Enable Javscript for better performance
MOHANLAL'S LUCIFER MOVIE REVIEW!- Dinamani

சுடச்சுட

  

  மோகன்லாலின் ‘லூஸிஃபர்’ சினிமா விமர்சனம்... திஸ் டீல் இஸ் வித் தி டெவில்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 30th May 2019 10:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lucifer_movie_review

   

  என்னிடம் ஒரே நேரத்தில் இரண்டு லூஸிஃபர்கள் வந்து சேர்ந்தனர். ஒன்று புத்தக வடிவில், மற்றொன்று சினிமா வடிவில்.

  நான் சினிமாவையே முதலில் பார்த்து விடுவது என்று முடிவெடுத்தேன்.

  காரணம்... மோகன்லால். மனிதர் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் அவர் நடிப்பின் மீதான மோகமும் பக்தியும் கொஞ்சமும் தீரவில்லை மலையாளிகளுக்கும்... கேரளக்கரையையொட்டிய பெரும்பான்மை தமிழர்களுக்கும்.

  சமீபகாலத்தில் த்ரிஷ்யத்துக்குப் பிறகு கடைசியாக லாலின் நடிப்பைப் பார்த்து ச்சே கொன்னுட்டாண்டா மனுஷன் என்று திகைத்து நின்றது புலி முருகனில்.

  அப்புறமாக இப்போது பார்த்து திகைக்க வாய்த்திருக்கிறது லூஸிஃபர்!

  லூஸிஃபர் என்றால் சாத்தான்களின் ராஜா என்று அர்த்தமாம்.

  ‘திஸ் டீல் இஸ் வித் தி டெவில்’

  லால் ஓரிடத்தில் சொல்கிறார்.

  படத்தைப் பொருத்தவரை என்னுடைய சிம்பிள் அண்டர்ஸ்டேண்டிங் ஒன்று தான்.

  இந்த உலகமே இலுமினாட்டிகளால் ஆட்டிப்படைக்கப்படுவதாகப் பலர் இணையத்தில் தலை தலையாக அடித்துக் கொள்கிறார்கள்.

  அந்த இலுமினாட்டிகளில் நல்லவன் ஒருவன் உளனேல் அவனே லூஸிஃபர், அவனே ஸ்டீஃபன் நெடும்பள்ளி!

  மாநிலத்தின் முதலமைச்சரான பி கே ஆர் (பி கே ராமதாஸ்) இறந்து விடுகிறார். அவரது வளர்ப்பு மகனே ஸ்டீஃபன் நெடும்பள்ளி. 

  பல ஆண்டுகள் உலகில் எங்கிருக்கிறான் என்றே தெரியாமல் வாழ்ந்து வந்த ஸ்டீஃபனை பி கே ஆர் மீண்டும் தனது அரசியல் வாரிசாக கட்சிக்குள் அழைத்து வந்து வளர்த்து விடுவது உட்கட்சிக்குள் உரசலாக இருந்த போதும் வலிமை மிகுந்த தலைவனின் கீழ் யாராலும் தட்டிக் கேட்க முடியாத நிலையிருந்த போதும், தற்போது தலைவர் இறந்தபின் ஸ்டீஃபனை ஒரேயடியாக அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடக்கிறது. கூடவே கட்சிக்குள் அடுத்த  தலை யார்? என்கிற போட்டியும் தொடங்குகிறது.

  அடுத்த முதல்வர் ரேஸில்;

  பி கே ஆரின் மகள் ப்ரியதர்ஷிணி ராமதாஸ்

  மகன் ஜதின் ராம்தாஸ்,

  கட்சிக்குள் மூத்த தலைவரகளுள் ஒருவரான மகேஷ் சர்மா, உட்பட பலரது பெயர் அடிபடுகிறது.

  இவர்களில் ரேஸில் பங்கேற்காத போதும் ஸ்டீஃபனின் பெயரும் அந்த லிஸ்டில் உண்டு என்பதால் அவனை ஒழித்துக் கட்ட மீடியா துணையுடன் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுகிறது.

  ஐ யு எஃப் (இந்தியன் யுனைடெட் ஃப்ரண்ட்) கட்சி பி கே ஆரின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் கட்சியை நடத்துவதற்கான நிதிக்காக சர்வதேச அளவிலான போதை மருந்து  மாஃபியா கும்பலொன்றுடன் கூட்டு வைக்கத் தயாராகிறான் பி கே ஆரின் மருமகன் பாபி எனும் பிமல் நாயர்.

