Enable Javscript for better performance
தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-1- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 1

  By M.A. சுசீலா  |   Published On : 02nd September 2016 01:00 AM  |   Last Updated : 02nd September 2016 06:25 PM  |  அ+அ அ-  |  

  in_front_of_maskwa

  ’ஆழும்நெஞ்சகத்து ஆசை இன்றுள்ளதேல்

  அதனுடைப்பொருள் நாளை விளைந்திடும்’’

  - இது என் ஆசான் பாரதியின் வாக்கு. கவிஞர்களின் உள்ளொளியும் தீர்க்க தரிசனமும் ஒருநாளும் பொய்ப்பதில்லை. ரஷ்யா செல்ல வேண்டும் என்ற என் கனவு மெய்ப்பட்டதும் அது போலத்தான்.

  வாசிப்பின் சுவையை நுகரத் தொடங்கிய பாலிய நாட்களில், அதாவது ‘60-களுக்கு முற்பட்ட எங்கள் தலைமுறைக்கு எளிதாகக் கிடைத்தவை மலிவு விலையில் கண்கவர் படங்களோடு  கிட்டிய  சோவியத் பிரசுரங்களும் குட்டிக்கதைகளும்தான். அப்போது 'சோவியத் லேண்ட்’ என்னும் நாளிதழும் பள்ளி நூலகத்துக்கு வந்து கொண்டிருந்தது... வழுவழுப்பான அட்டையுடன் வண்ணப்படங்கள் தாங்கியபடி சோவியத் நாட்டின் கலை, கலாச்சாரத் தேடல்களை, விண்வெளிப் பயணத்துக்கான ஆயத்த  முயற்சிகளை சித்தரிக்கும் அந்த இதழும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது, குடும்பத்தில் - ஒற்றை ஒரே  குழந்தையாக - புத்தக வாசிப்பைத் தவிர வேறு பொழுது போக்குகள் அற்ற பெண்ணாக வளர்ந்து வந்த என்னை மேற்சொன்ன கதைகளும் இதழ்களும், ''ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’’ என ஜார் மன்னனின் வீழ்ச்சியை சொல்லும் பாரதி கவிதையும் ஒரு கனவுலக சஞ்சாரத்தில் ஆழ்த்தியபடி சோவியத் ரஷ்யா குறித்த கனவை ஆழமாக வேரூன்ற வைத்திருந்தன.

  வயதும், வாசிப்பு  அனுபவமும் முதிர்ந்து டால்ஸ்டாய், அலெக்ஸீ டால்ஸ்டாய், கார்க்கி, கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் என என் எல்லைகள் விரிந்துகொண்டே போன தருணத்திலேதான் ரஷ்ய நாவல் பேராசானும்,.உலக இலக்கியத்தின் பிதா மகன்களில் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவருமான ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மகத்தான நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத் தமிழாக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. தமிழ் வாசகர்கள் அதற்கு அளித்த வரவேற்பும் அங்கீகாரமும் தொடர்ந்து அவரது மிகப்பெரும் நாவலான அசடனை மொழியாக்கும்  பேற்றையும் அளித்தது.

  மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களைத் தேடிக்கண்டடைந்து மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி,  ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி. அவரது படைப்பை   நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்த்த கணங்கள் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். அந்த வேளைகளில் அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிந்ததும்... அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிந்ததும் அரிய அனுபவங்களாக வாய்க்க அவரது குறுங்கதைகள் சிலவற்றையும் தமிழாக்கி வெளியிட்டேன். தொடர்ந்து அவரது வேறு சில படைப்புகளைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில் முனைந்திருக்கும் இந்த வேளையில் - கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீராத தாகம் ஒன்று என்னை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது.

  தஸ்தயெவ்ஸ்கி வாழ்ந்த மண்ணில் ஒரு நாளாவது கால்பதிக்க வேண்டும்...அது வரை மானசீகமாக உடன் பயணித்த அவரது பாத்திரங்களான ரஸ்கோல்னிகோவும் சோனியாவும் மர்மெலோதோவும் ரஸுமுகீனும் குடியிருந்த இருண்ட எலிவளை போன்ற குடியிருப்புக்களையும்... அவர்களும் அசடன் மிஷ்கினும் சுற்றித் திரிந்த மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வீதிகளையும் தோட்டங்களையும் ஆற்றுப்பாலங்களையும் காண வேண்டும்  என்னும் தீராத அவா என்னைப்பற்றிக்கொண்டது.

