Enable Javscript for better performance
writers corner in social media | உங்களுடைய வீழ்ச்சியில் உள்ளூர மகிழ்ச்சியடைபவர்கள் யார்?- Dinamani

சுடச்சுட

  

  உங்களுடைய வீழ்ச்சியில் உள்ளூர மகிழ்ச்சியடைபவர்கள் யார்?

  By DIN  |   Published on : 05th December 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  fb

  face book

  வலைதளத்திலிருந்து...

  கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக பொறியியல் கல்விக்கான தேவை, அவை உருவாக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய மேம்போக்கான புரிதலாவது நமக்கு அவசியமாகிறது. தொண்ணூறுகளின் இறுதியில் இந்தியாவில் மிக அதிக அளவில் மென்பொருள் நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

  அந்நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பியர்களுக்கான வேலைகளைச் செய்து கொடுப்பவையாக இருந்தன. அங்கு பணியாற்ற அடிப்படையான ஆங்கில அறிவு கொண்டவர்கள் தேவைப்பட்டார்கள். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க 12+4 வருடங்கள் படிப்பைப் படித்தவர்களுக்கு விசா வாங்குவது எளிது என்பதால் அதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பொறியியல் கல்வி நிறுவனங்கள் இத்தேவையை நிறைவு செய்தன. நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்களை கல்வி நிறுவனங்கள் "உற்பத்தி' செய்தன. அவர்களைப் பெருமளவில் வேலைக்கு எடுத்து தமக்குத் தேவையான தொழில்நுட்பத்தில் "மட்டும்' பயிற்சியளித்து தமக்குத் தேவையான ரோபோக்களாக அந்நிறுவனங்கள் மாற்றிக் கொண்டன. இதனால்தான் இத்தனை ஆயிரம் பேர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். 

  தற்பொழுது சூழல் வெகுவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் தேக்க நிலையை அடைந்திருக்கின்றன. ஏற்கெனவே இத்துறையில் பணியிலிருக்கும், கடந்த இருபதாண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டவர்களையே பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற சூழல்தான் நிலவுகிறது. அதனால்தான் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனங்கள் வெகுவாக வடிகட்டுதலை மேற்கொள்கின்றன. இதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். 

  பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வெறும் ஆங்கிலம் தெரிந்த ஒரு பட்டதாரி என்பதற்குப் பதிலாக, "முழுமையான பொறியாளர்களை' உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகிஇருக்கிறது. 

  - வ.மணிகண்டன்

  http://www.nisaptham.com/

  **

  முக நூலிலிருந்து....

   

  அண்மையில் ஞானபீடப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கிதமிற்கு 93 வயதாகிறது. பாலக்காட்டிற்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். சமஸ்கிருதத்திலும் வேதங்களிலும் ஞானமுள்ள இந்த நம்பூதிரி, தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். பார்ப்பனர் அல்லாதாருக்கும் வேதம் கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டவர் பத்திரிகையாளர். மங்களோதயம், யோகஷேமம் போன்ற இதழ்களின் உதவி ஆசிரியர். பின்னர் அகில இந்திய வானொலியில் சேர்ந்தார்

  அவர் கவிதை ஒன்றின் சுருங்கிய வடிவம்:

  கோப்பையில் சூடாக உள்ள தேநீரை
  நீ பருக விரும்பினால்
  கோப்பையில் உள்ள புயலையும்
  நீ பருகித்தானாக வேண்டும்
  அன்பிற்குரியவரால் மேசையில் வைக்கப்பட்டுள்ள
  இனிப்பான தேநீரிலிருந்து எழும் ஆவி சொல்லியது
  உன் துயரத்தைக் கைவிட்டு
  விரைந்து எழு
  சிகரங்களுக்கான பாதைகள்
  நேரானவை அல்ல
  அதுதான் உன் வருத்தம் என்றால்
  என்றும் நீ வருத்தத்தில்.....

  ..... கோப்பையைக் காலி செய்துவிட்டு எழுந்தேன்
  கோப்பைக்குள் இருந்த புயல் தணியவே இல்லை
  என்னைக் கல்லாக்கிக் கொண்டு
  நான் படி இறங்குகையில்
  கண்ணீர் ஒளிரும் என் குழந்தையின்
  கண்களின் சோகம்
  என் ஐம்புலன்களையும்
  என்றென்ன்றும் உள்ள
  என் இதய வலிமையின் மூலத்தையும்
  சோர்வுறச் செய்கிறது

  - மாலன் நாராயணன்

  **

  மனம் இற்றுச் சாய்ந்து போயிருக்கும்போது, முகநூலில் நிலைத்தகவல் இடக்கூடாது. இன்றைப் போல நாளை இருக்காது. உங்களுடைய வீழ்ச்சியில் உள்ளூர மகிழ்ச்சியடைபவர்களே அநேகர். ஆகவே, துயர் பொங்கும், நெருக்கடி மிகும் நாட்களில் சும்மா இருங்கள் போதும்.

  - தமிழ்நதி


  நித்தம் நித்தம் சூரியனைப் புதைக்கும்
  கொடுஞ்செயல் குறித்து
  ஏதேனுமொரு கணமேனும்...
  சிறு கவலை வராமலா போகும்
  அந்தி வானத்திற்கு?

  - தமிழ்மணவாளன்

  முடியாதது முயலாதது மட்டுமே. 

  - பரமேசுவரி

  அறை புகும் வெளிச்சம்
  இருட்டைத் திறக்கிறது...
  இன்னொரு சாவியால்.

  - செளந்தர மகாதேவன்

  வாழ்க்கை என்பது சைக்கிளில் 
  செல்வதைப் போன்றது. 
  உங்களை சமநிலையில் 
  வைத்திருக்க... 
  நீங்கள் தொடர்ந்து சென்றாக 
  வேண்டும் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

  - சுந்தரபுத்தன்

   நாட்கள் மணிகளோடும்
  வாரங்கள் கிழமைகளோடும்
  மாதங்கள் 
  கடன்களோடும்
  பிறக்கின்றன .

  - சுப்புராஜ் ரெங்கசாமி

  சுட்டுரையிலிருந்து...

  ஒளிவு மறைவெல்லாம் கட்டுப்படுத்த
  படும்போது மட்டும்தான். 
  எதை வேண்டுமானாலும்
  செய்துகொள்ளும் சுதந்திரம் 
  இருக்கையில்...
  எதையும் செய்யாமல் 
  "ஙே' என்று தான் அமர்ந்திருக்கத் தோன்றுகிறது

  - இந்திரா

  அளவுக்கு மீறிய அன்பு
  அதிக சந்தோஷம் தருகிறது.
  இல்லையெனில்...
  அதிக வலிகளைத் தருகிறது.
  அன்புடன் 

  அடுத்தவனை விட 
  நமக்குக் குறைவாய் 
  இருப்பதை நினைத்து
  திருப்தி அடைவதில்...
  "சுகரும்" ஒன்று.
  ச ப் பா ணி

  "யாரைச் சார்ந்தும் நானில்லை'
  என்ற ஒற்றை கர்வம் போதும்...
  கெத்தாய் வாழ்ந்து சாக. 

  - ரோசாப்பூ தையல்காரன்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai