மகளாய் நினைப்போம், தாயாய் மதிப்போம் (குறும்படம்)

தினசரி நாளிதழ்களில் ஏதோ ஒரு பக்கத்தில் நாம் தவிர்க்க முடியாத செய்தியாகி விடுகிறது பாலியல் வன்கொடுமை தொடர்புடைய நிகழ்வுகள்.
மகளாய் நினைப்போம், தாயாய் மதிப்போம் (குறும்படம்)

தினசரி நாளிதழ்களில் ஏதோ ஒரு பக்கத்தில் நாம் தவிர்க்க முடியாத செய்தியாகி விடுகிறது பாலியல் வன்கொடுமை தொடர்புடைய நிகழ்வுகள்.

எங்கோ ஓரிடத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பச்சிளம் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தல்களை நமது பாரத திருநாட்டில் எதிர்கொள்ள நேரிடுவது வேதனைக்குரிய ஒன்று.

கழுத்து நிறைய நகைகளை அணிந்து நள்ளிரவு 12 மணிக்கு எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று கூறினார் மகாத்மா காந்தி.

ஆனால், ஒரு பெண் தன்னந்தனியாக பகலிலேயே செல்ல முடியாத சூழலுக்கு சென்று கொண்டிருக்கிறோமோ என்று அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அதிகாலை 6 மணிக்கு பணிக்கு செல்லும் ஒரு பெண்ணை நூற்றுக்கணக்கான பயணிகள் மத்தியில் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொன்றுவிட்டு ஓடுகிறான் இளைஞன். காதல் கைகூடவில்லை என்று கல்லூரி வாசலில் மாணவியை இளைஞன் கொலை செய்கிறான்.

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையைக் கூட…. இது போன்ற செய்திகளை படித்தாலே நெஞ்சம் படபடக்கிறது. நமது வீட்டிலும் அக்கா, தங்கை, தாய், மகள் இருக்கிறார்களே… எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நினைத்தாலே மனதை பிசைகிறது. நெஞ்சம் வலிக்கிறது.

குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது அவர்களுக்காக மட்டுமல்ல. அவர்களை போன்று பிறரும் அது போன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிப்பதற்காகவே. எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் இங்கே மாற வேண்டியது மனதனின் மனம்தான் என்றால் அது மிகையல்ல. இதுபோன்ற மாற்றங்களை நல்ல புத்தகங்களாலும், நல்ல திரைப்படங்களாலும் கொண்டு வர முடியும். வணிக நோக்கத்தில் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்ற சூழலில், குறும்படங்களில் சமூக சிந்தனை கொண்ட படங்களை படைப்பது எளிது. அந்த வகையில், பல்வேறு இடங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளையும், காதல் மறுக்கப்படுவதால் காதலிக்கு எதிராக ஏவப்படும் வன்முறையையும் பதிவு செய்து ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது மகள் என்ற குறும்படம்.

ஓர் இரவு. மழை பொழிந்து கொண்டிருக்கிறது. குண்டு பல்பு காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது. இப்படி தொடங்கும் மகள் குறும்படத்தில் மகள் வயதுடைய ஒரு சிறுமியை சிலர்….குறியீடாக குழந்தைகள் விளையாடும் பொம்பை காட்டப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ஒரு வீடு, ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. அடுத்து கல்லூரி மாணவியை இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்வது, தன்னை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசுவது என அடுத்தடுத்த காட்சிகள் இதயத் துடிப்பை எகிற வைக்கின்றன. இதனூடாக சமூகத்தில் நிகழ்ந்த உண்மையான சில சம்பவங்களும் தொலைக்காட்சியில் யாரோ அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதும் கண் கலங்குவதும் காட்டப்படுகிறது.

முடிவில், நமது மகள்களுக்கு நிகழும் கொடூரத்தை விதைப்போம். எதிர்கால சந்ததியினருக்கு ஆழமாய் விதைப்போம். விதைத்தவர்கள் உறங்கலாம். விதை உறங்காது என்று முடிக்கிறார் குறும்படத்தின் இயக்குநர் வினோத் சத்தியமூர்த்தி. பெண்ணின் கைகளைத் தாழ்த்தாதே, உயர்த்து என்பதையும்,  பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் அணுக நினைக்கும் ஆண்களின் மனதை கொட்டும் மழை கரைக்கட்டும் என சில தகவல்களை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. அப்துல் கே ரகுமானின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். இசையும் சிறப்பு.  உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்ட இந்தப் படம் யாராவது ஒருவரின் மனதை நல்வழிப் படத்தினால் அதுவே போதும்.

மகள்களாய் நினைப்போம்; தாய்மார்களை மதிப்போம். இதை மகன்களுக்கு கற்றுத் தருவோம்.

 இந்தப் படத்தை யூ-டியூப் தளத்தில் காண

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com