பார்லர் செலவின்றி வீட்டிலேயே பெடிக்யூர் செய்து கொள்ள எளிமையான டிப்ஸ்!

இன்று சாதாரண பியூட்டி பார்லர்களில் கூட பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டுமெனில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
pedicure with milk
pedicure with milk

இன்று சாதாரண பியூட்டி பார்லர்களில் கூட பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டுமெனில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். பிரபலமான பார்லர்கள் என்றால் கேள்வியே இல்லை.. ஒருமுறை பெட்க்யூர் மாதச் சம்பளத்தை அப்படியே தாரை வார்த்து விட்டு வர வேண்டியது தான். இதனாலேயே பல பெண்கள் பாதங்களில் பெடிக்யூர் செய்து கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ.. வீட்டிலேயே எளிமையான முறையில் பெடிக்யூர் செய்து கொள்ள முடியுமென்பது. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நமது பாட்டிமார் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கக் கூடிய எளிமையான டிப்ஸ் தான்.

தேவையான பொருட்கள்:

சூடான பால்: 2 லிட்டர்
கல் உப்பு: 1 கைப்பிடி
நறுக்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை பேக் செய்ய உதவும் பிளாஸ்டிக் உறைகள்: தேவையான அளவு
சூடான தண்ணீரில் நனைத்த மென்மையான டர்க்கி டவல் -1
ஆலிவ் அல்லது பாதாம் ஆயில்: 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கால்களை குளிர்ந்த நீரில் முதலில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சூடான பாலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி கல் உப்பைப் போடவும். அடுத்ததாகப் பாதம் தாங்கும் அளவிலான சூட்டிற்குப் பால் வந்ததும் அதில் இரண்டு கால் பாதங்களையும்  வைத்து சற்று நேரம் ஊற விடவும். பாதங்கள் பாலுக்குள் ஊறும் போதே உள்ளே நெருடும் கல் உப்பில் குதிகால்களையும், கால் ஓரங்களையும் கூட ஸ்கிரப் செய்து கொள்ளலாம்.

பாலில் சூடு இருக்கும் வரை இதைச் செய்து விட்டுப் பிறகு கால்களை வெளியே எடுத்து சூடான தண்ணீரில் நனைத்து கால் பொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பாக இருக்கும் டர்க்கி டவல் கொண்டு பாதங்களை மென்மையாகத் துடைக்கவும். பின்பு ஆலிவ் அல்லது பாதாம் ஆயிலால் கால்களை மசாஜ் செய்து பிளாஸ்டிக் உறை கொண்டு இறுக்கமாக மூடி சற்று நேரம் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமில்லை சுமார் 5 நிமிடங்கள் அந்த நிலை நீடித்தால் போதும். பிறகு பாதங்களை உறையிலிருந்து விடுவித்து விடலாம். இப்போது நீங்களே உணரலாம் உங்களது பாதங்கள் இந்த செயல்முறைக்கு முன்பு இருந்ததை விட இப்போது எத்தனை மென்மையானதாக மாறி இருக்கிறதென! அவ்வளவு தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com