தனிநபர்களைக் கொண்டாடும் மூடத்தனத்தை நிறுத்துங்கள் இளைஞர்களே!

மழை பெய்கிறது. உருப்பளிங்கு (ஸ்படிகம்) போல் வெள்ளை வெளேர் என்று நிர்மலமாய்ப் பெய்கிறது.
தனிநபர்களைக் கொண்டாடும் மூடத்தனத்தை நிறுத்துங்கள் இளைஞர்களே!

மழை பெய்கிறது. உருப்பளிங்கு (ஸ்படிகம்) போல் வெள்ளை வெளேர் என்று நிர்மலமாய்ப் பெய்கிறது. ஆனால் பெய்த சில மணித்துளிகளில் மண்ணின் நிறம் நீரின் நிறமாகி மாறி விடுகிறது. கரிசல் காட்டில் பெய்த மழை கறுப்பாகி விடுகிறது. செம்மண்ணில் விழுந்தால் சிவப்பாகிச் சிரிக்கிறது. மண்ணில் விழாமல் மணலில் விழுந்தால் மறைந்தே போகிறது. களிமண் பகுதியில் பெய்த மழை உள்புகாமல் தேங்கி நின்று உயிரினங்களுக்கு உதவுகிறது. எதற்கும் மழை பொறுப்பில்லை. மழைக்கு எந்த உள் நோக்கமும் இல்லை. இப்படித்தான் சில கருத்துக்களை எழுத்திலும் பேச்சிலும் முன் வைக்கிறோம். என்றாலும் படிக்கிறவர்கள், கேட்கிறவர்கள், தத்தம் வண்ணம் பூசி விமரிசனங்களை வீசி எறிகிறார்கள். படைப்பாளிக்கு உள்நோக்கம் கற்பிப்பதில் படுவேகமாகச் செயல் படுகிறார்கள்.

இந்த உண்மையை உள்வாங்கிய பிறகு பிறரது விமரிசனங்களை மதித்தாலும், பாதிக்கப்படுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். மேலும் புகழுக்கு ஏங்குபவர்கள் தான் பிறரது இகழுக்கு வருத்தம் அடைவார்கள் என்பது என் தீர்மானம். புகழ் பெற வேண்டும், பாராட்டுப் பெற வேண்டும் என்பதை (Motivational Speakers and writers) சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் அதிகம் வற்புறுத்துகிறார்கள். கோடிக்கண்கள் அழ அழப் பிறந்த நாம் கோடிக் கண்கள் அழ அழ இறப்பதே சரி என்று வசனம் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இதில் உடன்பாடே இல்லை. பிறர் நம்மைப் புரிந்து கொள்வது, ஏற்பது, பாராட்டுவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதே என் கருத்து. 

பிறருக்கு உதவி செய்த பலர், அதற்காக பிறர் நம்மை மதிக்கவில்லை.. புரிந்து பாராட்டவில்லை என்று வருந்துகிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன கதை ஒன்று: 'கப்பலில் இருந்து கடலில் விழுந்து விட்ட சின்னஞ்சிறு குழந்தை ஒன்றை 'தயவு செய்து யாராவது காப்பாற்றுங்கள்' என்று ஒரு தாய் கதறினார். இளைஞன் ஒருவன் உயிரைப் பொருட்படுத்தாது கடலில் குதித்து குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் கொடுத்தான். 'நன்றி' என்ற தாய் அடுத்த கணம் கேட்டாள்...'குழந்தை காலில் போட்டிருந்த விலை மதிப்பற்ற ஷூவைக் காணவில்லை. அதை நீ கவனிக்கவில்லையா? இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?’ என்று கோபித்துக் கொண்டாளாம் இதுதான் உலகம். இன்னும் ஒருபடி மேலே போய், 'மறுபடியும் கடலில் குதித்து ஷுவைத் தேடித்தர முடியுமா?’ என்று கேட்டாள்' என்று கதையை முடித்தார் சர்ச்சில். மக்கள் பலர் அவ்வளவு சுயநலம் உள்ளவர்கள். பேராசை மிக்கவர்கள். நன்றி இல்லாதவர்கள் அரைகுறை அறிவுமட்டுமே உடையவர்கள். இவர்களுக்கு உண்மையான நன்மை
செய்வது அத்தனை சுலபமல்ல.

