பள்ளியில் படிக்கும் போது சராசரி மாணவன், இப்போது பறப்பதற்குத் தடையில்லை என்கிறார்! இதுவொரு உண்மைக் கதை!

ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை உயரங்களுக்கும் செல்லலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்,
பள்ளியில் படிக்கும் போது சராசரி மாணவன், இப்போது பறப்பதற்குத் தடையில்லை என்கிறார்! இதுவொரு உண்மைக் கதை!

ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை உயரங்களுக்கும் செல்லலாம் என்பதை நிரூபித்திருக்கிறார், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உண்ணியூர்கோணத்தைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர் ரவி ஆர்.சங்கர்.

பள்ளியில் படிக்கும் போது ஒரு சராசரி மாணவராய் இருந்த இவர், இப்போது அமெரிக்காவில் 'பிளையிங் இன்ஸ்ரக்டர்' என்று சொல்லப்படும் விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநராக உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர் தான்  விமான ஓட்டிகளுக்கான முதல் பயிற்றுநர்  என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.  ரவி ஆர். சங்கரிடமிருந்து உரையாடியதிலிருந்து....

'எனது தந்தை ரவீந்திரன்நாயர், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியராக உள்ளார். தாய் நிர்மலா ரவீந்திரன். சகோதரி ரவீணா லக்ஷ்மி. நான் திருவட்டாறு  ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். தொடர்ந்து குமாரகோயில் நூருல் இஸ்லாம் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு சராசரி மாணவன் தான்.  

நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது  ஒருமுறை எனது தந்தையுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு பறந்து வந்த விமானங்களைப்  பார்த்து   பிரமிப்பும், பரவசமும் அடைந்தேன். விமானங்களை ஓட்டும் பைலட்டுகள் அங்கு மிடுக்காக நடந்து வருவதைப் பார்த்த போது எனக்குள்ளும், கற்பனை சிறகுகள் விரிந்தன. நானும் விமானங்களை ஓட்ட வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை ஏதோ ஒரு நம்பிக்கையில் மனத்திற்குள் விதைத்துக் கொண்டேன். பின்னர் விமானங்கள் எப்படி பறக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் புத்தகங்களிலும், இணையத்திலும் படிக்கலானேன். கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்  சேர்ந்து படித்த  போது  விமான தொழில் நுட்பங்களை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது.  

விமானம் ஓட்டி அல்லது விமானி ஆவதற்கு அடிப்படை கல்வித் தகுதி பிளஸ் 2 படிப்பாகும். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிப் பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. இதே போன்று வெளிநாடுகளிலும் உள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சி பெறுவதற்கு சற்று கூடுதல் செலவாகும். இந்தியாவில் விமான பயிற்சிக்கு மத்திய அரசின்  உதவித் தொகை வழங்கும் திட்டங்களும் உள்ளன.   

ஒருவர் விமானம்  ஓட்டிக்கான பயிற்றுநராவதற்கு முன்பு,  முதலில் விமானம் ஓட்டுநராக அதாவது விமானியாக பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சியானது 3 கட்டங்களைக் கொண்டது. முதலில் எஸ்.பி.எல். எனப்படும் ஸ்டூடன்ட் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். இதனைத் தொடர்ந்து பி.பி.எல். எனப்படும், பிரைவேட் பைலட் சைசென்ஸ் பெற வேண்டும். இவை இரண்டும் பெற்ற பின்னர்  சி.பி.எல். எனப்படும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். இதில் கமர்சியல் பைலட் லைசென்ஸ் என்பது முக்கியமானது. இந்த லைசென்ஸ் தான் விமானங்களை ஓட்டுவற்கு கற்றுத் தருகிறது.  இந்த

உரிமத்தை விரைவாகப் பெறுவது  ஒருவருடைய திறமையையும், ஆர்வத்தையும் பொறுத்தது. கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற்றவர் விமானங்களைத் தனியாக  இயக்கலாம். விமான ஓட்டிகளாக பயிற்சி பெற்றவர்கள்,  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநர் ஆக வேண்டுமென்றால், சி.எப்.ஐ.  எனப்படும் சர்டிபைடு பிளைட் இன்ஸ்ரக்டர் பயிற்சி பெற்று அதில் தேர்ச்சி பெற வேண்டும்.  

நான் இப்போது அமெரிக்காவில் புளோரிடா மகாணத்தில் டேட்டோனா  பீச் சர்வதேச விமான நிலையத்தில் பீனிக்ஸ் ஈஸ்ட் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநராக உள்ளேன். இதே நிறுவனத்தில் தான் விமான ஓட்டிக்கான பயிற்சியையும் முடித்து விமானி ஆனேன். 

விமான ஓட்டியாகவும், பயிற்றுநராகவும் பணி செய்ய முதலில்  ஒருவருக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். மேலும் விடா முயற்சியும், சவால்களை எதிர் கொள்ளும் மனத்திடமும் உள்ளவராக இருக்க வேண்டும். நுண்ணறிவு முக்கியம். பிற படிப்புகளை விட இதற்கு பணத்தேவை சற்று அதிகம் தான். அதே வேளையில் இப்பயிற்சிகளுக்கு கல்விக் கடன்களும் கிடைக்கின்றன.  

கிராமப் பின்னணியில் வளர்ந்த நான்,  ஒரு விமானி ஆக வேண்டும். விமான ஓட்டிகளக்கான பயிற்றுநராக வேண்டும் என்ற ஆர்வமும், அதனைத் தொடர்ந்த தேடலும் தான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.  எனவே கிராமம், நகரம் என்றில்லை. பள்ளியில் படிக்கும் போது குறைந்த மதிப்பெண்கள் பெற்று விட்டோம் என்று உடைந்து போக வேண்டிய அவசியமில்லை.  நமக்கான சிந்தனைகளை உயரத்தில், மிக உயரத்தில் வைக்கும் போது  எதுவும் சாத்தியம் தான்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com