மேட்டூரில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மேட்டூரில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மேட்டூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேட்டூர் நகராட்சியில் 175 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக காலணி வழங்கவில்லை, கம்பூட் வழங்கவில்லை, மேலும் துப்புறவு உபகரணங்களான கூடை, விளக்குமாறு வழங்கப்படவில்லை. துப்புரவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்கள் பழுது நீக்க பணியாளர்களிடம் பணம் வசூலிக்க படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் நடத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மேட்டூர் கிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பணி பாதுகாப்பு, பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வலியுறுத்தியும், தூய்மைப் பணியாளர்களை நகராட்சி ஆணையாளர் வீட்டிற்கு நாய் பராமரிக்க அழைக்கக் கூடாது என்றும் கோஷம் இடப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் மேட்டூரில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மேட்டூர் கிளை செயலாளர் கருப்பண்ணன் கூறும்போது:  மேட்டூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, காலனி உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படவில்லை, தூய்மைப் பணியாளர்களை நகராட்சி ஆணையாளர் தனது வீட்டில் வளர்க்கும் நாய்களை பராமரிக்கவும், காய்கறி வாங்கவும் பயன்படுத்துகிறார். இதனால் துப்புரவு பணிகள் தேங்குகிறது என்று கூறினார்.

மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com