ஒரு வேடிக்கை கதை படித்தேன். ஐரோப்பாவின், ஒரு சிறுநகரில், இரவு எட்டுமணிக்குத் தம் கடையை மூடிக் கொண்டிருந்தார் ஒருவர். அவசர அவசரமாகக் கடைக்குள் நுழைந்த நாய் ஒன்று, ஒரு கூடையைக் கவ்வியபடி கொண்டு வந்து கடையின் உரிமையாளர் முன் வைத்து வாலாட்டியது. திகைத்து போன கடைக்காரர் கூடைக்குள் கிடந்த சீட்டை எடுத்துப் படித்தார். அதில் குறித்த பொருட்களைக் கடையில் இருந்து எடுத்து கூடையில் போட்டார். உடனே அறிவுள்ள அந்த நாய் கூடையின் வெளிப்பகுதி ஜிப்பைத் திறந்து பணத்தை எடுத்து கடைக்காரரிடம் நீட்டியது. திகைத்துப் போன கடைக்காரர் பாக்கி சில்லறையை நீட்டியதும் கூடையின் மறுபக்க ஜிப்பைத் திறந்து அதில் போடும்படி நாய் ஜாடை காட்டியது. பிறகு நன்றியுடன் வாலை ஆட்டியபடி வெளியேறியது. அதிக Curiosity (தேடல் ஆர்வம்) காரணமாக இந்த நாய் யாருடையது என்று கண்டறிய விரும்பிய கடைக்காரர் கடையைப் பூட்டிவிட்டு நாயைப் பின் தொடர்ந்தார். பஸ்டாண்டில் நின்ற நாய் சரியாக ஒரு பஸ்ஸில் ஏறி கண்டக்டரிடம் டிக்கட்டும் வாங்கிக் கொண்டது. இறங்க வேண்டிய இடத்தில் டிரைவர் பக்கம் போய் வாலை ஆட்ட, பஸ்ஸை நிறுத்தினார். டிரைவர், கடைக்காரர் மயங்கி விழாத குறைதான். நாயுடன் இறங்கி அதன் வீடு வரை பின் தொடர்ந்தார். 

சிக்னல் பார்த்து, சாலையைக் கடந்து, வீட்டுமுன் சென்று மரியாதையுடன் நாய் காலிங் பெல்லை அழுத்தியதும் வீட்டுக்காரன் வந்து கதவைத் திறந்தார். எரிச்சலுடன் நாயிடமிருந்து கூடையைப் பறித்துக் கொண்டு, ஓங்கி அதன் தலைமேல் இரண்டு குட்டு வைத்தார். பதறிப் போன கடைக்காரர், ‘இவ்வளவு புத்திசாலியான நாயை ஏன் அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் வீட்டுக்காரர் கோபமாக, 'முட்டாள் நாய்.. எத்தனை முறை சொன்னாலும் இதற்கு உரைப்பதே இல்லை. போகும் போதே வீட்டு சாவியை எடுத்துப்போ... வந்து என்னைத் தொந்தரவு செய்யாமல் கதவைத் திறந்து கொண்டு வா என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். மண்டையில் ஏறுவதே இல்லை. நேரம் கெட்ட நேரத்தில் காலிங் பெல்லை அடித்து கழுத்தை அறுக்கிறது’ என்றபடி கதவை அறைந்து சாத்திக் கொண்டார். இதுதான் உலகம். நீங்கள் யாருக்கு என்ன உதவி செய்தாலும் நிறைவே கிடையாது; நன்றியே கிடையாது. உதவி செய்வதோடு நம்பணி முடிந்து விடுகிறது. அதற்கான அங்கீகாரத்திற்கு ஏங்கக் கூடாது. குறைந்த பட்சம் நாம் செய்த உதவியை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூட எதிர்பார்க்கக் கூடாது.

