Enable Javscript for better performance
உமா பார்வதியின் ‘நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள்’ நாவல் அறிமுகம்!- Dinamani

சுடச்சுட

  

  உமா பார்வதியின் ‘நித்தியத்தின் சாலையில்  மூன்று இடை நிறுத்தங்கள்’ நாவல் அறிமுகம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 04th May 2019 03:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  0000_uma_shakthis_book_wrapper

   

  நாவலைக் கையில் எடுத்தாலே போதும் முடித்து விடலாம் என்பது மாதிரியான குறுநாவல் ரகப் படைப்பு. ஆனாலும், நீங்கள் அரிதாகப் புத்தகங்கள் வாசிப்பவர்கள் எனில் உங்களுக்கு இந்த நாவலை வாசித்து முடிக்க மூன்றல்ல ஏழெட்டு இடைநிறுத்தங்கள் கூடத் தேவைப்படலாம். ஏனெனில், உமா பயன்படுத்தி இருக்கும் வாக்கியப் பிரயோகங்கள் ஒரு கவிதை நூலுக்குரியவை. அருமையான நீண்ட கவிதையொன்றை நாவலாக்க முயன்றால் எப்படி இருக்கும்? அப்படித்தானிருக்கிறது நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள். வாசித்த வரையில் நான் இந்தக் கதையை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றால், ஆராதனா எனும் நாயகியின் வாழ்க்கை மூன்று இடை நிறுத்தங்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த மூன்று இடை நிறுத்தங்கள் யாரென்றால்? அவர்கள், அவளது வாழ்வை நிர்ணயிக்கத் தலைப்படும் மூன்று ஆண்களே! 

  ஆராதனாவின் வாழ்வில் அவளது அப்பாவையும் சேர்த்து மூன்று ஆண்கள் ஆளுமை செலுத்த முற்படுகிறார்கள். முற்றிலும் கவித்துவமான நியாயங்களுக்குள் அமிழ்ந்து யதார்த்தத்துக்கும் கவித்துவத்துக்கும் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆராவால் எப்போதும் எவரது ஆளுமைக்கும் வளைந்து கொடுக்க முடிவதில்லை. அவள் தனக்குள் தன்னைத் தொலைக்கும் ரகமென்பதால், அந்த மூன்று ஆண்களுடனான வாழ்க்கையை எப்படி லாவகமாக கையாள முயல்கிறாள் என்பதே இந்தக் கதையில் நாம் காணக்கூடிய வாழ்க்கையாகிறது. 

  ஆராவுக்கு முதலில் ஒரு திருமணம் நடக்கிறது. ஆனால், அந்த உறவு ஆராவின் ஆன்மாவை சித்ரவதைக்குட்படுத்துவதாக அமைந்து விடுவது அவளது தவறெனச் சொல்ல முடியாது. இந்த சமூகத்திற்கு அந்தப் புரிதல்கள் இல்லாது போனாலும் ஆராவின் அப்பாவுக்கு அதுகுறித்த புரிதல் இருந்த வகையில் அதுவே ஆராவுக்குண்டான ஆசுவாசம் எனலாம். எப்படிப்பட்ட ஆணையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து விடலாம், ஆனால், உண்டான முதற் கருவை அழிக்க நினைப்பவனுடன் தொடர்ந்து வாழ்தல் தன்னைத் தானே மீள முடியா அவமானத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் செயல் எனக்கருதும் ஆரா, அந்த திருமண பந்தத்தில் இருந்து வெளிவந்து தனது பெற்றோருடன் வாழத் துவங்குவதுடன் தன் வாழ்வின் முதல் இடை நிறுத்தத்தை வெற்றிகரமாகக் கடக்கிறாள்.

  ஆராவுக்கு அம்மாவும், மூத்த சகோதரியும் கூட உண்டு. ஆனால் அப்பாவே அவளது பாத்திரப் படைப்பில் முக்கியமான ஆளுமை. ஓவியரான ஆராவின் அப்பா கதாபாத்திரம் மிக அழகியலுடன் விவரிக்கப்பட்டிருப்பது ஆராவுக்குள்ளிருக்கும் அவர் மீதான அன்பை பறைசாற்றுகிறது. அம்மாவையும், சகோதரியையும் பறிகொடுத்து விட்டு ஒற்றைத் துணையான அப்பாவையும் பாண்டிச்சேரியில் தனித்து வசிக்க விட்டு விட்டு வாழ்வியல் காரணங்களுக்காக சென்னையில் தனித்து வசிக்கும் பெண்ணாக ஆரா அறிமுகமாகும் போதே அவள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் எவரொருவருக்கும் வந்தாக வேண்டும். வராவிட்டால் நீங்கள் கல் மனதுக்காரர். அப்பாவின் மீதான ப்ரியங்கள் நிறைந்து தழும்பினாலும் அப்பாவுடனும் ஒற்றை மகனுடமே வாழ்க்கை முற்றுப்பெற்றாக வேண்டிய நிர்பந்தமில்லையே! 

  அப்பாவின் தனிமை குறித்து கசியும் உள்ளம் அகத்தனிமை குறித்தும் கசிந்துருகும் தருணத்தில் அறிமுகமாகிறான் வருண்.

  அவனே ஆராவின் மூன்றாவது இடைநிறுத்தம்.

  முதல் இடை நிறுத்தமான சண்முகத்தை கடக்க முடிகிற ஆராவால், வருணைக் கடக்க முடியாததற்குக் காரணம், அவன் ஆராவின் ஆன்மாவைச் சித்திரவதை செய்வதற்குப் பதிலாக அப்படியே கண்காணாது கடத்திச் சென்று விடுகிறான். கணவனே ஆயினும், பெற்ற மகளை, பால் மணம் மாறாப் பருவத்தில் தூக்கிச் சென்றால் அதற்குப் பெயர் கடத்தல் தானே! குழந்தையை ஆராவிடமிருந்து பிரித்தெடுத்துச் செல்வதும் அவளைக் கொலை செய்வதும் ஒன்று தான். வருண், ஆராவுக்கு அப்படியொரு தண்டனையை ஏன் அளித்தான்? அத்தனைக்கு ஆரா செய்தது என்ன? ஒரு பெண் சுயமரியாதையுடன், தன்னிச்சையாக, தன் கனவு சார்ந்த விருப்பங்களுடன் வாழ்வது அத்தனை பெரிய தவறா? அதற்கு இப்படியொரு தண்டனை அளிக்கக் கூடியவனை நாவலின் இறுதியில் ஆரா மன்னித்து ஏற்றுக் கொள்ளும் முடிவில் இருப்பதை கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. நல்ல வேளை அது நிஜமில்லை. கதைப்படி ஆராவின் கற்பனை. அதையே சகிக்க முடியவில்லை எனினும் ஆரா அந்த முடிவில் இருப்பது பெண்களின் மன்னிக்கும் குணத்திற்கான எல்லையற்ற வரம்புக்கு ஒரு நல் உதாரணம். அதனாலன்றோ இத்தகைய ஆண்களால் எவ்வித குற்ற உணர்வுமின்றி இன்னும் ஜீவித்திருக்க முடிகிறது?!

  நாவலுக்கான விமர்சனக் கூட்டமொன்றை யாவரும் பதிப்பகத்தார் சமீபத்தில் நடத்தியிருந்தனர். அதில் நானும் ஓரிரு வார்த்தைகள் பேசினேன். ஆனால் விரிவாகவும் தெளிவாகவும் இருவர் பேசினர். அதிலொருவர் எழுத்தாளர் சைலபதி. அவர் பேசியதிலிருந்து கதை ஒருபக்கச் சார்பாக வருணை மட்டுமே முழுக் குற்றவாளியாக்கப் பார்க்கிறார் ஆரா என்பதாக இருந்தது. அவரது புரிதலின் படி, வருண் ஒரு படைப்பாளியாக கதையில் சித்தரிக்கப்படுவதால், படைப்பாளிகளுக்கான இலக்கணம் வழுவாது சர்வ சுதந்திரமாக அவன் இருப்பதாகவும் அதைத் தவறென்று எப்படிச் சொல்வது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அது சரி, படைப்பாளிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது யார் போட்ட சட்டம்?! மனைவியைக் கைவிட்டு விட்டு, மூன்று மாதக் குழந்தையுடன் பாரீஸுக்கு ஓடுவது தான் படைப்பாளிக்கான இலக்கணமா? என்று கேள்வி எழுகிறது. காரணம் ஆரா ஒன்றும் அடங்காத மனைவி இல்லை. அவளை ஏன் இந்த இரு ஆண்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பது தான் நாவலை வாசித்து முடிக்கும் போது விஞ்சி நிற்கும் ஆகச்சிறந்த கேள்வியாகிறது!

  ஆராவின் அப்பாவால் மட்டுமே எச்சூழலிலும் அவளைப் புரிந்து கொள்ள முடிவது இந்த உலகில் அப்பா, மகள் உறவு நிலையின் அனிச்சை செயலாக நம்மைப் புன்னகைக்கத் தூண்டுகிறது.

  மகளைப் போலவே அப்பாவும் வருணை மன்னிக்கும் மனநிலையில் இருப்பதில் புதுமை ஏதுமில்லை. ஏனென்றால் அவர் ஆராவின் அப்பா. அப்படித்தான் இருந்தாக வேண்டும்.

  ஒரு நாவலில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து எதற்கு இத்தனை சீரியஸான விமர்சனம்? என்று யோசிப்பவர்களுக்கு ஒரு தகவல். இது நாவல் இல்லை. வாழ்க்கை. இந்த நாவலில் விவரித்திருப்பது போலவே நிஜ வாழ்க்கை அமைந்து விட்ட பெண்கள் நம்மிடையே எத்தனையோ பேர் உலவுகிறார்கள். அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால், 

  ‘உலகில் எதுவொன்றும் நிரந்தரப் பிழை இல்லை, 
  எதுவொன்றும் மன்னிக்க முடியாத குற்றமில்லை’ என்று அரை நொடியேனும் யோசிக்க வைத்து விடுகிறார்கள்.

  ஆயினும், கிளைமாக்ஸில் ஆரா, வருணை மன்னித்து விட முயற்சிப்பது அவளது தைரியமற்ற மனநிலையையே காட்டுகிறது.

  அவளால் ஏன் தனித்து நிற்க முடியாது. குழந்தையை மட்டும் அவனிடமிருந்து எடுத்துக் கொண்டு அப்பாவும், அவளது குழந்தைகளுமாக அவளொரு வாழ்க்கைய வாழ ஏன் தீர்மானிக்கவில்லை?

  எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமிகள் எல்லாம் திரைக்கு மட்டும் தான் ஒத்து வருவார்களா? அவர்களால் திரையில் மட்டும் தான் வாழ முடியுமா?

  நிஜ வாழ்வில் வருண்களை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டுமா?

  என்ற கோபமே மிஞ்சுகிறது.

  நாவலுக்கான விமர்சனக் கூட்டத்தில் பேசிய மற்றொரு எழுத்தாளரான கெளதம் குறிப்பிட்டதன் படி உமா, தன்னுடைய நாவலில் ஆங்காங்கே தான் ஸ்திரமாக விதைத்து வைத்திருக்கும் ஆத்மார்த்தமான எண்ணக்கோவைகளை தனித்துப் பிரித்தெடுத்து பொன்மொழிகளாகத் தொகுத்து அதையொரு தனிப் புத்தகமாக்க முயற்சிக்கலாம். நிச்சயம் நாவலைக் காட்டிலும் அதற்கு அதிகம் வாசகர்கள் கிடைப்பார்கள். ஒருவேளை நாவலை வாசிக்கும் ஆர்வத்தையும் கூட அந்தப் பொன்மொழிகள் கிளர்த்தி விட 100! வாய்ப்புகள் உண்டு.

  நூல்: நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்
  ஆசிரியர்: உமா பார்வதி
  விலை: ரூ 150
  வெளியீடு: யாவரும் பதிப்பகம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai