மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதிருத்ர சஹஸ்ர சண்டீ மகா யாகம் நாளை தொடக்கம்

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதி ருத்ர சகஸர சண்டீ மகா யாகம் நாளை தொடக்கம் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது
மானாமதுரையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி.
மானாமதுரையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி.

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதி ருத்ர சகஸர சண்டீ மகா யாகம் நாளை தொடக்கம் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

மானாமதுரை,ஆக6- அன்னதானத்திற்கு பெயர்போன சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதிருத்ர சஹஸ்ர சண்டீ மகா யாகம் நாளை 7 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. 

மானாமதுரையில் இருந்து 5 கி.மீ தொலைவில்  வேதியரேந்தல்  விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி யாகம் நடைபெறுவது வழக்கம்.

மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயில் தோற்றம்

இந்த யாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வந்து பக்தர்கள் பங்கேற்பது வழக்கமாகும்.

மேலும் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நாள் முழுவதும் அன்னதானம் நடத்தப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கடந்த 18 ஆண்டுகளாக கோயிலில் சஹஸ்ர சண்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சஹஸ்ர சண்டி யாகம் நடத்தப்படவில்லை.

 19 ஆவது ஆண்டாக இந்த ஆண்டில் பிரத்யங்கிரா தேவி கோயிலில்  சஹஸ்ர சண்டி யாகம் தொடர்ந்து 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு நாளை சனிக்கிழமை(7 ஆம் தேதி) காலையில் யாக நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

ஸ்ரீவாஞ்சா  கல்பலதா கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்குகிறது. வரும் 16 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த அதிருத்ர மகா சஹஸ்ர சண்டீ யாகத்தின் நிறைவாக 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை ஸமக்ரபஷா சண்டி ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடாகி பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீரால் பாத சமர்ப்பணம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 

மானாமதுரை பிரத்யங்கிராதேவி கோயில் நுழைவாயில்

யாகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 12 ஆம் தேதி குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டி புத்திர காமேஷ்டி யாகமும் அதைத்தொடர்ந்து 13 ஆம் தேதி திருமணத் தடைகள் நீங்கி திருமணமாகாதவர்களுக்கு திருமண நடைபெற வேண்டி சுயம்வர பார்வதி யாகமும் நடைபெறுகிறது. 

தஞ்சை குருஜி பி.வி.கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் யாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

யாகம் நடைபெறும் 10 நாள்களும் கோயிலில் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் யாகத்தில் பங்கேற்று அம்பாளை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

யாக நாள்களில் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாகத்தில் பங்கேற்க கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக மதுரை, மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் பிரத்தியங்கிரா தேவி கோயிலுக்கு இயக்கப்படுகிறது.

அதிருத்ர மகா சஹஸ்ர சண்டீ யாகத்திற்காக பிரத்தியங்கிராதேவி கோயில் யாகசாலையில் உள்ள யாக குண்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.

யாகத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மற்றும் மாதாஜி ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com