ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கம்: சில நாள்களில் முன்பதிவு தொடங்குகிறது

ஜூன் 1 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கம்: சில நாள்களில் முன்பதிவு தொடங்குகிறது


ஜூன் 1 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

இதற்கான இணையதள முன்பதிவு இன்னும் சில நாள்களில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அறிவிக்கப்படும் கால அட்டவணைப்படி ஜூன் 1 முதல் நாள்தோறும் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை 4-ம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரதான ரயில் நிலையங்களுக்கு அருகே பதிவு செய்ய மாநில அரசுகள் உதவ வேண்டும். அந்தப் பட்டியலை ரயில்வேயிடம் கொடுத்தால், அதற்கேற்றவாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தொழிலாளர்கள் அவரவர் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு இந்திய ரயில்வே உங்களை விரைவில் அழைத்துச் செல்லும்.

இதுதவிர, ஜூன் 1 முதல் முன்னதாக அறிவிக்கப்படும் கால அட்டவணைப்படி நாள்தோறும் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும். இதற்கான இணையதள முன்பதிவு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், "19 நாள்களில் 1,600-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் 21.5 லட்சம் தொழிலாளர்களை இந்திய ரயில்வே அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேலும் உதவும் வகையில் இந்த ரயில் எண்ணிக்கையை இரட்டிப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1, 2020 முதல் முன்னதாக அறிவிக்கப்படும் கால அட்டவணைப்படி நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இணையதளம் வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கப்படாது. பயணிகள் யாரும் ரயில் நிலையங்கள் வர வேண்டாம். இவை ஏசி அல்லாத ரயில்கள். இதற்கான ரயில் மற்றும் அதன் நேர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நகர்வு மிகப் பெரிய உதவியாக இருக்கும். யாரும் பயப்பட வேண்டாம். அனைவரும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு விரைவில் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சொந்த மாநிலங்களுக்கு சாலை வழியாக நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிந்து, அருகில் உள்ள மாவட்ட தலைநகரில் அவர்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, அவர்களை அருகில் உள்ள பிரதான ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு மாநில அரசுகளை இந்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் பட்டியலை ரயில்வே நிர்வாகிகளிடம் அளித்தால், அதற்கேற்றவாறு சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com