  2009-இல் ஐரோப்பிய நாடுகளுக்கும், 2012-இல் இலங்கைக்கும், 2014-இல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கும் சென்னையிலுள்ள ஒரு சுற்றுலாக் குழுவோடு சென்று  பழகியிருந்ததால் அவர்களின் ரஷ்யப்பயணத் திட்டத்தை எதிர்நோக்கியபடி இருந்தேன். மிகக்கச்சிதமான திட்டமிடல், செல்லும் இடங்கள் குறித்து மெய்யான கல்வியாளர்களின் அக்கறையோடு அளிக்கும் விரிவான விளக்கங்கள், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்திய உணவை அதிலும் சைவ உணவைக் கட்டாயம் அளித்துவிடும் கரிசனம் ஆகியவற்றால் அந்தக்குழுவுடன் என்னைப் பிணைத்துக்கொள்வதே என் மன அமைப்புக்கு ஏற்றதாக இருந்தது. நான் நினைத்தது போலவே ஜூலை மாதத்துக்காக அவர்கள் திட்டமிட்டு வகுத்திருந்த ரஷ்ய மற்றும் ஸ்கேண்டினேவியப் பயணத் திட்டம் ஆண்டின் தொடக்கத்தில் என்னை வந்தடைந்தது. ரஷ்யாவில் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இரு இடங்கள் மட்டுமே அந்த சுற்றுலாக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவை; நான் காண விரும்பியவையும் அவையே என்பதால் என்னையும் பயணத்துக்குப்பதிவு செய்து கொண்டேன்.

  பிற பணிகள் காரணமாக ரஷ்யாவுடன் மட்டுமே திரும்ப எண்ணிய என்னைப்போலவே வேறு சில பயணிகளும் அமைந்து போனதால் மொத்தம் 16 பேர்  (சுற்றுலாவை வழி நடத்தும் தலைமையையும் சேர்த்து) அடங்கிய எங்கள் குழுவில் நாங்கள் ஐந்து பேர் ரஷ்யாவுடன் திரும்புவதென்றும் பிறர் செயின்ன் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து பயணத்தை நார்வே நோக்கித் தொடர்வதென்றும் முடிவாயிற்று.

  ஜூலை 23 அதிகாலை சென்னையிலிருந்து துபாய் புறப்படும் எமிரேட்ஸ் விமான சேவையில் துபாய் சென்று, [துபாய் நேரப்படி காலை 6.40], அங்கிருந்து துபாய் நேரம் 9 40-க்குக் கிளம்பும் அதே விமான சேவையில் ரஷ்ய நேரம் பிற்பகல் 2 மணியளவில் மாஸ்கோ விமான நிலையத்தை வந்தடைந்தோம்.

  குடியேற்றச் சடங்குகள்... பரிசோதனைகள் இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் மனம் அதன் போக்கில் கிளர்ச்சியுடன் தனியே வேறொரு பக்கம் உலவிக்கொண்டிருந்தது. புரட்சியின் விளைநிலத்தில்தான்.. ரஷ்யாவில்தான்  இருக்கிறோமா என்று. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மனம் நெகிழ்ந்தும் குழைந்தும் கிடந்தது.

  மாலை 4 மணிக்கு விமான நிலையத்திலிருந்து தங்கும் இடம் நோக்கிய ஒரு மணி நேரப் பயணம். மாஸ்கோவின் மாஸ்க்வா ஆற்றில் ஆறு மணிக்குப் படகுப் பயணம் என்று அன்றைய திட்டம் வகுக்கப்பட்டிருந்ததால் விடுதி சென்ற மறு நொடியே பயண மூட்டைகளை மட்டும் வைத்து விட்டுக் கிளம்பியாக வேண்டும் என்ற வழிகாட்டல் பிறக்க, நாங்களும் அவ்வாறே ஆயத்தமானோம்.

  நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஸிமுட் ஓட்டலிலிருந்து மீண்டும் ஒரு பேருந்துப் பயணம். வழி நெடுக விரிந்து சென்ற மாஸ்கோவின் காட்சிகள்!! மக்கள் நடமாட்டம் குறைவாக... வாகனப்போக்கு வரத்துக்களுமே கட்டுக்குள் இருந்த, அழகும், தூய்மையும் நிறைந்த நீண்ட அகன்ற சாலைகள்... சாலைகளின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்கள்.,குடியிருப்புக்கள், ஆங்காங்கே பசும்புல்வெளியோடு தோட்டங்கள் (புலிவார்ட் என்று சொல்லப்படுபவை  அவைதான்) தனி ஒரு வீடாக... அடுக்குகள் அற்ற தனி அமைப்பாக எந்த ஒரு சின்னக் கட்டிடத்தைக்கூட செல்லும் வழியின் ஓரிடத்திலும் காணக்கூடவில்லை.

  மாஸ்கோவிலுள்ள மிக அழகிய சாலைகளில் ஒன்றான ‘வளைவான தோட்டம்’ என்ற பொருள்படும் Garden Ring என்னும் சாலை வழி சென்றோம், 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அந்தப்பாதை, 15 சதுக்கங்களையும் 17 கிளைச்சாலைகளையும் உள்ளடக்கியது, அதன் வழியே வாகனங்கள் வழுக்கிச்செல்லும்போது மாஸ்கோவின்  நவீன கட்டிடக்கலைகளைக் காணக்கிடைக்கும் வாய்ப்பு அரியது. அந்தக் கட்டிட அமைப்புக்களை ரஷ்ய நாட்டின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் திட்டமிட்டு உருவாக்கியதால் அது ஸ்டாலினியக் கட்டிடக்கலைப்பாணி என்றே அழைக்கப்படுவதாக உள்ளூர்ப் பெண் வழிகாட்டி டேன்யா எங்களிடம் சொல்லிக்கொண்டு வந்தார்.

  மாஸ்க்வா நதி தீரத்தை நாங்கள் நெருங்கும்போது மாலை ஆறு மணிக்கும் மேலாகி விட, எங்கள் படகுப்பயணம் 8 மணிக்குத் தள்ளி வைக்கப்பட்டது, பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு, ஐந்து கிலோ மீட்டர் நடந்த பிறகே  நாங்கள் படகுத் துறையை அடைய முடியும் என்பதால் அந்த நடைப்பயணத்துக்கும் கூட  அத்தனை நேரம் தேவையாகத்தான் இருந்தது.

  மாஸ்க்வா ஆற்றின் படகுப்பயணத் துறை அலங்காரத் தோரண வாயிலோடும்... தொடந்து நீண்டு சென்ற கார்க்கி தோட்டத்தோடும் ஏழு மணி அளவில் கண்ணில்  பட்டபோது, இது ரஷ்யாவின் கோடை காலம் என்பதால் மாஸ்கோ வானத்தின் சூரியன் மறைந்திருக்கவில்லை...

  உலகப்புகழ் பெற்ற  'தாய்’ (THE MOTHER) நாவலைத் தந்த  மாக்ஸிம் கார்க்கியின் பெயரால் பசுமையான பரந்த புல்வெளிகளோடும் பூந்தோட்டங்களோடும் நீரூற்றுக்களோடும் அமைந்திருந்த கார்க்கி தோட்டத்தைக் கடந்து செல்லும்போது கண்ணில் காணும் காட்சிகள் ஒருபுறம் ஈர்த்தாலும்கூட கண்ணில் காணாமல் மனதை மட்டுமே  தன் எழுத்தால் தொட்ட அந்த மாபெரும் எழுத்தாளனின் நினைவிலேயே மனம் சுழன்று கொண்டிருந்தது.

  மாஸ்குவா ரிக்கா, மாஸ்கோ ஆறு (Moscow River) ஆகிய பல பெயர்களால் அழைக்கப்படும் மாஸ்க்வா நதி,  மாஸ்கோ நகரின் பெயருக்குக் காரணமாக அமைந்திருப்பது. மாஸ்கோ நகரின் மேற்கில் கிட்டத்தட்ட 90 மைல்கள் தொலைவில் உற்பத்தியாகி, மாஸ்கோவை ஊடறுத்தபடி சுமோலியான்ஸ்க், மற்றும் மாஸ்கோ வட்டம்ஆகியவை வழியே  இந்நதி செல்கிறது. மாஸ்கோவின் தென்கிழக்கில் 70 மைல்கள் தொலைவில் வோல்கா ஆற்றின் கிளைகளில் ஒன்றான ஓக்கா ஆற்றில் கலந்து, பிறகு  காஸ்பியன் கடலில் கலக்கிறது. 503 கி.மீ. நீளமும் 155 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நதியின் பிற கிளை நதிகள், ரூஸா, இஸ்த்ரா, யாஸா, பாக்ரா போன்றவை.

