வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்

வெளிநாடு வாழ் இந்தியர் தின 16 ஆவது மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். 
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)


புதுதில்லி: வெளிநாடு வாழ் இந்தியர் தின 16 ஆவது மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். 

வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு என்பது வெளிவிவகார அமைச்சகத்தின் முதன்மை நிகழ்வாகும், இதன் மூலம்  வெளிநாட்டு இந்தியர்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான தளத்தை வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோய்த்தொற்று காலமாக இருந்தபோதிலும், எங்கள் துடிப்பான வெளிநாடுவாழ் இந்தியர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, வெளிநாடுவாழ் இந்தியர் தின 16 ஆவது மாநாடு சனிக்கிழமை (ஜன.9) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"தற்சார்பு இந்தியாவுக்கான பங்களிப்பு" என்பது இந்த ஆண்டு மாநாட்டின் மையப் பொருளாகும்.

மாநாடு சனிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். 

"இந்த மாநாடு எங்களின் துடிப்பான வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் தொடர்புகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகும்" என்று சுட்டுரை பக்க பதிவில் மோடி தெரிவித்துள்ளார். 

தொடக்க அமர்வை தொடர்ந்து இரண்டு முழுமையான அமர்வாக இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல் அமர்வில்  வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு மற்றும் கரோனா நோய்த்தொற்று சவால்களை எதிர்கொள்வது தொடர்பாகவும், இரண்டாவது அமர்வில் சுகாதாரம், பொருளாதாரம், சமூக மற்றும் சர்வதேச உறவுகள் குறித்தும் பேசப்பட உள்ளது. இதில் வெளிவிவகார அமைச்சர் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை, சுகாதாரத்துறை அமைச்சர்கள் உரையாற்றுகின்றனர்.  

இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் நிறைவுரையாற்றுகிறார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் அவர்கள் செய்த பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

2020 -21-ஆம் ஆண்டுக்கான வெளிநாடுவாழ் இந்தியர் விருது பெறுவோரின் பெயர்களும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com