செவிலியர் நாள்: கரோனா பாதிக்கப்பட்டவர்களுடனான ஒரு செவிலியரின் பயணம்

கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒருபுறம் பட்டியலிட, மறுபுறம் கரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவப் பணியாளர்கள்...
செவிலியர் நாள்: கரோனா பாதிக்கப்பட்டவர்களுடனான ஒரு செவிலியரின் பயணம்


கரோனா நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருபுறம் பட்டியலிட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் கரோனா நோய்வாய்ப்பட்டவர்களைத் துணிச்சலாகக் கையாண்டு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவப் பணியாளர்கள்.

நோயாளிகளைக் கையாள்வதில் மருத்துவர்களின் பாடு ஒருவிதம் என்றால் செவிலியர்களின் பாடோ பலவிதம்.

இந்தக் கரோனா காலத்தில் - உலக செவிலியர் தினத்தில் - கரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் பணியில் இருக்கும் அனுபவம் பற்றிக் கேட்டபோது சென்னை ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் டி. சோபியா ரஞ்சிதா ராணி கூறுகிறார்:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி செய்வோரை ஒதுக்குவதற்கான பட்டியல் தயாராகிக் கொண்டிருந்தது.

நாங்கள் சென்று பட்டியலைப் பார்த்தோம். தோழிகளோடு  என்  பெயரையும்  கொடுத்தேன். எவ்வளவு கஷ்டமான பணியானாலும் தோழிகள் துணையுடன்  செய்வது ஒரு மகிழ்ச்சியே. 
     
கரோனா கிருமித் தடுப்பு கவச உடை போன்றவற்றுக்கான பயிற்சி வகுப்புக்குச் சென்று தயாராக இருந்தோம். இரவுப் பணிக்கு (நானும் ரௌடி தான் என்று போலீஸ் ஜீப்பில் ஏறுவதுபோல்) பெயரைக் கொடுத்தோம். 
     
மறுநாள் தொடங்கி இரவுப் பணிக்கு வர அழைப்பு வந்தது. எல்லாருக்கும் வரும் ஒருவித பயம் எங்களுக்கும் இருந்தது. புறப்பட ஆயத்தமானேன். மறுநாள் எங்கள் திருநாள் என்பதால் பிள்ளைகளுக்கு அனுப்ப மனம் இல்லை. ஒரு வழியாக அவர்களைத் தேற்றிவிட்டு கிளம்பினேன். 

போருக்கு அனுப்புவதுபோல் குடும்பமே வந்து கண்ணீர் மல்க வழியனுப்பினார்கள். நானும் பெருமிதமாக ராணுவத்திற்கு கிளம்புவது போல் கிளம்பினேன்.

மாலை  6.30 மணிக்கே சாப்பிட்டு, தண்ணீர் குடித்து 7 மணிக்கு கவச உடை அணிந்துகொண்டு உள்ளே சென்றோம். காற்றுப் புகாத உடை, என்95 முகக் கவசம் அணிந்துகொண்டு இருப்பது ஒருவித இறுக்கத்தையும் சோர்வையும் கொடுத்தது.

இருப்பினும்  எங்களுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளைக் காண சென்றேன்.
        
ஒவ்வோர் அறையாகச் சென்று என்னை அறிமுகப்படுத்திகொண்டு, இன்சுலின், உணவு, டிபிஆர் சோதனை செய்து மருந்துகளைக் கொடுத்தேன். 

நோயாளிகளின் உடல் நிலை, முன்னேனேற்றம் பற்றித் தகவல்கள் அவ்வப்போது வரும் அழைப்புகளுக்குப் பதில் சொல்லிவிட்டு,  புதிதாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அனுப்பி பரிசோதனை முடிவுகளைப் பெற்று, மற்ற வழக்கமான பணிகளை முடிக்க ஓடிக்கொண்டே இருந்ததில் விடிந்து காலை 7 மணி ஆகிவிட்டதே தெரியவில்லை. 

இந்த 12 மணி நேரமும், தண்ணீர் குடிக்கவும் இல்லை, இயற்கை அழைப்புகளுக்குச் செல்லவும் இல்லை. காலைப் பணிக்கு வந்தவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு விடுதிக்கு வந்து குளித்து முடித்த பிறகே தண்ணீர் பருகினோம்.

ஒரு யுகம் கடந்ததைப் போல் உணர்ந்தோம். மறுநாள் முதல் கம்பீரமாக களத்தில் இறங்கிவிட்டோம். இரவுப் பணி முடித்ததும்,  அடுத்த சுற்றில் பணியாற்றக் காத்திருப்போருக்கு மன தைரியம் கொடுத்தோம். 

தனித்திருக்க வேண்டிய காலகட்டத்தில் சைதாப்பேட்டையில் எங்களுக்கு அரசு ஒதுக்கி இருந்த வீட்டிலயே தங்கினோம்.

வீட்டில் பிள்ளைகள் போன் செய்து எப்போது வருவீர்கள் என்று கேட்கும்போது பதில் சொல்ல முடியாமல் அழுத நாள்கள் உண்டு. தோழிகள் அருகே இருந்த போதும் அணைத்து ஆறுதல் கொடுக்கவோ பெறவோ முடியவில்லை. ஏனென்றால் தனிமைப்படுத்தல் எங்களைப் பிரித்தது.

இப்படியாகத்தான் இரு வார காலமும் கழிந்தது.

என்னதான் பயமும் கலக்கமும் இருந்தாலும் பிரார்த்தனையோடுதான் 14-வது நாள் சளி சோதனை செய்யச் சென்றோம். பொதுத் தேர்வு எழுதிய மாணவியைப் போல் முடிவுக்காகக்  காத்திருந்தோம்.

மறுநாள் முடிவு வந்தது. முதல் அணியில் இருந்த 20 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்று தெரிவித்துவிட்டார்கள். அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சுடன் வீட்டிற்குத் திரும்பினோம்.
 
ஆனால், இன்னமும் தனித்திருப்பது தொடருகிறது. வீட்டில் தனித்திருத்தல் என்ற பெயரில். பிள்ளைகளை அருகில் விடுவதில்லை. யாருடனும் பேசுவதில்லை. தனித்திருக்கிறேன். 

அனைவருடைய நலனுக்காகவும்... எனினும் சோர்வு இல்லை. தயாராகிவிட்டோம். அடுத்த சுற்றுக்கு..."

செவிலியர் சோபியாவின் பேச்சில் தெரிந்தது ஒரு பெருமிதம். உலகில் ஆயிரமாயிரம் செவிலியர்களும் ஆயிரமாயிரம் மருத்துவர்களும் ஆயிரமாயிரம் பணியாளர்களும் தன்னலம் கருதாமல் இவ்வாறுதான் கரோனாவுக்கு எதிராகக் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் செவிலியர்களே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com