விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் பிரம்மாண்ட சிலைகள்! 

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக, பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் பிரம்மாண்ட சிலைகள்! 

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக, பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவை விற்பனைக்காக வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
 

விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 

சதுர்த்திக்காக, பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

குறிப்பாக, விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவில்பட்டு கிராமத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பாரம்பரிய மண்பாண்டத் தொழிலாளர்கள் குழுவினர் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுக்களில் பட்டதாரி இளைஞர்கள் உள்பட 500 தொழிலாளர்கள் உள்ளனர். அந்தக் கிராமம் முழுவதும் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாராகி காட்சி அளிக்கின்றன.

இதுகுறித்து சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் பலராமன், விஜயகாந்த், விஷ்ணுராஜ் உள்ளிட்டோர் கூறியதாவது:
 

பாரம்பரியமாக இரண்டு தலைமுறைக்கும் மேலாக விநாயகர் சிலைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம். சிலை தயாரிப்புப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கின. முதலில் சிலைகளுக்கான கை, கால், தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு, பின்னர் அந்த பாகங்களை இணைத்து, உலர்த்தி சிலைகளை உருவாக்குகிறோம். விநாயகர் சிலைகள் மரவள்ளிக்கிழங்கு மாவு, காகிதக் கூழ் போன்ற கலவையால் தயாராகின்றன.
 

பல வடிவங்களில்...: தற்போது விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, ரசாயனக் கலவையற்ற (வாட்டர் கலர்) வர்ணம் பூசும் பணி தொடங்கியுள்ளது. நிகழாண்டு அலங்கார வளைவுகளுடன் கூடிய விநாயகர், சிவன் பார்வதியுடன் விநாயகர், அரக்கனை வதம் செய்யும் விநாயகர், சூரசம்கார விநாயகர், மோட்டார் சைக்கிள் ஓட்டும் விநாயகர், மருத்துவம் பார்க்கும் விநாயகர், மாட்டு வண்டியில் செல்லும் விநாயகர், கந்தனுடன் இணைந்த விநாயகர், குபேர விநாயகர், கருட வாகன விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 

இந்த சிலைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, பவானி, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன. 3 அடி முதல் அதிகபட்சமாக 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள், அளவுகளுக்கேற்ப ரூ.1,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன என்றனர்.
 

கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், விநாயகர் சிலைகளை தயாரித்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு சிலைகள் தயாரிக்கும் பணி தாமதமாகி வருவதாக என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
 

இதேபோல, அரசூர், திண்டிவனம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com