நாகையில் உதயநிதி ஸ்டாலின் கைது

நாகை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயன்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகையில் கைதான உதயநிதி ஸ்டாலின்
நாகையில் கைதான உதயநிதி ஸ்டாலின்



நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயன்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற பிரசாரப் பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  நாகை மாவட்டம், திருக்குவளையில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கினார். அப்போது,  கரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக கைது செய்வதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினரை காவலர்கள் கைது செய்து,  சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் விடுவித்தனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இரண்டாம் நாளாக சனிக்கிழமை காலை நாகையில் தனது பிரசாரப் பயணத்தை தொடர்ந்தார். முதல் நிகழ்வாக, நாகை அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்துக்குச் சென்றார். அங்கு, மீனவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, ஒரு மீன்பிடி விசைப் படகில் கடல் முகத்துவாரம் வரை பயணித்து, முகத்துவாரப் பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து, அங்கு மீனவர்களிடையே பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற போது, காவலர்கள் அவரை தடுத்து கைது செய்தனர். உதயநிதி ஸ்டாலினுடன், முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உ. மதிவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.கௌதமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

கரோனா பொது முடக்க விதி மீறல்களின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com