  பாபி, ப்ரியதர்ஷிணியின் இரண்டாம் கணவன். மனைவிக்கு, நல்லவன் முகம் காட்டும் பாபி, மனைவியின் மகளிடம் மட்டும் காம முகம் காட்டுகிறான். படத்தில் வில்லன் இவனே! பிமல் நாயராக நடித்திருப்பது விவேக் ஓபராய். பல இடங்களில் பாலிவுட் வில்லன் நடிகரான அப்பா சுரேஷ் ஓபராயை நினைவூட்டுகிறார். தமிழைப் பொருத்தவரை நடிப்பில் பழைய நாசர் சாயல் தெரிகிறது.

  கொள்ளை, கொள்ளையாகக் கொட்டித் தரும் பணத்திற்காக கட்சியை சர்வதேச போதை மருந்து மாஃபியா கும்பலிடம் அடமானம் வைக்கத் தயாராகிறான் பாபி. கட்சியில் செல்வாக்கு மிக்கவன் எனும் மரியாதைக்கு ஸ்டீஃபனிடமும் அதற்கு ஆதரவு கோரப்படுகிறது. ஆனால் ஸ்டீஃபன் தான் பாபி அளவுக்கு கெட்டவன் இல்லையே! அதனால், பாபியின் திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறான்.

  அரசியலில் வாரிசு பிரச்னை வரக்கூடாது, அடுத்தபடியாக போதை மருந்து மாஃபியா இயங்க அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக மீடியா உதவியுடன் ஸ்டீஃபன் நெடும்பள்ளி மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு போக்சோ சட்டத்தின் துணையுடன் சிறையில் அடைக்கப்படுகிறான் ஸ்டீஃபன்.

  நடுவில் பாபியின் திட்டப்படி அயல்நாட்டில் இருக்கும் ஜதின் ராமதாஸை இந்தியாவுக்கு வரவழைக்கிறார்கள். ஜதினுக்கு ஒரு மேக் அப் மற்றும் பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் குழு மூலமாக வலிந்து அவனது தந்தையின் உருவ அமைப்பு வரவழைக்கப்படுகிறது. அதன் பின் அவன் அலைகடலெனத் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான். இந்தக் காட்சிகளின் சித்தரிப்பு அப்படியே சமகால அரசியலை வெகு போல்டாகவே விமர்சித்துப் பகடி செய்கிறது.

  தலைவர் இறந்து விட்டார் என்று ஆஸ்பத்திரி வளாகமே அல்லோலோகல்லோலோ பட்டுக் கொண்டிருக்கையில் காமத்துடன் சின்னத்திரை நடிகையை மொபைலில் நோட்டம் விடும் ஐபிஎஸ் அதிகாரியாக மயில்வாகனம் எனும் கதாபாத்திரத்தில் ஜான் விஜய். இவர் நடிக்கிறாரா? இல்லை நிஜமாகவே கதாபாத்திரத்தில் மூழ்கி வாழ்ந்தே விடுகிறாரோ என்று படம் முழுவதும் அவர் வரும் சீனில் எல்லாம் சந்தேகமாயிருக்கிறது.

  ‘எம்பிள்ளைங்க மேலயா கைய வச்ச?’ என்று ஸ்டீஃபனைப் போலவே மயில்வாகனத்தை எட்டி உதைத்து சுவரோடு சுவராகச் சாய்த்து கழுத்தை நசுக்கிக் கொல்லும் உத்வேகம் வருகிறது அந்த கேரக்டரில் அவரைக் காணும் போதெல்லாம். இப்படிப்பட்ட அதிகாரிகளை ஸ்டீஃபன் நெடும்பள்ளி ஸ்டைலில் தான் டீல் செய்ய வேண்டும். பாவம் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் சீரியல் நடிகை கோமதியுடன் சரசமாடச் சென்று வெட்டுப் பட்டுச் செத்துப் போகிறார்.

  படத்தில் பலரது நடிப்பு அலட்டிக் கொள்ளாமல் சிக்ஸருக்குத் தாவுகிறது. ஜதின் ராமதாஸாக வரும் டொவினோ தாமஸின் நடிப்பு மினி பட்டாசு, 

  தன் மகளை, தான் விரும்பி மணந்து கொண்ட இரண்டாம் கணவன், ஒரு செக்ஸ் டாயைப் போலப் பாவிப்பதை மகள் வாயிலிருந்தே அறிந்து கொள்ளும் இடத்தில் ப்ரியா ராம்தாஸாக வரும் மஞ்சு வாரியரின் நடிப்பு பதறித் துடிக்க வைப்பதாக இருக்கிறது. மஞ்சு வாரியரை பெண் மோகன்லால் என்றால் தப்பில்லை பாஸ்.

  விவேக் ஓபராய்... பிமல் நாயர், பாபி... படத்தில் மிகத் தந்திரசாலியாகக் காட்டப்படும் பாபி கேரக்டர் இறுதியில் அப்படி பொசுக்கென்று சுடப்பட்டு இறந்து போவதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் கொடூரமாக ஏதாவது செய்திருக்கலாமே ஸ்டீஃபன். 

