கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி: ப. சிதம்பரம் பேட்டி

கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்

காரைக்குடி: கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள  எம்.பி அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக பணியமர்த்தப்பட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் கூட்டத்தில் சனிக்கிழமை கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: வெளியான கருத்துக் கணிப்புகள் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக மக்களின் மனநிலையே கருத்துக் கணிப்புகளாக அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

வாக்குகள் எண்ணிக்கை முடிந்து தமிழகத்தில் திமுக தலைமையில் நிச்சயமாக ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கரோனா தொற்று கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன. தடுப்பூசியே இல்லாமல் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எப்படி செயல்படுத்துவார்கள்?. மத்திய அரசு காங்கிரஸ் கட்சியின் யோசனைகள் எதையும் ஏற்பதில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு பிரதமர் பதில் தெரிவிப்பதில்லை. தடுப்பூசி குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிக்காமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் பதில் தெரிவிக்க வைக்கிறார். அதிலும் அமித்ஷா உரிய பதிலை தெரிவிக்காமல் முன்னாள் பிரதமரை வசைபாடியிருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை தட்டிக்கேட்பதற்கு பதில் மென்மையான வகையில் கடிதம் எழுதுகிறார். எனவேதான் கரோனா தொற்று கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தோல்வி அடைந்திருக்கின்றன.

கரோனா இரண்டாவது அலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தும் எதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. அதனால் இந்தியாவில் கரோனாவால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை கூட சரியாக வெளியாவதில்லை என்றார்.

பேட்டியின்போது சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப. சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ ராமசுப்புராம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com