துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு

அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் வி.ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்


வேலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் வி.ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன், அதிமுக சார்பில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வி.ராமு உள்பட 15 பேர் போட்டியிட்டனர். இதில், 745 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் தமிழக நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.

இந்நிலையில், துரைமுருகன் வெற்றியை எதிர்த்தும், வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்திருப்பதாகவும் கூறி காட்பாடி தொகுதியில் மின்னணு வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்திட வேண்டும் என்று அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வி.ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வி.ராமு

காட்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கம் முதலே 8 -ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளர் வி.ராமு முன்னிலை வகித்து வந்தார். பிறகு 9-ஆவது சுற்று முதல் 20-ஆவது சுற்று வரை துரைமுருகன் மிகக்குறைந்த அளவில் முன்னிலை பெற்று வந்தார். பின்னர், 22 முதல் 25-ஆவது சுற்று வரை மீண்டும் ராமு முன்னிலை பெற்றார். இறுதியாக எண்ணப்பட்ட தபால் வாக்குகளின் அடிப்படையில் துரைமுருகன் 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகளில் பழுதடைந்தாகக் கூறி 5 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தன. தபால் வாக்கு எண்ணிக்கு முன் அவற்றில் 4 இயந்திரங்களின் வாக்குகள் மட்டும் எண்ணி முடிக்கப் பட்டன. பிறகு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் துரைமுருகன் 745 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அதேசமயம், எண்ணப்படாமல் இருந்த ஒரு வாக்கு இயந்திரத்தில் மொத்தம் 542 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதனால், அந்த வாக்கு இயந்திரத்தை எண்ணுவதற்கான அவசியம் ஏற்படாததால் அனைத்து வேட்பாளர்கள் சம்மதத்துடன் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அந்தவகையில், காட்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே சில குளறுபடிகளும் நிலவி வந்தது. இதனால், அதிமுக வேட்பாளர் ராமு தான் வெற்றி பெறக்கூடும் எனக் கருதப்பட்ட நிலையில் இறுதியாக துரைமுருகன் வெற்றி பெற்றது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. இதையடுத்து, துரைமுருகனிடம் அதிமுக வேட்பாளர் ராமு விலை போய்விட்டதாகவும் தகவல்கள் பரவின. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ராமு கடுமையாக மறுத்தும் வந்தார். இந்நிலையில், துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளரே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com