  பாபி விஷம்னா விஷம் அப்படி ஒரு விஷம். ப்ரியாவின் முதல் கணவனையும், பி கே ஆரையும் திட்டமிட்டுக் கொன்றவன் என்பதற்காக மட்டுமல்ல, சிரித்துக் கொண்டே கபட நாடகம் நடத்துவதற்காகவும் அல்ல தனது சுயநலத்துக்காக பின் விளைவுகளைப் பற்றி யோசியாது கட்சியையும், மாநிலத்தையும் சர்வதேச போதைமருந்துக் கும்பலிடம் இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் தீவிரவாதக் கும்பலிடம் அடமானம் வைத்ததற்காகவும் அல்ல, திட்டமிட்டு தனது சுயநலத்துக்காக ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு போதைப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி அவளை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டும் மாற்றாந்தந்தையாக நடித்து படம் பார்ப்பவர்களிடையே பயத்தை ஏற்படுத்தியதற்காக! அவனை இன்னும் கொஞ்சம் கொடூரமாகக் கொன்றிருக்கலாம்.

  படத்தில் மிக கச்சிதமான கேரக்டர்கள் இன்னும் சிலவும் உண்டு. பிகேஆராக வரும் சச்சின் கேடத்கரின் நடிப்பு அளவு மீறாமல் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. இனிமேல் அரசியல்வாதி கேரக்டர்கள் என்றால் முதல் வேலையாக இவரது பெயரை டிக் அடித்து விடலாம்.

  யாரந்த மேடையில் ராஜன்... நிஜக்கதாபாத்திரம் ஒன்றை நினைவுறுத்துகிறது. பெயரைச் சொல்ல மாட்டேன் நீங்களே கண்டுபிடியுங்கள். உலகத்தையே உங்க ஹாஸ்பிடலுக்கு வரவழைச்சிட்டு உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா மட்டும் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வந்துடுவீங்களே! என்றொரு வசனம். பக்கா பகடி.

  ஸ்டீஃபன் நெடும்பள்ளியாக இருந்த லாலட்டன் க்ளைமாக்ஸ் நெருங்கும் போது உலகையே ஆட்டிப்படைக்கும் இலுமினாட்டி குழுக்கள் ஒன்றில் தலைவனான ஆப்ராம் குரேஷியாக மாறுவது பெரிதாக அதிர்ச்சியைத் தரவில்லை. எதிர்பார்த்த முடிவு தான்.

  இந்தப் படத்தை நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன் என்றால், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருக்கிறான். அந்த வல்லவன் நற்சிந்தனை கொண்டவனாக இருந்தால் நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நாடும், நாட்டுமக்களும் சமநிலை பெறுவார்கள். இல்லையேல் அந்த சமநிலையை ஏற்படுத்த அவன் லூஸிஃபராக மாறிப் போராடுவான். ஆம், இந்த உலகம் நீங்களும், நானும் நினைத்திருப்பது போல அத்தனை சாத்வீகமானது அல்ல. இங்கே அனைத்து விதமான பழிபாவங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அந்த உலகைக் கடைத்தேற்றுவதற்கு தேவகுமாரர்கள் தேவையில்லை லூஸிஃபர்கள் தான் தேவை. என்று சுற்றி வளைத்துப் புரிந்து கொள்வதை விடவும்  சுயநல இலுமினாட்டிகளுக்கு நடுவில் ஒரே ஒரு நியாயமான சிந்தனை கொண்ட நல்ல இலுமினாட்டி இருந்தால் தேவலாம் என்ற நப்பாசையைத் தூண்டி இருக்கிறது இந்தப் படம்.

  கடைசியில் கமல் தசாவதாரத்தில் சொன்ன பதில் தான், கடவுள் இல்லையென்று சொல்லவில்லை நான் இருந்தால் நல்லது என்று சொல்கிறேன் :)

  லூஸிஃபர் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.

  படத்தில் லாலின் ஹீரோயிஸம் ஓங்கித் தெரிய அனேக காட்சிகள் உண்டு. நடிப்பு மிளிரவும் அனேக காட்சிகள் உண்டு. கிளைமாக்ஸில் ஒரு கிளப் டான்ஸ் என ஒரு மசாலாப் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களுடனும் படம் போர் அடிக்காமல் நகர்கிறது.

  நடிப்பு: மோகன்லால், மஞ்சு வாரியர், ப்ரித்விராஜ் சுகுமாரன், சச்சின் கேடத்கர், சானியா அய்யப்பன், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், ஜான் விஜய் இத்யாதி

  இயக்கம்: ப்ரித்விராக் சுகுமாரன்

  தயாரிப்பு? ஆசிர்வாத் சினிமாஸ்.

  2019, மார்ச் வெளியீடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai