வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்!

தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலுள்ள 50 க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளிகள் ஒன்று கூடிய கருத்தரங்கு  
வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்!

தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலுள்ள 50 க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளிகள் ஒன்று கூடிய கருத்தரங்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. உற்சாகத்துடன் கலந்து கொண்ட இளம் படைப்பாளிகள் தங்கள் மனதிலுள்ள பல விஷயங்களை மேடையில் பேசினர். இதில் குடும்பம் எப்படி இருக்க வேண்டும்? இன்றைய பெண்ணுக்கான தேவை என்ன? தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வரும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? ஊடகத்துறையில் பெண்களின் பங்கேற்பு எனப் பல விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டன. அவர்கள் பேசியவைகளில் சில..

"தமிழகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன் உலுக்கிய நிகழ்வு சரிகாஷா இறப்பு. ஈவ்டீசிங் கொடுமையால் இளம் வயதில் பலியானார். அவளுடைய பெற்றோர் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். ஒரு பேராசிரியராக நானும் அந்த விழாவிற்கு சென்று இருந்தேன். அந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் சிவசங்கரி கலந்து கொண்டார். அதற்கு முன்பு வரை அவருடைய எழுத்தின் மேல் அதிகம் ஈர்ப்பு வந்ததில்லை. ஆனால் விழாவில் கலந்து கொண்டு பேசியவர், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் இந்த சமூகத்தில் அவர் சொன்ன விதம் அத்தனை அருமையாக இருந்தது. இன்றைய குழந்தைகளுக்கு பாடங்களைத் தவிர இந்தச் சமூகம் பற்றி ஏராளமான செயல்முறை விஷயங்களை அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியது நம்முடைய கடமையாகும்'' என்றார் கவிஞரும் பேராசிரியருமான வெண்மணி.

"நீதி வெண்பாவில் பெண்களைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இப்போதுதான் நாம் நமக்கான வார்தைகளை நம் உள்ளங்கையில் ஏந்தி வரத் தொடங்கியிருக்கிறோம். இது எனக்கான வார்த்தை என் வாழ்வின் வார்த்தை என்று நாம் நம் சொற்களால் பேசத் தொடங்கியிருக்கிறோம். முதலில் பெண்கள் தங்கள் மாயையிலிருந்து விடுபட வேண்டும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்புக்குப் பதில் உச்சம், ஞானம், திடம், உயிர்ப்பு என்று மாறுதல்களோடு வாழ்வோம்'' என்றார் கவிஞரான ஆண்டாள் பிரியதர்ஷினி.

"இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிப் பேர் பெண்கள். இவர்களில் 80 சதவிகிதம் பேர் வேலை செல்பவர்கள். இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பெண்களின் உழைப்புக் கணக்கில் எடுத்துகொள்ளபடுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்'' என்றார் வழக்கறிஞர் சுசீலா.

"1888 ஆம் ஆண்டிலேயே ராணுவத் துறையில் பெண்கள் பணியாற்ற அனுமதிப்பட்டார்கள். அப்படி இருந்தும் பெண்களின் பங்களிப்பு ராணுவத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. ராணுவம் என்றால் துப்பாக்கி ஏந்துதல் என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி பல துறைகள் உள்ளன. மருத்துவம், கணினி போன்ற உட்துறைகள் உள்ளன. வீரமும் ஆயுதமும் இருக்கும் துறையில் பெண்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும்'' என்றார் கவிஞர் கவிக்குழல்.

"பெண்களுக்காக மட்டும் தான் நீதி இலக்கியங்கள் பேசுகின்றன. சில பெண் பிம்பங்கள் மூலமாக நமக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீதை போல் இருக்கும்படி சொல்பவர்கள் மாதவி போல் வாழு என்று சொல்வதில்லை. ஆனால் உண்மையில் மாதவி தான் ஆளுமை மிக்க பாத்திரம். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று இங்கே பெண்ணைப் புனிதமாக்கி கொண்டாடுகிறார்கள்.அல்லது புறம் தள்ளுகிறார்கள்'' என்றார் கவிஞர் மனுஷி.

"பெண்கள் தாய்மை, பெருங்கருணை மன்னித்தல் போன்ற தங்களின் உன்னத குணங்களுடன் ஆணாக மாறிவிடாத அசல் பெண்களாக அரசியலுக்கு வர வேண்டும். இன்றிருக்கின்ற வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்த அனுப்ப வேண்டிய பெரும் பொறுப்பும் பெண்ணுக்குரியதே'' என்றார் கவிஞர் நர்மதா.

 - ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com