நம்முடைய சுக துக்கங்களின் கேந்திரமாகப் பிறரை நாம் ஆக்கிக் கொண்டு விடுவதன் மூலம், நிம்மதியற்ற ஒரு வாழ்வு வாழ வேண்டி இருக்கிறது. பிறரைச் சார்ந்தே நாம் இன்பம் அடைகிறோம். அல்லது துன்பம் அடைகிறோம். மெல்ல பிறருக்கு அஞ்சுகிறோம். அல்லது அடிமையாகிறோம். சுதந்திரம் இழக்கிறோம். பிறரால் ஆட்டி வைக்கப்படுகிறோம். 

பிறரால் பாதிக்கப்படாத சுதந்திர உணர்வுதான் இளையதலைமுறையைச் சரியாக வடிவமைக்கும் என்று கருதுகிறேன். இன்று பல இளைஞர்கள் பல கட்சிகளில் தீவிரமான தொண்டர்களாக உலா வருவதை நான் பார்க்கிறேன். ஒரு தலைவன் எங்கு போனாலும் அவன் முன்னும் பின்னும் காரில் பிதுங்கி வழிந்தபடி தெருவில் கூச்சல் போட்டுக் கொண்டு போகும் ஏமாளிகளை மந்தை மந்தையாகப் பார்க்கிற போது என் மனம் வேதனைப்படுகிறது. இந்த இளைஞர்கள் சுயவிழிப்புப் பெறாமல் அடிமைகளாகிறார்கள் என்று நான் அஞ்சுகிறேன். இன்று எந்த அரசியல் கட்சியிலாவது தலைமையைக் கண்டிக்க முடியுமா? கருத்துச் சுதந்திரம் எந்த இயக்கத்திலாவது அனுமதிக்கப்படுகிறதா? தலைமைக்கு விசுவாசம் என்ற அராஜக அடிமைத்தனம் கட்சிகளில், இயக்கங்களில் காலுன்றி விட்டது.

இளைஞர்கள் இதை நிராகரிக்க வேண்டும். தனிநபர்களைக் கொண்டாடும் மூடத்தனத்தை நிறுத்திவிட்டு சரியான கருத்தை ஏற்றல், பிழையான கருத்தை நிராகரித்தல் என்கிற சுதந்திர உணர்வுடன் வாழவேண்டும். நபர்கள் வருவார்கள்... போவார்கள்... கருத்துகள் தான் நிரந்தரம். தலைவனைவிட தத்துவமே தலைமையானது என்கிற சொந்த ஒளி உள்ளவனாக இளைஞர் வாழவேண்டும். எல்லா மதங்களில் இருந்தும் நல்ல விஷயங்களை உள்வாங்க வேண்டும். தன் மதப்புத்தகத்தில் உள்ள தவறுகளைத் தவறு என்று சொல்லும் தைரியம் வேண்டும். 

மொழி வெறி, இனவெறி, மதவெறி, யாவுமே பிழை என்ற தெளிவு இன்றைய அவசரத் தேவை. மிகைபட புகழ்தல், மிகைபட இகழ்தல் ஒரு வகை மனநோய் என்று புரிந்து கொள்ள வேண்டும். முன்னோரை மதித்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களது தவறுகளை. அறியாமைமிக்க செயல்முறைகளை அடையாளம் கண்டு உறுதியுடன் விலகி நிற்றல். சத்தியத்தைக் காக்க ராமன் காடும் போகும் போது, குலகுரு வசிட்டரே பாசத்தால் தடுமாறி, 'நீ போகாதே.. குரு சொல்கிறேன்’ என்றதும், 'நீங்களா இப்படிப் பேசுவது?' என்று கண்டித்தபடி ராமன் குருவை மீறியதும் ராமாயணத்தில் தான் இருக்கிறது என்பது பல மதவாதிகளுக்குப் புரியாமல் போனது எனக்கு வேதனை தருகிறது. பழையனவற்றை மதிக்க வேண்டியது மட்டும் நம் வேலை அல்ல.. புதியனவற்றைத் தோற்றுவிப்பதும் நம்பணி தான் என்று சுதந்திர இளைஞன் உணர வேண்டும். மகாகவி பாரதி கேட்கிறார்: 'எவ்வளவு காலம்தான் காலத்தின் பின்னாலேயே போவது? நமக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிற காலத்திற்குக் கதவு திறந்து வைக்கிற வேலையை யார் செய்வது?'

எவ்வளவு அறிவுபூர்வமான கேள்வி இது?

- சுகி சிவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com