ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் நெறிமுறை அடையாளங்கள்

கற்றுத் தருவதில் எந்த அளவிற்கு நியாயமாக, சமத்துவமாக இருக்கிறோம் என்பதும் தென்படும்.
ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் நெறிமுறை அடையாளங்கள்

திருமதி. ரங்கசாமி டீச்சர் யாரிடம் பேசினாலும் அவர்களின் தலையை கோதியபடி பேசுவார். அவரிடம் படித்தவர்களுக்கு அவரின் அரவணைப்பு, பாசக் கண்கள், கனிவான பேச்சு நன்றாக ஞாபகம் இருக்கும். திருமதி. ரங்கசாமி டீச்சர் ஒரு நர்சரி ஆசிரியர்.

எட்டாம் வகுப்பில் அந்தக் கணக்கு வாத்தியார் என்றாலே எல்லோருக்கும் நடுக்கம். அவரை ‘டெரர்’ என்றே அழைப்பது அவருக்கும் தெரிந்ததே. நகைத்து தன்னுடைய நண்பர்களிடம் பகிர்வார்.  ஆனால், அவர் எந்த வகுப்புக்கெல்லாம் செல்கிறோரோ, கணக்கில் தட்டுத்தடுமாறுவோர்களுக்கு இவர் ‘ஹீரோ’. மாணவர்களை குறை கூறுவதோ, சுட்டிக்காட்டிப் பேசுவதோ, தாழ்வாக நடத்துவதோ இல்லை. மேலும், அவர்களுக்கும் பாடம் புரியும் வகையில் (வரையில்) விதவிதமாக சொல்லித் தருபவர்.

ஆங்கில பாடம் கற்றுத் தரும் ஆசிரியை விமலா டீச்சர், பாடத்தைப் புத்தகத்திலிருந்து படிக்கும்போது மாணவர்களையும் பார்ப்பார்கள். வகுப்பின் எல்லா வரிசையையும், ஒவ்வொரு மாணவரையும் அவர்களின் இதமான பார்வை சந்திக்கும். அவர்களைப் போலவே யாரையும் விட்டு விடாமல் பார்க்கக் கற்றது ஒன்று. மற்றொன்று, முகம் பார்த்து படிப்பது  பழக்கமானது.

மாணிக்கம் சாரின் வகுப்பில் எப்பொழுதும் எழுந்து நின்று படிக்கச் சொல்வார். சில நேரங்களில், சரி ஒரு சேன்ஜுக்கு என்று சொல்லி இன்னொருவருடன் தானும் சேர்ந்து படிப்பார். பிறகு தான் புரிந்தது, அதனால் உச்சரிக்கத் தவிப்போரை, பேசப் பயப்படுவோர் என்ற பலருக்கு மாணிக்கம் சார் துணைபுரிந்ததால் தைரியம் வளர வாய்ப்பானது. அவரின் செயல்பாட்டால், கார்மேக நிறத்தை மதிக்கச் செய்தது.

அதனால்தான் எந்த விதத்தில் பார்த்தாலும், படிப்பை அழகு படுத்துவதே அதைத் சொல்லித் தருபவர்கள் தான். நம் வகுப்பாசிரியர்கள், ட்யூஷன் சொல்லி தருபவர் மட்டுமின்றி சந்தேகங்களைத் தெளிவு செய்யும்: நண்பர்கள், கூடப்பிறந்தவர்கள், உறவினர், பெற்றோர் எல்லோரும் என்னைப் பொருத்தவரை கற்றுத் தரும் அந்தத் தருணத்தில் ஆசிரியர்களே!

நன்றாக கற்றுத் தருபவர்கள், புரிய வைப்பது மட்டுமல்ல, கற்பதிலும், கற்கும் விஷயத்திலும் நம் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறார்கள் அதுவும் இவர்கள் சொல்லி தரும் விதத்தில் தான் ஈர்ப்பு ஏற்படுகிறது.

சொல்லித் தருகையில் அவர்களின் பேரார்வமே இவர்கள் அனைவரையுமே ஒற்றுமை படுத்துகிறது. இவர்கள் கற்பிக்கும் பொழுது, அந்தப் பொருளின் மேல் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் வெளிப்படையாகத் தென்படும்! இந்த விஷயம் முக்கியமானது என்று நமக்குத் தோன்றி, அதைப் பற்றி மேலும்-மேலும் தெரிந்து கொள்ள தூண்டிவிடும்.,

அதனாலேயே, நல்ல ஆசிரியரிடம் கற்றுக் கொள்கையில் அதைப் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படுகிறது. பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது ‘இதை கேள்விப் பட்டிருக்கியா?’, ‘இது தெரியுமா?’, ‘இதைக் கேளேன்’ என்பது நம் ஆர்வத்தைக் காட்டிவிடும். இதில் அழகு என்னவென்றால், நமக்குத் தெரிந்ததை பகிர்வதால், நாமும் ஆசிரியராவது மட்டுமில்லாமல், நம் புரிதலும் மேம்படுகிறது!

சந்தேகமின்றி, நம் ஆர்வம் மற்றவருக்குத் தொற்றிக் கொள்ளும். அவ்வளவு ஆர்வத்துடன் சொல்ல, கேட்பவரையும் நம் ஆர்வ வெள்ளத்தில் அழைத்துச் சென்று விடுவோம். வகுப்பறைகளில் இப்படிப் பட்ட சூழல் இருக்கையில் அது மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். இப்படி அமைக்கப்பட்டிருக்கும் வகுப்பறையில் தோல்விகளுக்கு இடமே இல்லை என்று தன் அனுபவத்தைக் குறித்து எழுதி இருக்கிறார் ஜான் ஹோல்ட், ‘ஹொவ் சில்ரன் லர்ன்?’ (How Children Learn?) என்ற தன் மிகச் சிறந்த நூலில். இப்படிப் பட்ட கற்றுத் தருவோரைப் பார்க்க பார்க்க, போகப் போக, அந்தப் பாடத்தை, கற்பதை நேசிக்க ஆரம்பிப்பவர்களைப் பற்றியும் கேட்டிருக்கிறோம்.

கற்பதில் ஆர்வம் என்பது பல விஷயங்களைப் பற்றி அறிந்துக் கொள்ளத் தூண்டுதலாகும். அதன் நேர் விளைவாக அறிவுத் திறன் விஸ்தாரமாகிறது. இந்த விஸ்தரிப்பினால் கர்வம், அகம்பாவம், கூடவே சேர்ந்து விட்டால், இவர்கள் அறிவு / பகிர்வு கஞ்சன்களாக வலம் வருவார்கள். முழு மனதோடு பகிர்வதற்கு மனம் வராமல், தயங்குவார்கள். வெகு விரைவில் இதைக் கண்டறிந்து, மேதாவிகளாகத் திகழ்ந்தால் கூட அவர்களை மற்றவர்கள் நெருங்க மாட்டார்கள்.

ஒருவர் எவ்வளவு பேர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறாரோ அந்த அளவிற்குப் பல கருத்துக்களை தானே புரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாகிறது. பலருடன் பல கோணங்களில் அளாவளவல் செய்யச் செய்ய, புரிதலும், அறிதலும் ஆழமாகிறது. ’கற்றது கை மண் அளவு, கல்லாதது கடல் அளவு’ என்றும் புரிய வரும். இந்த மனப்பான்மை உள்ளவர்கள், நிறையத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தங்களின் அறிவை, அறிவுத் திறனை எப்பொழுதும் காட்டி கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இன்னும் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது என்பதால் அறிவுத்திறனை காட்டிக் கொள்ள அவசியம் இல்லை என்பார்கள். மாறாக, அடக்கமாக இருப்பார்கள். இந்தப் பக்குவத்தினால் ஒவ்வொரு சந்திப்பையும், சந்தர்ப்பத்தையும் இன்னும் நன்றாக அறிந்து, புரிவதற்கென  கருதுவார்கள்.

எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு நமக்குள் அன்பும் அத்துடன், அடக்கமும் இருக்க வேண்டும். அன்பு இருந்தால், மற்றவரைப் பற்றி யோசிப்போம். அவர்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல் புரிவோம்.

அடக்கம் இல்லா விட்டால், கர்வம், அகந்தை, தலை தூக்கி நிற்கும். மற்றவர்களின் குறைபாடுகளை மட்டும் கவனிப்போம். தெரியாதோரை, புரியாதோரைத் துச்சமாக பார்வையிடுவோம். இந்தத் தோற்றத்தை பார்த்தே, அவர்களிடம் கேட்டுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ பயப்படுவார்கள்.

கற்றுத் தருவதில் எந்த அளவிற்கு நியாயமாக, சமத்துவமாக இருக்கிறோம் என்பதும் தென்படும். சிலருக்குக் கவனமாக, பொறுமையுடன் சொல்லித் தருவதும், மற்றவருக்கு மேலோட்டமாகவும், சலிப்புடனும் கற்றுத் தருவதைக் கண்டிருக்கிறோம். எந்தவித பாரபட்சம் காண்பித்தாலும் மாணவர்கள் விலகிக் கொள்வார்கள், ஆர்வம் சிதறிவிடும்.

எப்படி கற்பிக்கக் கூடாது என்பதை இப்போது பார்ப்போம்

  • வகுப்பில் முதல் மூன்று வரிசைகளை மட்டும் பார்த்து கற்றுத் தருவது.
  • வகுப்பில் எல்லோரையும் சமத்துவமாக நடத்தாமல் இருப்பது
  • பாடம் புரியவில்லை என்று தெரிந்தும் கேள்வி கேட்பது.
  • பதில் சொன்னாலும் அவர்களின் குணாதிசயங்களைக் குறித்து குறை கூருவது.
  • கற்றுத் தருவதை வெவ்வேறு விதமாக கற்றுத் தருவது.
  • நக்கல், நையாண்டி பேச்சு
  • முறைத்துப் பார்ப்பது
  • அளவளாவல் இல்லாமல் கற்றுத் தருவது.
  • மற்றவர்களுடன் ஒப்பிடுவது
  • அபிப்பிராயங்கள்: ‘உன்னால் முடியாது’, ‘நீ எல்லாம் எப்படி படிப்ப?’
  • சமாளித்துச் சொல்லி தருவது
  • எல்லோரும் உடனே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது
  • தவறுகளை எல்லோர் முன்னிலும் சுட்டிக் காட்டுவது.
  • பயமுறுத்தல்

மேற்சொன்னதில் சிலவற்றைச் கற்றுத் தரும் தருணத்தில் செய்கிறோமா என்று ஆராய்வது நல்லதே. இப்படிச் செய்தால்தான் தம்மை மதிப்பார்கள் என்று நினைப்பதினால் இப்படி செய்கிறோமா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் நேரும் விளைவுகளைக் கூர்ந்து கவனியுங்கள். இந்தச் செயல்பாடுகளினாலும், மனப்பான்மையினாலும் பலர் நம்மைப் பார்த்து அஞ்சக் கூடும். பயத்துடன் மதிப்பார்கள். இப்படித் தான் இருக்க விருப்பப் படுகிறோமா?

இந்தப் பயம் கலந்து அஞ்சுபவர்களை போல் இல்லாமல் ஆதரவும் அக்கறையும் காட்டுபவர்களிடம் அவர்கள் பயமின்றி, சிரித்துப் பேசி, சொல்வதெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் காண்போம். இவற்றை ஆராய்ந்தால், காரணிகள் புரியவர, தன்னை மேம்படுத்திப்பதால் ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் நெறிமுறைகளையும் / அடையாளங்களையும் வளர்த்துக் கொள்ள உதவும்.

கற்றுத் தருவது மிக பொறுப்பான ஒன்று. நம் சொல்லும் செயலும் ஒருங்கிணந்து இருக்க வேண்டும். நம்மிடமிருந்து கற்பது நிதர்சனம். அதனால் பொறுப்பு உள்ளவர்களாக இருப்பது அவசியம்!

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com