பிணத்தைச் சுற்றி அமர்ந்து அழுத பெண்ணுக்கு குரங்கு கூறிய ஆறுதல்! (வைரல் விடியோ)

பிணத்தைச் சுற்றி அழுது கொண்டிருந்த உறவுப் பெண்களின் அருகில் சென்று அமர்ந்த குரங்கு அந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக தோளில் கை வைத்தது. பின்னர் அந்தப் பெண்ணின் தலையைத் தடவி துக்கம் விசாரிப்பது போல
பிணத்தைச் சுற்றி அமர்ந்து அழுத பெண்ணுக்கு குரங்கு கூறிய ஆறுதல்! (வைரல் விடியோ)

‘குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான்’ என்கிறார் டார்வின். இதையே நாம் இயறகை பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு என்கிறோம். இதை அப்படியே ஏற்றுக் கொள்வோரும் இருக்கிறார்கள் மறுப்போரும் இருக்கிறார்கள். இதைப் பற்றிய பல சர்ச்சைகள் இப்போதும் நிலவி வருகின்றன. ஆயினும் பல சந்தர்பங்களில் குரங்குகள் தாம் மனிதர்களின் முன்னோடிகளே என்பதை நிரூபிக்கும் விதத்திலான பல செயல்களைச் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

கடந்த வருடம் நாங்கள் குடும்பத்துடன் சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அருவி வரை நேரடியாக வாகனத்தில் செல்ல முடியாது. ஓரிடத்தில் இறங்கி காரை பார்க் செய்து விட்டு அங்கிருந்து  செப்பனிடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள காட்டுப்பாதையில் சுமார் 1 கிலோ மீட்டர் வரை நடந்து தான் செல்ல வேண்டும். செல்லும் வழியெங்கும் நம்மை வரவேற்பவை நம்முடைய முன்னோர்களே. மரத்துக்கு மரம் தாவியும், கிர், புர்ரென்று பல்லைக் காட்டிச் சீறியும் அவை அருவி வரை நம்முடன் பயணிக்கின்றன. அப்படிச் செல்கையில் தான் ஒன்றைக் கவனித்தேன்.

ஓரிடத்தில் சற்று வயதான குரங்குக்கும், துடிப்பான இளம் குரங்குக்கும் பலத்த சண்டை நடந்து கொண்டிருந்தது. துடிப்பான இளம் குரங்கு மூர்க்கத்தனத்துடன் சண்டையிட்டதில் வயதான குரங்குக்கு உடல் முழுதும் விழுப்புண்கள். ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பிற குரங்குகள் சண்டையை விலக்கி விட முயன்று கொண்டிருந்தன. அப்போது அதன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் குரங்கும் குட்டிக் குரங்கும் வயதான குரங்கின் அருகில் அரவணைத்து அமர்ந்து கொண்டு அதன் காயங்களை வருடிக் கொண்டும், இன்னும் வேறு எங்கெல்லாம் காயமிருக்கிறது என்று சோதித்துக் கொண்டும் இருந்த காட்சியை நாங்கள் கண்டோம். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மிருகங்களுக்கு பரிதாப உணர்ச்சி இல்லை என்று யார் சொன்னது? இதோ கண்ணெதிரே காட்சியாக விரிகிறதே அவற்றுக்கிடையிலிருக்கும் பாச உணர்வும், அரவணைப்பு உணர்வும். சொல்லப்போனால் மனிதர்களிடத்தில் தான் வர வர இந்த உணர்வு குறைந்து கொண்டே வருகிறதோ என்னவோ?

இதோ இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வைரல் விடியோ ஒன்று ஒளிபரப்பானது.  கர்நாடக மாநிலம், நார்குண்டில் ஒரு மனிதர் இறந்து விட்டார். அவரது மனைவியும், உறவுப் பெண்களும் பிணத்தைச் சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அந்தச் சூழலில் அங்கே ஒரு குரங்கு வருகிறது. வந்த குரங்கு அங்கிருந்த பொருள் எதையேனும் எடுத்துக் கொண்டு ஓடியிருந்தால் அந்த விடியோ வைரலாகி இருக்க வாய்ப்பில்லை. அடுத்து அந்தக் குரங்கு செய்த காரியத்தால் தான் விடியோ வைரல் ஆகியிருக்கிறது. 

பிணத்தைச் சுற்றி அழுது கொண்டிருந்த உறவுப் பெண்களின் அருகில் சென்று அமர்ந்த குரங்கு அந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக தோளில் கை வைத்தது. பின்னர் அந்தப் பெண்ணின் தலையைத் தடவி துக்கம் விசாரிப்பது போல தட்டியும் கொடுத்தது. இப்படி செய்வது முதல் முறை இல்லையாம். அந்தக் குரங்கு அந்த ஊரில் யார் இறந்தாலும், இறந்தவர் வீடுகளுக்குச் சென்று இப்படித்தான் செய்வது வழக்கமாம். இதெல்லாம் அதிசயம் தானே?! மிருகங்களுக்கும் மனிதர்களின் உணர்வுகள் புரிந்திருப்பதால் தானே இப்படிச் செய்ய முடிந்திருக்கிறது. உலகில் கடவுள் நம்பிக்கை கொண்டோரெல்லாம் இப்படியான செயல்களை மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வ சக்தியின் தரிசனம் என்று கருதலாம். உண்மையில் இது குரங்கு தன் சக மனிதர்களிடத்தில் கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடே  அன்றி வேறென்ன?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com