதிகாரம் (5:64-71) விரிவாகக் குறித்துள்ளது.

வேத காலத்தில் முதன்மைக் கடவுளாகக் கருதப்பட்ட இந்திரன் இதிகாசக் காலத்தில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். பழந்தமிழர் வாழ்வில் வேதகாலப் பண்பாடு கலந்ததால் தமிழரின் மருதநில மக்களின் வேந்தனும் ஆரியரின் இடி, மின்னலுக்கான கடவுள் இந்திரனும் ஒன்றாக இணைக்கப்பட்டன. இந்திரனுக்கு தேவேந்திரன் என்ற பெயருமுண்டு. மருதநில மக்கள் தங்கள் நிலத்தின் சிறப்பினைக் கருதி இந்திரனை வழிபட்டுள்ளனர்.

சங்க இலக்கியங்களான ஐங்குறுநூறு மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் இந்திர விழா பலநிற மலர்களை மிகுதியாகப் பயன்படுத்திய பல பூ விழாவாகக் கொண்டாடப்பட்டதைத் தெரிவிக்கின்றன. சங்கம் மருவிய இலக்கியங்களான இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திரவிழா கடற்கரைப் பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாள்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டதைக் காட்டுகின்றன.

இந்திர விழா தொடங்கப்படும் நாளை அரசு முரசத்தை யானை மீதேற்றி நெடுகப் பறையறைந்து மக்களுக்குத் தெரிவித்தனர். சங்ககால சோழ மன்னர்களின் துறைமுக நகரமான புகார் நகர வீதிகள் அழகுபடுத்தப்படும். தெய்வங்களுக்குச் சிறப்புப் செய்யப்படும். புகார் நகரைப் பாதுகாத்து வந்த சதுக்கப் பூதத்திற்கு பொங்கலிட்டுக் குரவையாடி மகிழ்வர். வெள்ளி மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் ஆகிய ஐந்து மன்றங்களிலும் பலியிடும் நிகழ்வுகள் நடைபெறும். அரண்மனையிலிருந்து அரசன், ஆட்சி முதல்வர்கள், ஐம்பெருங்குழுவினர், எண்பேராயத்தார், நகரப் பெருமக்கள், செல்வந்தர் முதலியோர் தேரிலும், யானை, குதிரையிலமர்ந்தும் ஊர்வலமாக வந்திருந்து விழாவைத் தொடங்கி வைப்பர்.

அரசனை வாழ்த்திய பிறகு காவிரி புண்ணிய நீர் கொண்டு இந்திரனை நீராட்டி வழிபாடு செய்வர். காவிரி கடலுடன் கலக்குமிடத்தில் மக்கள் கடலில் நீராடுவர். இசை, நடனம், பட்டிமண்டபம், அறநெறிச் சொற்பொழிவுகள் போன்ற இலக்கிய, கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு இந்திர விழா மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். நாட்டின் பசி, பிணி, பகை நீங்கி, நிலம் செழிக்க மழை வேண்டி இவ்விழா கொண்டாடப்பட்டது.

வானம் மும்மாரி பொழியவும் மன்னனின் செங்கோல் வளையாதிருக்க இந்திர விழா (தீவகசாந்தி விழா) கொண்டாடப்பட்டதை மணிமேகலை (2:1-3),

            நாவ லோங்கிய மாபெருந் தீவினுட்த

          காவற் றெய்வதந் தேவர்கோற் கெடுத்த

          தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்

எனக் குறிப்பிடுகிறது.

இந்திரன் துர்வாச முனிவரின் சாபத்தால் கடலில் இழந்த தன்னுடைய செல்வத்தை, கடலைக் கடையும்பொழுது பெற்றான், என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. சந்திரன் திருப்பாற்கடலைக் கடையும்போது தோன்றியவன் என்பது இதனுடன் ஒப்புநோக்கத்தக்கதாகும். சந்திரன் தோன்றிய நாளில் இந்திரன் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதனால் எழுந்த வழிபாடாக இந்திர விழா இருக்கலாம் என்பர் சிலர்.

சங்க காலத்தில் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் எடுக்கப்பட்ட இந்திர விழா, சங்கம் மருவிய காலத்தில் திராவிட ஆரிய கலப்பினால் புராணக் கதைகளின் பின்னணியில் கடற்கரைப் பகுதியான நெய்தல் நிலத்தில் கொண்டாடப்பட்டது. நீர்நிலைகளில் இறையுருவங்கள் வைத்து வழிபாடு இயற்றுவது தமிழர் மரபு. இவ்வாறு இயற்கையோடு இயைந்த ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்த சங்க காலத் தமிழரின் நானிலப் பண்பாடு, பின்னாளில் மாற்றத்திற்குள்ளானதும் இந்திர வழிபாடு மறைந்தது. இந்திரனுக்காக எடுக்கப்பட்ட விழா புராணக் கதைகளின் எழுச்சியால் மாற்றத்திற்குள்ளாகியது. இந்நாளில் மனிதர்களின் புண்ணிய, பாவங்களைப் பதிவு செய்யும் உதவியாளராக யமனுக்குப் பணிபுரிந்த சித்ரகுப்தனை வழிபடுவது வழக்கமாகிவிட்டது. மதுரையில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.

தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன் என்னும் சோழ அரசனால் இந்திர விழா தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) சோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. இதனை நெடுமுடிக்கிள்ளி என்னும் அரசன் செய்யாதொழிந்தமையால் இந்நகரை ஆழிப்பேரலை ஆட்கொண்டுவிட்டது எனக் கூறப்படுகிறது.

இந்திர விழா எடுக்கப்படவில்லையெனில் ஏற்படும் இடர்ப்பாடுகளை மணிமேகலை (1:20-22),

          விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்

          மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க

          இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்

எனக் கூறுகிறது. இந்திர விழாவை மறந்தொழிந்ததனால் சுனாமி என்னும் பேரலை ஏற்பட்டிருக்கலாமோ என்ற அச்சம் ஒரு சிலருக்கு உள்ளது.

சித்ரா பௌர்ணமி நாளைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு இந்திர விழாவைத் தமிழக அரசின் சுற்றுலாத் துறை நடத்தியது. இந்நாள்களில் மாலைப்பொழுதில் இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக இவ்விழா நடைபெறாமல் உள்ளது.

இவ்வாறு இயற்கையோடு தொடர்புடைய இந்திர விழாவை மீட்டுருவாக்கம் செய்வது தமிழரின் கடமையாகும். உலகத்திற்கே பாடம் கற்பிக்கும் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியாக"த் தமிழர் தம் பண்பாட்டை அழியாமல் காத்து வருங்காலச் சந்ததியினருக்குக் கொண்டு செல்வது நம் அனைவருடைய கடமை.

[கட்டுரையாளர் - சிற்பத்துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com