பாபநாசம் தாமிரவருணியில் தர்ப்பணம் செய்யத் தடை: வெறிச்சோடி காணப்படும் பாபநாசம்
By DIN | Published On : 08th August 2021 10:56 AM | Last Updated : 08th August 2021 10:56 AM | அ+அ அ- |

பக்தர்களின்றி காணப்படும் பாபநாசம் கோவில் படித்துறை
அம்பாசமுத்திரம்: பாபநாசம் தாமிரவருணியில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் மற்றும் தாமிரவருணி கரையோரங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு புனித நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து பிதுர் கடன் கொடுத்து வருகின்றனர்.
வெறிச்சோடி காணப்படும் பாபநாசம்.
இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் வழிபடவும், புனிதநதிகளில் நீராடும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரவருணியிலும் நீராடி தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆடி அமாவாசைக்கு பக்தர்கள் சென்று வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் கடனாநதியில் குவிந்த பக்தர்கள்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசைக்கு ஒரு வாரம் வனப் பகுதியில் தங்கியிருந்து விரதமிருந்து வழிபட்டுச் செல்லும் நிலையில் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் காரையாறு சொரிமுத்தையனார் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தாமிரவருணி நதிக் கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து தென்காசி மாவட்டம் ஆம்பூர் கடனாநதிக் கரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பொது மக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர். அனைத்து நதிகளிலும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடனா நதி கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.