என் கண்மணிப் போன்ற ஜீவன் இதுவே! ரஷ்ய நாடோடிக் கதை!

வெகு காலத்திற்கு முன் ஒரு நல்ல மனிதன் இருந்தார். அன்புள்ளமும் ஈகையும் கொண்டவர்.
என் கண்மணிப் போன்ற ஜீவன் இதுவே! ரஷ்ய நாடோடிக் கதை!

வெகு காலத்திற்கு முன் ஒரு நல்ல மனிதன் இருந்தார். அன்புள்ளமும் ஈகையும் கொண்டவர். இந்த உலகத்தில் அனைத்து செல்வங்களும் அவரிடம் இருந்தன. அவருக்குப் பணி செய்ய அநேக அடிமைகளும் இருந்தனர்.

அவருக்குப் பணி செய்த அவர்கள் எல்லாருமே பெருமிதத்துடன் அவரைப் பற்றி புகழ்ந்தே பேசுவார்கள். உண்ண சுவையான உணவும் உடுக்க அருமையான ஆடைகளும் அவர்களுக்கு வழங்கி அவர்களை அவர் பாதுகாத்தார். அவர் யாரையும் வெறுத்ததில்லை. கடுஞ்சொற்கள் அறியாதவர். மற்ற பணக்காரர்களைப் போல பணியாளர்களை ஆடு மாடுகளைவிட கேவலமாக நடத்துவதை நினைத்துக்கூட பார்க்க முடியாதவர். வேலையாட்கள் எதற்காகவும் ஒரு போதும் தண்டித்ததில்லை. எல்லாருடைய நல்வாழ்வையே விரும்பியவர் அவர்.

அவரது புகழை விரும்பாத, கடவுளின் எதிரியான சாத்தான் அவருக்கு கேடு செய்ய திட்டமிட்டான். மெதுவாக அவரது பணியாட்களில் அலெப் என்னும் அடிமைப் பணியாளனைத் தன் பக்கம் இழுத்து வசப்படுத்திக் கொண்டான். மற்றவர்களை அவன்மூலம் துர்போதனை செய்து மாற்றிவிட அவனைப் பணித்தான். ஒருநாள் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஓய்வாக எஜமான விஸ்வாசத்தோடு அவரைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட அலெப் அவர்களைப் பார்த்து உரத்த குரலில் பேசினான்.

"இதோ பாருங்கள், நமது எஜமானரை இப்படிப் புகழ்வது பெரிய முட்டாள்தனம், சாத்தான் அவர் சொல்வதைச் செய்தால் நம்மை அன்பாகவே நடத்துவார். நாம் நம் எஜமானர் சொல்வதையெல்லாம் உடனே செய்து கொடுக்கிறோம். அவர் நம்மிடம் அன்பாக இருப்பது என்ன அதிசயம். அவருக்கு பிடிக்காத கெடுதல் ஏதாவது செய்து பார்த்தால்தான் அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். பதிலுக்கு தீமையைச் செய்வார். அப்போதுதான் அவர் உண்மை சொரூபம் தெரியும்''.

மற்றவர்கள் எல்லாரும் அலெப் சொன்னதை ஏற்க மறுத்தார்கள். அவன் கருத்து சரியல்ல என்பதை நிரூபிக்க அவர்கள் பந்தயம் கட்டவே தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு எஜமானரின் மேல் எப்படியும் கோபம் வரவழைக்கவே அலெப் விரும்பினான். அலெப் தனது முயற்சியில் தோற்றுப் போனால் அவனுக்கு கிடைக்க கூடிய அவனது விடுமுறை கால உல்லாச ஆடைகளை அவன் இழந்து விட வேண்டும். இல்லை, அவன் வெற்றிப் பெற்றால் இதர அடிமைகள் அவனது ஆடைகளை அவனுக்குத் கொடுத்து விட வேண்டும். மேலும் அவனை விடுவிக்க அவர்கள் போராடவும் தயாராக இருப்பார்கள். அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அலெப் மறுநாள் காலை எஜமானனுக்குக் கோபம் மூட்ட தயாரானான்.

அலெப்பின் வளர்ப்பில் இருந்த ஆடுகள் உயர் ஜாதியைச் சேர்ந்த விலையுர்ந்த ஆடுகள். எஜமானருக்கு அவற்றின்பால் கொள்ளைப் பிரியம்.

அன்று காலை எஜமானர் அவருக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை விருந்தினர்களாக வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்போது அவர்களுக்கு தனது ஆடுகளை காண்பிப்பதற்காகவும் ஆட்டுக் கொட்டகைக்கு கூட்டிவந்தார். அலெப் எதிர்ப்பார்த்திருந்த சமயம் அதுதான். அவன் தனது இதர சகாக்களுக்கு ஜாடை காட்டி, "பாருங்கள் இப்போது இவருக்கு எப்படி கோபம் மூட்டுகிறேன்'' என்று குறிப்பால் உணர்த்தினான்.

அனைத்து அடிமைப் பணியாட்களும் கொட்டகைக்கு வெளியே திரண்டு காத்திருந்தார்கள். சாத்தானும் அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து தனது சீடன் எப்படி தன் தொழிலைச் செய்கிறான் என்று பார்க்கக் காத்திருந்தான். எஜமானர் அவரது நண்பர்கள் பின் தொடர கொட்டிலை நோக்கி வந்தார். தான் வளர்த்திருந்த ஆடுகளையும் குட்டிகளையும் அவர்கள் பார்க்கச் செய்தார். அதே சமயம் அவர் அருமையாக போற்றி வளர்த்திருந்த ஓர் ஆண் ஆட்டையும் அவர்களுக்குக் காட்டினார்.

"அனைத்து ஆடுகளும் அருமைதான், ஆனாலும் நான் வளர்த்திருக்கும் இந்த பிரத்யேக குட்டியைப் பாருங்கள். எத்தனை அழகாக இதன் கொம்புகள் வளைந்து பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கின்றன! என் கண்மணிப் போன்ற ஜீவன் இதுவே'' என்று சிலாகித்தார்.

பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரே திகைப்பு. கொட்டிலில் இருந்த அத்தனை ஆடுகளும் கும்மாளமாக இங்கும் அங்கும் தாவிக் குதித்து அந்த சிறந்த ஆண் ஆட்டை அவர்கள் பார்க்க முடியாமல் குழப்பத்தை உண்டு பண்ணின. அந்த ஆட்டுக் கூட்டம் கொஞ்சம் நின்று தயங்கினால் அலெப் உடனே அவற்றை விரட்டி மீண்டும் ஆடிக் குதித்து கலாட்டா செய்யும்படிச் செய்தான். இந்த அமளியில் வந்திருந்த விருந்தினர் அந்த குறிப்பிட்ட அருமந்த ஆட்டினை இனம் காண முடியாமலே போய்விட்டது.

எஜமானர் சோர்ந்தே போய்விட்டார். அலெப்பைப் பார்த்து அவர் சொன்னார், "அலெப், எனது அருமை நண்பனே, எனது சிறப்பு ஆட்டைக் கண்டு பிடிப்பாய். கொம்புகள் வளைந்து பிணைந்து காட்சியளிக்கும் அதனை நீ அறிவாய். அதனைக் கண்டுபிடித்து ஒரு கணம் நிறுத்தி காண்பிப்பாய்'' அலெப்பை அவர் வேண்டிக் கொண்டார்.

அவ்வளவுதான். அலெப் ஒரு சிங்கம் போல் அந்த கூட்டத்திற்குள் பாய்ந்து ஓடி அந்த அருமை ஆட்டைக் கண்டுபிடித்து நிறுத்தினான்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதன் ரோமக்கற்றையைப் பிடித்து தூக்கி அதன் இடது காலை தனது ஒரு கையால் இறுக்கிப் பிடித்து எஜமானரின் கண் முன்னாலேயே அதை ஒடித்தான். ஒரு மரக்கிளையைப்போல் அது பட்டென்று ஒடிந்தது. கால் ஒடிந்து விட்ட அந்த ஆடு அப்படியே குப்புற விழுந்தது. இப்போது அவன் அதன் வலது காலையும் பிடித்து மடக்கினான். ஒடிந்த இடது காலை மடக்கி, சுருட்டி அது எழுந்து நிற்க தவித்தது. பார்க்கவந்திருந்த நண்பர்களும் இதர அடிமைகளும் மிகவும் வருத்தத்தோடு பரிதாபப்பட்டார்கள். ஆனால் மரத்தின் மேலிருந்து அதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த சாத்தானோ அலெப் தான் விரும்பியதை செவ்வனே செய்துவிட்டதைக் கண்டு பூரித்தான்.

இடிந்து போயிருந்த எஜமானனோ முகம் சுருங்கி, தலை குனிந்து ஒரு வார்த்தையும் சொல்ல முடியாமல் நின்றார். வந்திருந்த விருந்தினர்களும் அடிமைகளும் கூட மேற்கொண்டு என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருந்தனர். கொஞ்ச நேரம் மௌனம் சாதித்த எஜமானர், சட்டென்று ஏதோ ஒரு சுமையைத் தூக்கி எறிவதைப்போல் தலையை உலுப்பி சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்தார். கண்களை அகலத்திறந்து மேல் நோக்கி தேவலோகத்தை நோக்கியவராக சில விநாடிகள் மௌனம் சாதித்தார்.

பிறகு முகத்தில் சுருக்கங்கள் மறைந்து தெளிவுப் பெற்றவராக அலெப்பை நோக்கி ஒரு புன்னகையோடு பேசினார்:

"அலெப் உன் தலைவன் எனக்குக் கோபம்மூட்ட உன்னை ஏவினான். ஆனால் என் தலைவரான ஆண்டவரோ சர்வ சக்தியும் வாய்ந்தவராவார். எனக்கு உன் மேல் கோபம் இல்லை. ஆனால் உன் தலைவனைக் கோபத்திற்குள்ளாக்குவேன், உன்னை தண்டிப்பேன் என்ற பயம் உனக்கு. உன் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பவன் நீ. இதோ தெரிந்துகொள். உன்னை நான் தண்டிக்கமாட்டேன் . நீ விரும்பியபடியே இதோ இந்த அன்பர்களின் முன்னால் சொல்கிறேன். நீ இந்த விநாடியிலிருந்து சுதந்திர மனிதன். விடுதலைப் பெற்றவன். உன் விருப்பப்படி நீ எங்கு வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம் விடுமுறை நாட்களுக்கான உனது மாற்று உடைகளோடு நீ செல்லலாம்.

பரிவு உணர்வு கொண்ட அந்த எஜமானர் வந்திருந்த விருந்தினர்களோடு தனது மாளிகைக்குத் திரும்பினார். மரத்தின் மேலிருந்த சாத்தானோ பல்லை நற நறுவென்று கடித்துக் கொண்டு மரத்தின் மேலிருந்து கீழே விழுந்து பூமிக்குள் புதைந்து போனான்.
தமிழில் கன்யாமித்ரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com