கால்வன் மோதலில் 4 வீரர்கள் மரணம்: சீனா ஒப்புதல்
By DIN | Published On : 19th February 2021 12:47 PM | Last Updated : 19th February 2021 12:52 PM | அ+அ அ- |

கல்வான் பள்ளத்தாக்கு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு சீனா இதனை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் உயிரிழந்த வீரர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு கெளரவ விருதுகளும், அவர்களது குடும்பத்தினருக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய ராணுவ ஆணையம் அறிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லையின் சில இடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பும் அங்கு படைகளை குவித்தன.
இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி சீன தரப்பு ஏற்படுத்திய கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தியது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கில் கற்கள், இரும்புத் தடிகள் பயன்படுத்தப்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த மோதலில் 4 வீரர்கள் மரணமடைந்ததாக சீன ராணுவம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு கெளரவ விருதுகளும், அவர்களது குடும்பத்தினருக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ராணுவ ஆணையம் அறிவித்துள்ளது. அவர்களை வழிநடத்திச் சென்று படுகாயமடைந்த கர்னலும் கெளரவப்படுத்தப்பட்டுள்ளார் என்று பதிவிடப்பட்டுள்ளது.