உத்தரப் பிரதேசத்துக்கு ஒரு நியதி, தமிழகத்திற்கு ஒரு நியதியா? சு.வெங்கடேசன் எம்பி கேள்வி

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்
உத்தரப் பிரதேசத்துக்கு ஒரு நியதி, தமிழகத்திற்கு ஒரு நியதியா? சு.வெங்கடேசன் எம்பி கேள்வி

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக்கோரும் தமிழக எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது” என அமைச்சர் பதிலளித்ததாகத் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சு.வெங்கடேசன்,“மதுரையில் இருந்து கூடுதலான சர்வதேச விமானங்களை இயக்குவோம் எனச் சொல்லும் அமைச்சர் “மதுரையை சர்வதேச விமானநிலையம் ஆக்குவோம்” என்று மட்டும் சொல்ல மறுக்கிறார். அது தான் பிரச்சனையின் மையப்புள்ளியே. உ பி யில் 2021 அக்டோபரில் குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தை திறக்கிறீர்கள். நவம்பர் மாதம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறீர்கள். அடுத்த ஆண்டே அயோத்தியில் துவக்கப்படும் என அறிவிக்கிறீர்கள்.

உத்தரப் பிரதேசத்துக்கு என்ன அளவு கோல்? தமிழகத்துக்கு என்ன அளவு கோல்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “வாரணாசி & குஷிநகரில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டுப்பயணிகளின் எண்ணிக்கையை விட மதுரையிலிருந்து பயணப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை மூன்றுமடங்கு அதிகம்.

நாட்டிலுள்ள 10 சர்வதேச விமானநிலையத்திலிருந்து பயணப்பட்ட பயணிகளைவிட மதுரையிலிருந்து பயணப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது என்று கூறும் அதே வேகத்தோடு மதுரையை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள். வரவேற்க தயாராக இருக்கிறோம்.

நாங்கள் உண்மைக்கு மாறாக பேச வேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன” என சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தை மையமாகக் கொண்டு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடையேயான விவாதம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com