நீட், மேக்கேதாட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்: டி.ஆர். பாலு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அதிக மசோதாக்களை அறிமுகப்படுவது குறித்தும் நீட், பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசி பிரச்னை குறித்து கேள்வி எழுப்புவோம்.
திமுக மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு
திமுக மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு


புதுதில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அதிக மசோதாக்களை அறிமுகப்படுவது குறித்தும் நீட், பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசி பிரச்னை குறித்து கேள்வி எழுப்புவோம் என்று திமுக மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், வழக்கமாக ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் 17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடர் நாளை திங்கள்கிழமை (ஜூலை 19) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. 

கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடர் வழக்கம்போல் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக்கட்சி கூட்டம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 33 கட்சிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில்,அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

19 நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.

கரோனா தடுப்பூசி பிரச்னை, மேக்கேதாட்டு விவகாரம் குறித்தும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர்.

மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடக முதல்வரிடம் ஒரு மாதிரியும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரிடம் வேறு மாதிரியும் பேசுகிறார்கள். மேகேதாட்டு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வரும். கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்களை விவாதத்துக்கு எடுக்காமல் விடுவதை அனுமதிக்க மாட்டோம். 

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாகவும் கேள்வி எழுப்புவோம். பொருளாதார வீழ்ச்சி, விவசாய பிரச்னை உள்ளிட்ட 13 பிரச்னைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு நலன் குறித்து என்னென்ன பிரச்னைகளை எழுப்ப இருக்கிறோம் என்பதை கூட்டத்தில் தெரிவித்தோம் என்று  டி.ஆர். பாலு கூறினார். 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திமோடி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் மிகவும் மதிப்புமிக்கவை என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com