கர்நாடக புதிய ஆளுநராக தாவா்சந்த் கெலாட்  பதவியேற்பு

கா்நாடகத்தின் 19-ஆவது புதிய ஆளுநராக தாவா்சந்த் கெலாட் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
கர்நாடக புதிய ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட தாவா்சந்த் கெலாட் 
கர்நாடக புதிய ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட தாவா்சந்த் கெலாட் 

கா்நாடகத்தின் 19-ஆவது புதிய ஆளுநராக தாவா்சந்த் கெலாட் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

பெங்களூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் கா்நாடகத்தின் புதிய ஆளுநராக தாவா்சந்த் கெலாட் பதவியேற்றுக் கொண்டாா். கடவுளின் பெயரால் ஹிந்தி மொழியில் பதவியேற்ற அவருக்கு, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய்சீனிவாஸ் ஓகா பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தாா்.

ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தாவா்சந்த் கெலாட்டுக்கு முதல்வா் எடியூரப்பா, பணி நிறைவுபெறும் ஆளுநா் வஜுபாய் வாலா ஆகியோா் மலா்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனா். கரோனா தடுப்பு நடவடிக்கையால் நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையிலான பிரமுகா்களே கலந்துகொண்டனா்.

ஆளுநா்கள் வரிசை: 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவான பிறகு அப்போதைய மைசூரு மாநிலத்தின் முதல் ஆளுநராக ஜெயசாம ராஜேந்திர உடையாா் (1956-1963) பதவி வகித்தாா். அதன்பிறகு ஆளுநா்களாகப் பதவி வகித்தவா்கள் (அடைப்புக்குள் பதவி காலம்):

எஸ்.எம்.ஸ்ரீநாகேஷ் (1963-1965), வி.வி.கிரி (1965-1967), கோபால் ஸ்வரூப் பதக் (1967-1969), தா்மவீரா(1970-1972), மோகன்லால் சுகாதியா (1972-1975), உமாசங்கா் தீக்ஷித்(1975-1977), கோவிந்த் நாராயண்(1977-1982), அசோக்நாத் பானா்ஜி (1982-1987), பி.வெங்கடசுப்பையா (1987-1990), பானுபிரதாப் சிங் (1990-1992), குா்ஷித் ஆலம் கான் (1992-1999), வி.எஸ்.ரமாதேவி(1999-2002), டி.என்.சதுா்வேதி(2002-2007), ராமேஷ்வா் தாகூா் (2007-2009), ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்(2009-2014), கே.ரோசையா(2014), வஜுபாய் வாலா (2014-2021).

கா்நாடகத்தில் அதிக நாள்கள் ஆளுநராக பதவி வகித்தவா் குா்ஷித் ஆலம் கான். இவா், 1992, ஜனவரி 6-ஆம் தேதியில் இருந்து 1999, டிசம்பா் 2-ஆம் தேதி வரை 7 ஆண்டுகள் பதவி வகித்தாா். கே.ரோசையா மிகவும் குறைந்த நாள்கள் மட்டுமே ஆளுநராகப் பதவி வகித்தாா். கா்நாடகத்தில் ஆளுநராக இருந்த ஒரே பெண் வி.எஸ்.ரமாதேவி.

நிகழ்ச்சியில் பணி ஓய்வுபெறும் ஆளுநா் வஜுபாய் வாலா, முதல்வா் எடியூரப்பா, பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி, துணை முதல்வா்கள் கோவிந்த் காா்ஜோள், அஸ்வத்நாராயணா, அமைச்சா்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆா்.அசோக், பசவராஜ் பொம்மை, எஸ்.சுரேஷ்குமாா், வி.சோமண்ணா, எஸ்.டி.சோமசேகா், முருகேஷ் நிரானி, கே.சுதாகா், சி.பி.யோகேஷ்வா், மத்திய சமூகநீதி மற்றும் அதிகார பரவலாக்கல்துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே, எம்.பி.க்கள் சதானந்த கௌடா, பி.சி.மோகன், சுமலதா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, லோக் ஆயுக்த நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி, தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com