அறிவுஜீவிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்!

அறிவுஜீவிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்!

மூதறிஞர் ராஜாஜி கொண்டு வர முயன்ற புதிய கல்விக் கொள்கை தவறாகப்.புரிந்து கொள்ளப்பட்டு, குலக்கல்வித் திட்டம் எனச் சாயம் பூசப்பட்டது

முக நூலிலிருந்து....

மூதறிஞர் ராஜாஜி கொண்டு வர முயன்ற புதிய கல்விக் கொள்கை தவறாகப்.புரிந்து கொள்ளப்பட்டு, குலக்கல்வித் திட்டம் எனச் சாயம் பூசப்பட்டது. அதனால் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உண்டு என்று தந்தை பெரியார் கூறியது கருத்து திட்டமிட்டு திரிக்கப்பட்டு ராஜாஜி பள்ளிகளை மூடினார் என்று இன்று வரை உண்மைக்கு மாறாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. படிக்கும் மாணவர்கள் பாதி நேரம் தொழில் பழகவேண்டும் என்ற அவரது குறிக்கோள் திசை திருப்பப்பட்டது. திமுக ஆட்சியில் இதே அறிவிப்பு செய்தார் அமைச்சர் பொன்முடி. பதவிக்காக அவர் தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஆங்கில இதழியலுக்கு எதிர்காலம் இல்லை. தமிழ் இதழியலை வலுப்படுத்தவேண்டும் என வரதராஜுலு நாயுடுவை அறிவுறுத்தினார். தமிழிசையை வளர்க்கப் பாடுபட்டார். நல்ல நாள் கெட்ட நாள் இவன் இந்த சாதி என்று அவர் பார்த்ததில்லை. இந்தி திணிக்கப்படுவதை கடுமையாக.எதிர்த்தார். "இந்தியைத் திணித்தால் குடியரசு தினம் இருமடங்கு துக்கம்" எனத் துணிந்து கூறினார். மதுவிலக்கு கொள்கையை உறுதியாக அமல்படுத்தினார். தந்தை பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டார். இன்று பல அறிவுஜீவிகளாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் தலைவரான ராஜாஜியின் ஒரு நிலைப்பாட்டைக் கடுமையாக எதிர்ப்பேன். அவர் கம்யூனிஸ கொள்கைக்கு விரோதி. இருந்தாலும் தூய்மை நிறைந்த தலைவர்.

- கிருஷ்ணன். பா.

துயர் பொங்கும் கண்களுடன்
கால் மாற்றியபடி நிற்கும்
கோயில் யானை...
ஆசி வேண்டி... 
குனிகிற தலைகள் மேல் 
வைப்பது
காடு திரும்புதலுக்கான 
விண்ணப்பமோ?
- கயல். எஸ்

அம்மாவின் புடவை
சுவராக மாறும் வீட்டில்
வளர்ந்தவனுக்குத்தான் 
தெரியும்...
மழையில் விழுவது
சுவரல்ல...
வாழ்க்கை.

- ராமன் நாகப்பன்

செங்கலையும், சிமெண்டையும் தின்றுவிட்டு, 
செரிக்காமல் படுத்திருக்கும் 
எங்கள் தெருச்சாலை,
கொஞ்சமாகப் பெய்த 
மழைத் தண்ணீரைக் கூட 
குடிக்காமல் விட்டிருக்கு.

- கவி வளநாடன்

வெளியேறத் தெரியாமல்
பேருந்துக்குள்ளேயே
சுற்றிக் கொண்டிருக்கிறது...
முன் கண்ணாடிக்கு அழகூட்டிய
பிளாஸ்டிக் மாலையை
உண்மையென நம்பி வந்த
வண்ணத்துப் பூச்சி.

- செங்கான் கார்முகில் 

ரயில் ஜன்னலுக்கு அப்பால்
இருள் நிலத்தில் நகரும் 
தூர ஒளிப் புள்ளிகளை 
நினைவில் கோர்த்து 
"கப்பல்' என்கிறாள்...
எப்போதோ இரவில் 
கடல் பார்த்த சிறுமி.
மாமத யானை

சுட்டுரையிலிருந்து...

அத்தனை சுகங்களோடும் 
என்னைக் கிராமத்திலிருந்து 
அனுப்பி வைத்து விட்டு,
அதே இடத்தில் 
இன்னும் அழகாய் இருக்கிறது...
வீடு.

