தஞ்சாவூர் அருகே பலத்த மழை: தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி; இருவர் காயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் திருவையாறு அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர். 
தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தேவகி.
தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தேவகி.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் திருவையாறு அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதில் திருவையாறு பகுதியில் 54 மி.மீ. மழையளவு பதிவானது.

அப்போது திருவையாறு அருகே மருவூர் பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளில் பி. கல்யாணசுந்தரம் (80) வீடு இடிந்து விழுந்தது. இதில் இவரது மகள் தேவகி (42) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கல்யாணசுந்தரம், சமுத்திரம் (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மருவூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவையாறு அருகே இடிந்து விழுந்த தொகுப்பு வீடு.

மருவூரில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு 18 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் பல வீடுகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பலர் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்குவது வழக்கம்.

இதேபோல, கல்யாணசுந்தரம் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை மழை பெய்ததால், அனைவரும் வீட்டுக்குள் சென்றனர். அப்போது மேற்கூரை இடிந்து விழுந்ததில், மூவரும் இந்த விபத்தில் சிக்கியது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் ​திருவையாறு அருகே இடிந்து விழுந்த தொகுப்பு வீடு.

சேதமடைந்துள்ள இந்த வீடுகளைச் சீரமைத்து தருமாறு பல ஆண்டுகளாக ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றும், இனிமேலாவது இந்த வீடுகளைச் சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com