2019 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இது!

போட்டியில் கலந்து கொண்ட 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 48,000 பேரைக் கடந்து இந்த விருதை வென்றுள்ளார் யோங்க்யூங். 
The Moment
The Moment

இந்தப் புகைப்படத்தைப் பார்த்தீர்களா? கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த புகைப்படம் தான் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராபர் விருதினை சீனாவைச் சேர்ந்த புகைப்படக்காரர் யோங்க்யூங் பவோவிற்கு பெற்றுத்தந்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி இந்த விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து உலகெங்கும் இருந்து பாராட்டுகளும், மெச்சுதல்களும் குவிந்து வருகின்றன இந்தப் புகைப்படத்திற்கு.

திபெத்திய நரியும், அணிலும் இருக்கும் இந்தப் புகைப்படம் எந்த வகையில் சிறந்ததாகக் கருதப்படுகிறது என்றால், புகைப்படத்தை நன்கு உற்றுப் பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கே மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும். தனது இரையைக் கண்டதும் நரி பதுங்கியவாறு அதைப் பிடித்துண்ண ஆயத்தமாகிக் கொண்டிருப்பதும், தன்னைக் கொல்லவிருக்கும் எதிரியைக் கண்டதும் அந்த குட்டி அணிலின் கண்களில் தெரியும் அதிர்ச்சியும் மிகது துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது இந்தப் புகைப்படத்தில். இதை ஆக்‌ஷன் ஃபோட்டோகிராபி என்பார்கள். விலங்குகளின் வாழ்வைப் படம் பிடிக்கும் போது அவற்றின் வாழ்க்கை முறையை அணு அணுவாகப் பதிவு செய்வதென்பது மிகக்கடினமான காரியம். ஏனெனில், விலங்குகள் மனிதர்களைப் போல புகைப்படங்கள் என்றதும் உடனே... தலைமுடியை ஒதுக்கிக் கொண்டோ, அல்லது தோகை முடியை சரி செய்து கொண்டோ புகைப்படம் எடுப்பவர்களுக்கு போஸ் தந்து கொண்டிருப்பவை அல்ல. அவற்றின் வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடி பதிவு செய்ய வேண்டுமென்றால் நாள்கணக்காக, மாதக் கணக்காக காடுகளில் காத்திருக்க வேண்டும். அப்படித் தவம் கிடந்தால் மட்டுமே இத்தகைய அரிய பதிவுகள் சிக்கக் கூடும்.

அதிலொன்று தான் இந்தப் புகைப்படம். ‘தி மொமெண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் நரியைக் கண்டு பீதியில் அதிர்ந்து நிற்கும் அணிலின் உணர்வுகள் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. இப்படியான மிக அரிய தருணங்களைப் பதிவு செய்வது தான் கானுயிர் புகைப்படக் கலையின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. இந்தப் புகைப்படத்தை விருதுக்குரியதாகத் தேர்வு செய்த லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆய்வுக் குழுத் தலைவர் ராஸ் கிட்மான், ‘மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று இது, இதைத் தக்க தருணத்தில் பதிவு செய்த செயல் பாராட்டுக்குரியது. அதற்குத் தான் விருதளிக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.

விருது வென்றுள்ள இந்த புகைப்படமானது லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொண்ட 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 48,000 பேரைக் கடந்து இந்த விருதை வென்றுள்ளார் யோங்க்யூங். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com