- கனவு காதலன்

எல்லா மெக்கானிக் 
கடைகளிலும் 
ஐம்பத்தாறு ஸ்பானர் 
உயரத்தில் 
ஓர் சிறுவன் வேலை 
பார்க்கிறான்.
எல்லா சிக்னலிலும் 
வண்ணங்கள் அறியா சிறுமி 
ஓவியப்புத்தகம் விற்கிறாள்.
எல்லா கடற்கரையிலும் 
பிஞ்சு கைகள் பாத்திரமாகி
பிச்சை கேட்கிறது...
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
முறையான பெற்றோர்கள்.

- பழைய சோறு

கடந்து செல்ல 
வேண்டியதைப் பற்றி 
கருத்து கூறிக் கொண்டும்,
கருத்து கூற வேண்டிய 
விடயத்தைக் 
கடந்து செல்லவும் 
பழகி விட்டோம்.

- கோழியின் கிறுக்கல்

சிவப்பே அழகென்று வியாபாரம் செய்தவர்கள், பிரபஞ்சத்தின் அழகாக கருப்பைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

கருப்பானவர்கள், அதிலும் என்னைப் போன்ற சிகை கொண்ட பெண்கள் அழகானவர்கள் இல்லை என்ற பொதுப்புத்தி இன்றுடன் முடிவுறும் என்றிருக்கிறார், பிரபஞ்ச அழகி Zozibini Tunzi.

ஆடம்பரங்களற்ற கருப்பு தான் எத்தனை அழகு, சிரிப்பில் மேடையே மிளிர்கிறது.

- ஹரிஹரசுதன் தங்கவேலு

படுக்கையில் படுத்திருப்பவர் எழுந்திருக்க வேண்டும் என்றால் கூட எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணத் தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதல் எப்படி ஏற்பட்டது என்பது உங்கள் யோசனைக்கு. அந்தத் தூண்டுதல் இல்லை என்றால் "எழுந்திருந்தால் போச்சு' என்ற அலட்சியம் வந்து விடும். தூண்டுதலுக்கு அடுத்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்.. பல் விளக்குவதற்காக டூத் பேஸ்ட் இருக்குமிடம் போய், ப்ரஷில் பேஸ்ட்டைப் பிதுக்கி... இதெல்லாம் தினம் தினம் செய்து இயந்திர கதியில் நடக்கும் பழக்கப்பட்ட மூளையில் பதிந்த அனிச்சை செயல்கள்... 

ப்ரஷ் பற்களில் இயங்கிக் கொண்டிருக்க அன்றைக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் கூட நினைப்பு ஊர் சுற்றிக் கொண்டிருக்கலாம். நினைவு அப்படி எங்கேயோ பதிந்து இருக்கையில் பல் தேய்த்து, வாய் கொப்பளித்து, துண்டால் முகம் துடைத்து இதெல்லாம் எந்த உந்துதலும் இல்லாமல் நடந்து விடுவது தான் ஆச்சரியம்... எப்படி நம் மூளை சில விஷயங்களை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது, பாருங்கள்.. சாதம், குழம்பு, ரசம், மோர் தான்... என்றைக்கும் மோர், ரசம், குழம்பு இல்லை.. ஏன்?.. இந்த வரிசைக்கிரமம் பழக்கத்தால் மனசில் பதிந்து போன ஒன்று.. ஒரு நாளைக்கு இந்த வரிசைக் கிரமத்தை மாற்றி மோர், ரசம், குழம்பு என்று சாப்பிட்டுப் பார்த்தால் நமக்கே அது வேடிக்கையாக இருக்கும். 

எதைச் செய்யும் பொழுதும் மனம் அதில் பதிந்தால் தான் செய்யும் விஷயத்தோடு செய்பவருக்கு ஒட்டிய உறவு ஏற்படும். அந்த ஒட்டிய உறவுதான் மனத்தையும் செய்யும் செயலையும் ஒன்றாகக் கட்டி வினை புரிவது. நீங்கள் எந்தக் காரியம் நடக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அந்தக் காரியத்தோடு வெளி மனதின் வழிகாட்டல், உள் மனதின் ஆற்றல், இவை பிணைத்தால் தான் ஓர் ஒழுங்கு முறை லயத்தோடு அந்தக் காரியம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உங்கள் மனசிலேயே பதியும். இல்லையென்றால் எந்தச் செயல்பாடும் விழலுக்கு இறைத்த நீர் தான்.

http://jeeveesblog.blogspot.com வலைதளத்திலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com