நீராவி பிடிப்பதால் சருமம் எவ்வாறு பொலிவு பெறுகிறது? 

பெண்கள் பெரும்பாலும் தங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க பல்வேறு முறைகளில் முயற்சி செய்கின்றனர்.
நீராவி பிடிப்பதால் சருமம் எவ்வாறு பொலிவு பெறுகிறது? 

பெண்கள் பெரும்பாலும் தங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க பல்வேறு முறைகளில் முயற்சி செய்கின்றனர். இதில் பலரும் செயற்கை வழியில் முகத்தை சுத்தப்படுத்தும் கிரீம்களையும் மாய்ஸ்சரைசர்களையும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 

ஆனால், முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும் முகம் பொலிவு பெறவும் நீராவி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். 

வெறுமனே சூடான நீரில் ஆவி பிடிப்பது போதுமானதாக இருந்தாலும் கூடுதல் நன்மைகளுக்காக அத்துடன் எலுமிச்சை, உப்பு, மஞ்சள் தூள், துளசி, வேப்பிலை உள்ளிட்ட மூலிகைகள்.. இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து ஆவி பிடிப்பது எதிர்பார்க்கக்கூடிய நன்மைகளை விரைவில் பெற முடியும். 

நீராவி பிடிப்பதால் முகம் எவ்வாறு பொலிவு பெறுகிறது? 

சரும அழுக்குகளை நீக்குகிறது

நீராவி பிடிக்கும்போது சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து இறந்த சரும செல்கள், அழுக்கு மற்றும் துளைகளை அடைக்கும் பிற செல்களை அழிக்கிறது. பிளாக்ஹெட்ஸ் எனும் கரும்புள்ளிகள் ஒயிட்ஹெட்ஸ் எனும் வெள்ளைப் புள்ளிகள் ஆகியவைகளை மென்மையாக்கி அகற்றுகிறது. ஒட்டுமொத்தமாக சருமத்தில் உள்ள குப்பைகளை நீக்கி, முகத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது.

ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது

சரியான தோல் பராமரிப்பினை மேற்கொண்டாலும் சில நேரங்களில் தோல் மந்தமாகவும் வறட்சியாகவும் இருக்கும். ரத்த ஓட்டம் குறைவாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் நீராவி பிடிப்பது சருமத்திற்கு மிகவும் பயனளிக்கும். ஆரோக்கியமான முறையில் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 

தோல் தோற்றத்தைப் பராமரிக்கிறது

நீராவி சருமத்தின் ஊடுருவிச் செல்லும்போது இயற்கையாக சருமத்தை நீரேற்றம் செய்கிறது. இதனால் சருமம் புத்துணர்வு அடைந்து பொலிவு பெறுகிறது. மேலும் தோல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது,  வறட்சியை ஏற்படாமல் தடுக்கிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும்  இயற்கை எண்ணெய்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி

நீராவி பிடித்தல் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி செய்ய உதவுகிறது.  முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த இரண்டு கூறுகளும் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். தோல் மென்மையாகவும் இறுக்கமாகவும் இருக்க உதவும். வயதான காலத்தில் இவ்விரு மூலக்கூறுகளின் உற்பத்தி குறைவதாலேயே தோல் சுருக்கங்கள், தளர்வுகள் ஏற்படக் காரணமாகிறது. 

வடுக்களை மறைக்கிறது

முகத்தில் ஒரு பரு தோன்றி மறைந்திருக்கும். அந்த இடத்தில் ஏற்பட்ட வடு நீண்ட நாள்களாக இருக்கும். இம்மாதிரியான வடுக்கள் முகத்தின் அழகை கெடுக்கின்றன. ஆனால் நீராவி பிடிக்கும்போது சருமத்தில் உள்ள வடுக்களை மறைக்கிறது, சரும இடைவெளிகளை சரிசெய்கிறது. 

நீராவி பிடித்த அரை மணி நேரத்திற்குப் பின்னர் முகப்பருவினால் ஏற்பட்டுள்ள புண்களில் ஒரு ஐஸ் க்யூப்பை சுமார் ஐந்து நிமிடங்கள் தேய்க்கவும். இது அவ்விடத்தில் உள்ள வீக்கத்தைக் குறைத்து சீழ் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

எண்ணெய்ப்பசையை நீக்குகிறது

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய்த் தன்மை இருப்பது முகப்பரு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். நீராவி பிடிப்பதனால் அதிகப்படியான எண்ணெய்ப்பசை வெளியேற்றப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com