தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் ஜீவா காலமானார்

தமிழக பசுமை இயக்கத் தலைவர் ஈரோடு டாக்டர் ஜீவா (74) செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.
டாக்டர் ஜீவா
டாக்டர் ஜீவா


தமிழக பசுமை இயக்கத் தலைவர் ஈரோடு டாக்டர் ஜீவா என்ற வெ. ஜீவானந்தம் (75) செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கச் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாகப் பங்கேற்றுவந்தவர் டாக்டர் ஜீவா.

இடதுசாரி சிந்தனையாளரான இவருடைய தந்தை எஸ்.பி. வெங்கடாசலம் விடுதலைப் போராட்ட வீரர், தலைமறைவுப் போராட்டங்களில் ஈடுபட்டவர்.

திருச்சியில் பட்டப் படிப்பை முடித்த ஜீவா, பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். முடித்தார். பின்னர், சென்னையில் மயக்கவியல் சிறப்புப் படிப்பை முடித்தார்.

காந்திய - கம்யூனிச ஆர்வலரான டாக்டர் ஜீவா, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செயல்பட்டவர்.

இதயம்சார் உடல்நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்று ஓய்விலிருந்த டாக்டர் ஜீவா, திடீர் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஈரோட்டில் காலமானார்.

இறுதிச்சடங்கு புதன்கிழமை (மார்ச் 3) நண்பகல் 12 மணிக்கு ஆத்மா மின்மயானத்தில் நடைபெறவுள்ளது. 

மறைந்த ஜீவாவுக்கு இந்திரா என்ற மனைவியும் சத்யா என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

தொடர்புக்கு: 9842651081

எண்ணற்ற நூல்களை எழுதியுள்ள டாக்டர் ஜீவா, ஏராளமான நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கரோனா காலத்தில் தினமணி இணையதளத்தில் தொடர்ந்து எழுதிவந்தார் டாக்டர் ஜீவா.

பாரதி அன்பர்:

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜீவா, எம். கல்யாணசுந்தரம், தா. பாண்டியன், போன்றோருடன் டாக்டர் ஜீவாவின் தந்தை எஸ்.பி. வெங்கடாசலத்துக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் டாக்டர் ஜீவாவுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, பொதுவுடைமை தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

மக்களுக்கு மருத்துவ சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரோடு, தஞ்சை, புதுச்சேரி போன்ற இடங்களில் 7 மருத்துவமனைகளைத் தொடங்கினார்.

பாரதி மீது அளப்பறிய பற்று கொண்டிருந்த டாக்டர் ஜீவா, ஈரோட்டில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பாரதி விழாக்களை நடத்தியுள்ளார்.

குடிப்பழக்கத்தில் உள்ளவர்கள் மீண்டு வர ஈரோட்டில் மையத்தைத் தொடங்கி ஏராளமான குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். 

ஆங்கில மொழியில் சிறந்த 15-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். திப்புசுல்தான் குறித்து இவர் எழுதிய நூல் திப்புசுல்தான் மீதான பிம்பத்தை மாற்றியமைத்துள்ளது.

தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற அமைப்பு மூலம் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டவர். பொதுவுடைமை வாதி, சேவை மருத்துவர், சுற்றுச்சூழல் போராளி, இலக்கியவாதி, இசை ஆர்வலர் என பல்வேறு துறைகளிலும் ஈரோட்டின் முகமாக டாக்டர் ஜீவா இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com