  பொதுவாகக் குளிரும் பனியும் தாங்க முடியாத காலகட்டங்களான நவம்பர் டிசம்பர் மாதங்களில் உறைநிலைக்குச் சென்றுவிடும் இந்த ஆறு, மார்ச் மாதத்துக்குப் பிறகே படிப்படியே உருகி நீராக ஓடத் தொடங்குகிறது. அதனால் கோடைகால ஆற்று வெள்ளம் அந்த மக்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

  வசதியான பெரும்படகு ஒன்றில் எட்டு மணியளவில் தொடங்கிய எங்கள் பயணம் இரவு பத்து மணி வரை நீண்டு செல்ல மாஸ்கோவின் கலையழகு மிகுந்த கட்டிடங்களை முதலில் அந்திச்சூரியனின் செவ்வொளியிலும், இரவு 9 மணிக்கு மேல் தீபங்கள் ஒளிரும் திகட்டாத பேரழகிலும் காண வாய்த்தது. இருந்தாலும், கட்டிடங்களின் செயற்கை அழகை விடவும் ஆற்றுப்பயணமும், அந்தி மாலையும், மாலை மறைந்து இரவு படர்ந்ததும் தழுவிக்கொண்ட சில்லிப்பான குளிரும் என்றும் நினைவில் இருப்பவை. புதுதில்லி போன்ற வட இந்திய நகரங்களில் கோடைகால ஆதவன் ஏழு ஏழரை மணி வரை நீடிப்பதைக் கண்டிருந்தபோதும் இங்கே எட்டு மணிக்குக்கூட மாலை ஆறு மணி போல இருந்ததும், இரவு 8.30-ஐ ஒட்டியே அஸ்தமனம் நிகழ்ந்ததும் கல்வெட்டு ஞாபகங்கள். பயணம் முடியும் நேரத்தில் பீட்டர் பேரரசனின் உருவம் ஒளியூட்டப்பட்டு தனிப்படகு ஒன்றில் எடுத்துச்செல்லப்படுகிறது..

  இங்கே மாஸ்கோவிலேயே  வாழும் மக்கள், இந்தக்கோடை கால ஆற்றின் இனிமையை ரசித்தபடி நதிக்கரைப்புல் மேடுகளில் தங்கள் துணையோடும், குடும்பத்தோடும், நட்போடும், சுற்றத்தோடும்  நின்றும், இருந்தும்,  கிடந்தும், நடந்தும், ஓய்வாகப் பொழுதைக் கழித்தபடி தங்களை இலகுவாக்கிக்கொள்கிறார்கள். படகுகளில் பயணித்தபடி இசைக்கருவிகளை மீட்டி நடனமாடி நேரம் கழிக்கிறார்கள். ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் ஆற்றுப்பயணம் செய்தபோதும்கூட எதிர்ப்பட்ட காட்சிகள் இவை. நிற்கக்கூடப் பொழுதில்லாமல் தேடிச்சோறு நிதம் தின்பதில் மட்டுமே காலம் கழிக்கும் பலரும் அயல்நாட்டினரிடமிருந்து பயின்றாக வேண்டிய பாடம் இது.

  இரவு 10 மணிக்கு மேல் படகை விட்டு இறங்கி மீண்டும் கார்க்கி தோட்டம் வழியே பேருந்தை நோக்கி நடக்கும் வேளையிலும் நீரூற்றின் அருகே மக்கள் விளையாடி ஆனந்தித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

  நாம் கோடையிலே இளைப்பாற வழி தேடி அலைகிறோம்.

  பனி உருகி வெண் நீராய் ஓடும் இந்த மண்ணிலோ கோடை ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது என்று எண்ணியபடியே அஸிமுட் விடுதியை வந்டைந்தபோது, அதன் ஒரு பகுதியில் அமைந்திருந்த இந்திய உணவகத்தில் நம் நாட்டு உணவு வகைகளுடன் தமிழ்க்குரல் ஒன்று எங்களை வரவேற்றது. நிறைவாக உண்டு முடித்து உறக்கத்தைத் தழுவியபோது மணி நள்ளிரவைத் தொட்டிருந்தது.

  (தொடரும்)


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp