தினமணியின் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் வெளியீடு

தினமணி நாளிதழின் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது.
தினமணியின் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் வெளியீடு
தினமணியின் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் வெளியீடு

தினமணி நாளிதழின்  சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது.

மதுரையில் பாரதியார் பணிபுரிந்த சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மலரை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் வெளியிட, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

விழா தொடக்கத்தில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் முன்னிலை வகித்துப் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா,  பாரதியின் பாதங்கள் உலா வந்த சேதுபதி பள்ளி வளாகத்தில், அவரது நினைவு நூற்றாண்டு விழா நடைபெறுவது தனிச் சிறப்பு. பாரதி மறைந்து 100 ஆண்டுகள் ஆனாலும்கூட, அவரைப் பற்றிய நினைவுகளை சிந்தித்துப் பார்க்க இந்த இடத்தில் மக்கள் இருக்கிறார்கள். அவர் விட்டுச் சென்ற சொற்களை அனுபவிக்க கூடிய மக்கள் இருக்கிறார்கள். இந்த  மண்ணுக்கு பாரதி உயிர் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளான். 

வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் என்று எண்ணிய கவிஞன் பாரதி. மனிதர்களில் ஆயிரம் ஜாதி என்ற வார்த்தையை ஒப்புவதில்லை என்று துணிந்து பாடியவன். மானுடம் எங்கெல்லாம் போராடுகிறதோ,  மனிதம்  எங்கெல்லாம் தத்தளிக்கிறதோ, அங்கெல்லாம் அந்தந்த காலத்தில் வாழப் போகிறவன்,  நிலைத்திருக்கப் போகிறவன், மனித சமுதாயத்திற்கு தேவையான உடமைகளையெல்லாம் அளித்துவிட்டு போனவன் பாரதி. அவனை நினைப்பதற்கும்,  அவனை வாழ்த்துவதற்கும், அவன் வழிநடப்பதற்கும் இந்த சமூகம் தயாராக உள்ளது.  பாரதிக்கு இந்த சமூகம் என்றென்றும் நன்றியுள்ளதாக இருக்கும் என்றார்.

விழாவுக்குத் தலைமை வகித்து மதுரை கம்பன் கழகத் தலைவர் சங்கர சீதாராமன் பேசியது:

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியாரின் கொள்கைகளைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது தினமணி நாளிதழ். நெருக்கடி நிலையின்போது சிறை செல்வதையும் பொருட்படுத்தாமல் தினமணி நாளிதழ் அரசை எதிர்த்துள்ளது. இன்று வரை நெஞ்சுரம் கொண்ட நாளிதழாக விளங்குகிறது.

பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பள்ளியிலேயே, அவரது நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி நடத்தப்படுவது சிறப்புக்குரியது. தினமணியிலும், தினமணி கட்டுரையிலும், பாரதி வாழ்ந்து வருகிறான். மொழிப் பற்று, நாட்டுப்பற்றுக் கொண்டவர்கள், பாரதியின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் குழந்தைகள் மூலமாக பாரதி வாழ்கிறான். அதனாலேயே பாரதி மறைந்துவிட்டான் என்பதை நம்ப முடியவில்லை. 

புலமையாளர்கள், கல்வியாளர்கள், கொடையாளர்கள் இருக்கும் வரை பாரதி  வாழ்வான்.  சமதர்மம், சமுதாய தர்மம், சமூக நீதி பேசுவோர் மூலம் பாரதி  வாழ்கிறான், மறையவில்லை. கல்வி மீதும், தேசத்தின் மீதும், தமிழ் மீதும் அக்கறை கொண்டவர்கள் வாழும் வரை பாரதி வாழ்வான்.

பாரதிக்கு நூற்றாண்டு விழா என்பது வரலாற்றுப் பதிவாக இருக்கலாம். அதனை ஏற்றுக் கொள்வோம். ஆனால் பாரதி நிலைத்து நிற்கிறான். தமிழ் வாழும் நாளெல்லாம் பாரதி வாழ்வான். பாரதியை நாம் சிந்திக்கிறோம். பாரதியின் வழி நடக்கிறோம். எனவே பாரதி மறையவில்லை, வாழ்கிறான் என்றார்.

நன்றி கூறிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் செயலர் எஸ். பார்த்தசாரதி,  பாரதி வாழ்ந்த மண்ணில் பணியாற்றுவதைப் பெருமையாக கருதுகின்றோம்  என தெரிவித்தார்.

சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய சோழவந்தான் அரசஞ்சண்முகனாருக்கு பதிலாக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி மகாகவி பாரதி பணியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து, 3 மாதங்கள் இப்பள்ளியில் பணியாற்றிய அவருக்கு குறைந்த அளவிலான ஊதியம் (8 அணா) வழங்கப்பட்டதாக ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

இதன் காரணமாக அவர் இன்றளவும் எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் வாழ்ந்து வருவதாகவே கருதுகின்றோம். இப்பள்ளியின் ஒவ்வொரு மண் துகளிலும் பாரதியின் பாதங்கள் பதிந்திருக்கும் என்பதில் எங்களுக்கு பெருமிதம் உண்டு. நெல்லையில் தொடங்கிய பாரதியின் வாழ்க்கை மதுரை, புதுச்சேரி, சென்னை போன்ற பல்வேறு நகரங்களுக்கு விரிவடைந்திருக்கலாம்.

விடுதலைப் போராட்ட உணர்வு, தமிழ்ப் பணி என்பது மட்டுமின்றிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை மதுரைக்கும், சேதுபதி பள்ளிக்கும் மட்டுமே உண்டு. மகாத்மா காந்தியடிகள், கவிக்குயில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஆகியோர் மட்டுமின்றி மகாகவி பாரதி கால் பதிந்த, வாழ்ந்த இத்தகு பெருமை மிக்க மண்ணில் பணியாற்றுவதைப் பெருமையாக கருதுகின்றோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com