காங். - திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம்; பாஜகவிற்கு வளர்ச்சியே நோக்கம்: மோடி

காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம் என்றும், பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசார மேடையில் உரையாற்றும் பிரதமர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசார மேடையில் உரையாற்றும் பிரதமர்

காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம் என்றும், பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

வெற்றி வேல், வீர வேல் என தமிழில் முழக்கமிட்டு பிரதமர் மோடி தனது பிரசார உரையைத் தொடங்கினார்.

தமிழகததின் மிகப் பழைமையான இந்த நகரத்துக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சுவாமி அகஸ்தீஸ்வரரின் அருளாசி அளவிடக்கறியது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அந்தக் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பகுதி மிகச்சிறந்த மனிதர்களான திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, தளபதி பொல்லான், காளிங்கராயர் ஆகிய மிகச்சிறந்த மனிதர்களைக் கொடுத்தபூமி. தமிழகத்தின் கலாசாரத்தில் இந்தியா பெருமை கொள்கிறது.

ஐ.நா.சபையில் உரையாற்றும்போது ஒரு சில தமிழ் வார்த்தைகளைக் கூறியதை நான் நினைவுகொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தக் குடும்பம் உங்களுடைய ஆசியை வேண்டி நிற்கிறது. தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக. நாங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்தை அடிப்படையாகவைத்து வாக்குகளைக் கேட்கிறோம்.

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கும் நேரத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் லட்சியத்தால் உத்வேகப்படுத்தப்பட்டு பெண்கள், ஏழைகள், அடித்தட்டுமக்களுக்கு சேவைகள் செய்ய உத்வேகம் பெற்று இருக்கின்றோம்.

தாராபுரம் பகுதியில் ரயில் சேவைக்காக நெடுங்காலமாக வலியுறுத்தி வருகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு கணிவுடன் பரிசீலனை செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கானது உங்களது பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

இந்தக்கூட்டணி வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைக்கிறது. ஆனால் மறுபுறம் திமுக-காங்கிரஸ் கூட்டணி குடும்ப வளர்ச்சிகான திட்டத்தை முன் வைக்கிறது. அடுத்தவர்களை அவமானப்படுத்துகின்ற, பொய் சொல்கின்ற பணிகளை காங்கிரஸ்-திமுக கூட்டணி செய்கிறது. தமிழகத்தின் பெண்களை இழிவு படுத்தும் வேலையை செய்கிற 2ஜி என்ற ஏவுகணையை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தியுள்ளனர். சில நாள்களுக்கு முன்பாக திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனியும் பெண்களை இழிவுபடுத்திப்பேசியுள்ளார்.

திமுக-காங்கிரஸ் கட்சிகளின் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்தும் கூற்றை கொண்டிருக்கிறது. பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவர்களை திமுக தலைமை கட்டுப்படுத்துவதில்லை.

திமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் நடத்திய வித்த்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.பெண்களின் வளர்ச்சிக்கு திமுக-காங்கிரஸ் தலைவர்கள் உறுதுணையாக இருந்தது இல்லை.

இதேபோல அவர்கள் கூட்டணியில்உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதில் சோனாமாலிக் என்ற பெண் உயிரிழந்தார். பெண்களை அவமானபடுத்தும் எண்ணம் கொண்டவர்கள் அந்த கூட்டணியினர். இவர்களின் நட்பு என்பது எப்போதும் பெண்களுக்கு எதிராகவே இருக்கின்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருக்கும் நாங்கள் ஆண்டாள், அவ்வையாரின் லட்சியத்தால் உத்வேகம் அடைந்து இருக்கிறோம். பெண்கள் சக்தியை மேம்படுத்தும் விதமாக திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது. 

கொங்கு நாட்டு மக்கள் இந்த பகுதிக்கு தொழிலையும், செல்வத்தையும், மரியாதையும் கொடுத்து கொண்டு இருக்கின்றீர்கள், கருணையும் கொண்டவர்கள் நீங்கள் என்பது எனக்கு தெரியும்.

கடந்த ஆண்டு நெருக்கடியான சூழலில் சக்திக்கு மீறி மக்களுக்கு  உதவியதை பார்த்தேன் இந்த நேரத்தில் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்போம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். எளிதாக தொழில் துவங்கும் நாடுகளில் நாம் வளர்ந்து  இருக்கின்றோம்.

இந்த பகுதியில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைக்கு வரும் போது அது பல்வேறு நன்மைகளை கொடுக்கும். அண்மையில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவ வாகனம் சமீபத்தில் எல்லைக்கு அனுப்பபட்டுள்ளது. சிறு,குறு தொழில் நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பு போன்றவை. தற்போது நிறைய பேர் தொழில் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரி தொடர்பான பல்வேறு முக்கிய முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகின்றது. அவர்கள் பணத்தை கட்டாயபடுத்தி பெறுவதில் கவனம் செலுத்துவர்கள். திருக்குறள் விவசாயிகளுக்கு மரியாதை கொடுத்து விவசாயத்தை மையபடுத்தி சொல்லி இருக்கின்றது.

விவசாயத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. சிறு விவசாயிகளை இடைத்தரகர்களிடம்  இருந்து காப்பாற்ற பல்வேறு நடவடிக்கள் செய்து வருகிறோம் வணக்கம் என்றார். 

இதில், பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசியதை பாஜகதேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தமிழில் மொழி பெயர்த்தார்.

இந்தக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com