அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத்தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கொங்கு மண்டலத்தின் ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் திருத்தலம் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த் திருவிழா சனிக்கிழமை வேத பாராயணம், பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

முன்னதாக கோயிலில் உள்ள பஞ்சலோகத்தாலான கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டது. யாக சாலை முன் மண்டபத்திலும், கொடிமரத்தின் முன்புறமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடி மரத்துக்கும், பலி பீடத்துக்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. கொடித் துணியில் அதிகார நந்தி, சூரிய, சந்திரன், சிவலிங்கம் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றறப்பட்டது.

மேலும் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திருவிழாவை ஒட்டி தினசரி சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.ஏப்.15ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 16 ஆம் தேதி பூதவாகன, அன்னவாகன, அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், 17 ஆம் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவை நடைபெறுகிறது.

18 ஆம்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றமும் நடைபெறுகிறது. 19ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம் யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன. 20ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக 21 ஆம் தேதி காலை அவிநாசியப்பர் திருத் தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 22ஆம் தேதி காலை மீண்டும் அவிநாசியப்பர் திருத் தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் நிலை சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

23 ஆம் தேதி காலை கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய திருத் தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெறுகிறது. 25ஆம் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவ நிகழ்ச்சியும், 26ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 27ஆம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக்காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com