முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
உசிலம்பட்டி அருகே வீடு வீடாகச் சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை
By DIN | Published On : 26th June 2021 11:53 AM | Last Updated : 26th June 2021 11:53 AM | அ+அ அ- |

வீடு வீடாகச் சென்று மாணவர் சேர்க்கை நடத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் எழுமலை மேலத்திருமாணிக்கம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று விதை நெல்லை தாருங்கள் விருட்சமாக்கி தருகிறோம் என்ற வாசகத்துடன் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.
கரோனோ பொதுமுடக்கம் காரணத்தினால் பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வியானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றானது சற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசானது 2021-22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்திட கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் பேரில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள மேலத்திருமாணிக்கம் கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பிரபு அலெக்சாண்டர் தலைமையில் மற்றும் சக ஆசிரியர்கள் கார்த்திக் பாண்டி, ராஜேஷ்குமார்,பாலமுருகன் ஆகியோர் இணைந்து விதை நெல்லை தாருங்கள் விருட்சமாக்கி தருகிறோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பதாகையுடன் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அரசு வழங்கும் இலவச நலத்திட்டங்கள், பள்ளியின் சிறப்பு அம்சங்கள் பற்றி அப்பகுதி பொதுமக்களிடம் எடுத்து கூறி மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்நிகழ்விற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாகிய சசிகலா,மாலதி, இந்திரா மற்றும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களாகிய மகாலட்சுமி, சித்ரா மற்றும் பலர் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு மாணவர் சேர்க்கைக்கு உறுதுணையாக இருந்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடன் அப்பள்ளியில் புதிதாக சேர்த்து வருகின்றனர்.
இது போன்று பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.