சுடச்சுட

  
  pokemon

  சமீப காலமாக இணைய தளத்தில் பரபரப்பான தகவலாக உலா வந்து கொண்டிருப்பது போக்கிமான் கோ (Pokémon Go) என்ற செல்போன் விளையாட்டை பற்றியதுதான். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்போன்களில் இயங்கும் வகையில் இந்த விளையாட்டு வெளியாகியுள்ளது.

  உண்மையான காட்சிகளில் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட காட்சிகளையும் இணைப்பது ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality). இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுதான் போக்கிமான் கோ. இந்த விளையாட்டை, ஜிபிஆர்எஸ் வசதியுடன்கூடிய இணைய தொடர்பு மற்றும் கேமராவுடன் இணைந்த செல்போன்களில் மட்டுமே விளையாட முடியும்.


  india-pokemon-go_f3270fe8-547e-11e6-9aeb-9df9517d5433.jpg

  சாதாரணமாக, மறைத்து வைத்திருக்கும் ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நாம் அவற்றை தேடுவோம். இந்த போக்கிமான் கோ விளையாட்டும் அதுபோலத்தான். ஆனால் இந்த விளையாட்டில் உள்ள கதாபாத்திரங்களை சாதாரணமாக கண்களால் தேட முடியாது. செல்போனில் இந்த விளையாட்டு இயங்க ஆரம்பித்ததும் அதிலுள்ள ஜிபிஆர்எஸ், இணைய இணைப்பு, கேமரா ஆகியவை இயங்கத் தொடங்கிவிடும்.

  அப்போது கேமரா மூலம் அதன் திரையைப் பார்த்த படியே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இந்த விளையாட்டில் உள்ள கதாபாத்திரங்கள் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. இவ்வாறு கதைக்கு ஏற்றவாறு நமது நகரில் எந்த பகுதியில் இந்த கதாபாத்திரங்கள் உள்ளன என கிடைக்கபெறும் தகவலையடுத்து நாம் அவற்றைத் தேட (செல்போன் கேமரா மூலம்) வேண்டும். இவ்வாறு நாம் அவற்றைத் தேடி கண்டுபிடித்தால் அதற்கேற்ப அடுத்தக் கட்டத்துக்கு விளையாட்டைத் தொடரலாம்.

  இந்த விளையாட்டை அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஹாங்க் உருவாக்கியுள்ளார். போக்கிமான் கோ விளையாடுபவர்கள் ஓர் இடத்தில் நிலையாக இருக்க முடியாது. அதிலுள்ள கதாபாத்திரங்களைத் தேடி நடந்து செல்ல வேண்டியுள்ளதால் அது உங்களுக்கு ஒருவகையான உடற்பயிற்சி மாதிரிதான். மேலும் இவ்வாறு நாம் பயணிப்பதால் நமது வீடு அமைந்துள்ள பகுதியிலேயே நமக்குத் தெரியாத பல சுவாரசியமான இடங்கள் இதன் மூலம் தெரியவரும்'' என்கிறார் ஜான்ஹாங்க். இவர் கூகுள் மேப் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே அதற்காக அடித்தளமிட்டவர். பின்னர் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் மேப்பை உருவாக்கினார். அந்தத் தரவுகள் மூலம் உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் கைவசம் வைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் விளையாடும் வகையில் ஜப்பானின் போக்கிமான் நிறுவனத்துடன் இணைந்து இந்த போக்கிமான் கோ விளையாட்டை உருவாக்கியுள்ளார்.எனவேதான் தங்கள் நாட்டை பற்றிய தகவல்கள், ரகசியங்களை தங்களுக்கு எதிரான நாடுகள் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாகக் கருதி சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் போக்கிமான் கோ வெளியாகியுள்ளது. வெளியான சில தினங்களிலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டது இந்த போக்கிமான் கோ.

  போக்கிமான் கோ, நமது செல்போனின் ஜிபிஆர்எஸ் மற்றும் கடிகாரத்தை வைத்து நாம் இருக்கும் இடத்தைக் கணிக்கிறது. அதற்கேற்ப போக்கிமான் கதாபாத்திர பொம்மைகளை மாய உலகில் உலவ விடுகின்றது.நியூயார்க் நகரில் இந்த விளையாட்டை விளையாடியபடி அதிலுள்ள கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்குள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் கூடிய கூட்டத்தால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இதை விளையாடியபடியே குனிந்த தலை நிமிராமல் சென்றவர்களிடம் திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. தடை விதிக்கப்பட்ட பகுதிகளிலும் புகுந்து கதாபாத்திரங்களைத் தேடியதால் பலர் போலீஸாரால் எச்சரிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. விரைவில் இந்தியாவிலும் போக்கிமான் கோ விளையாட்டு வெளியிடப்படவுள்ளது. இது, டேட்டா எனப்படும் இணைய இணைப்புக்கு கட்டணம் செலுத்தி பலரை போக்கிரிமான் ஆக்குவதற்கான வழியாகத்தான் தெரிகிறது.
   

   - எஸ்.நாராயணன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai