லாபம் கொழிக்கும் தொழில் செய்ய ஆசையா? இதோ டிப்ஸ்!

'சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆரத்தி தட்டு, காசியாத்திரை குடை, மாப்பிள்ளை தலைப்பாகை
லாபம் கொழிக்கும் தொழில் செய்ய ஆசையா? இதோ டிப்ஸ்!

'சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆரத்தி தட்டு, காசியாத்திரை குடை, மாப்பிள்ளை தலைப்பாகை, ரெடிமேட் கூந்தல் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதைத் தொழிலாக எடுத்து செய்யலாம் என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:

ஆரத்தி தட்டு: தற்போது பெரும்பாலான திருமணங்களில் ஆரத்தித் தட்டு தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆரத்தித் தட்டை பல வடிவங்களில் தயார் செய்யலாம். நாம் சற்று வித்தியாசமாக பொம்மைகள் போன்றவற்றை நமது கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பல வடிவத்தில் செய்து வைத்து விற்பனையும் செய்யலாம், வாடகைக்கும் விடலாம். திருமண காலங்களில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.

காசியாத்திரை குடை: கடையில் விற்கும் குடையை வாங்கி அப்படியே கொடுப்பதை விட, சற்று வித்தியாசமாக அதில் கற்கள் பதித்து அல்லது 3 டி வைத்து அழகான வடிவங்கள் வரையலாம். குடையின் முனையில் உல்லன் நூல் அல்லது பட்டு நூல் கொண்டு குஞ்சலம் தொங்கவிடலாம். இதனால் குடை அலங்காரமாகவும், பார்க்க அழகான தோற்றத்துடனும் இருக்கும்.

மாப்பிள்ளை தலைப்பாகை: பெரும்பாலான இந்து திருமணங்களில் அவரவர் வழக்கப்படி திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு தலைப்பாகை கட்டுவது வழக்கம். தற்போது சென்னைப் போன்ற நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தலைப்பாகை கட்டத் தெரிவதில்லை. இதனால் திருமணத்தின்போது தலைப்பாகை கட்டிவிட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள வழக்கப்படி ரெடிமேட் தலைப்பாகை செய்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு இருக்கும்.

ரெடிமேட் கூந்தல் அலங்காரம்: திருமணம் என்றதும் பெண்கள் தங்கள் அலங்காரத்திற்காக நிறைய செலவு செய்வார்கள். அதிலும் தற்போதுள்ள பெண்கள் தங்கள் அலங்காரம் தனித்துவமாக இருக்கும் வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே தற்போது பிரத்யேகமான ரெடிமேட் ஜடைகள் நிறைய வந்துவிட்டன. அந்த ரெடிமேட் ஜடைகளை நாம் நமது கற்பனைக்கேற்றவாறு பல வடிவங்களில் செய்து விற்பனை செய்யலாம். உதாரணமாக, கடைகளில் கிடைக்கும் சவுரி மூடியை வாங்கி வந்து அதில் முத்துக்கள் வைத்து அலங்காரம் செய்யலாம் அல்லது ஏலக்காய், விதவிதமான பூக்கள், பழங்கள் என மணப்பெண்ணின் சேலை நிறத்திற்கு தகுந்தவாறு தயார் செய்து விற்பனை செய்யலாம்.

இவற்றை விற்பனை செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான பதில், வீட்டு வாசலில், தெருமுனையில் போர்ட் வைப்பது, உறவினர், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு உங்களது பரிசாக செய்து தாருங்கள். இதன் மூலம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் பார்வையில் பட்டு ஆர்டர்கள் கிடைக்கும். இணையதளம் மூலம் பரப்பலாம். மேலும், திருமண காண்ட்ராக்டர்களிடம் பேசி வைத்தும் ஆர்டர் பிடிக்கலாம். நல்ல வருமானம் தரும் தொழில் இது.
 - ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com