இப்படி ஒரு காரா?

உளி, சுத்தியலால் ஜன்னல், கதவு மட்டும் செய்ய முடியும் என நினைப்பவர்கள் மத்தியில் காரும் செய்ய முடியும்,
இப்படி ஒரு காரா?

உளி, சுத்தியலால் ஜன்னல், கதவு மட்டும் செய்ய முடியும் என நினைப்பவர்கள் மத்தியில் காரும் செய்ய முடியும், தேரும் செய்யலாம் என உறுதியுடன் பேசுகிறார் தச்சுக் கலைஞரான லட்சுமணன். சென்னை போரூரில் வசிக்கும் இவர் மரத்தால் கார், பைக், சைக்கிள் உட்பட 240 பொருட்களைச் செய்து அசத்தி வருகிறார். இந்தக் கலைப் பொருட்களுக்குப் பின்னால் இருக்கும் லட்சுமணன் யார்?

நாங்கள் ஏழு தலைமுறைகளாகத் தச்சு வேலை செய்து வருகிறோம். என்னுடைய தந்தை அப்பர், மாட்டு வண்டிகள் செய்வதில் கைதேர்ந்த கலைஞர். தாத்தா கோயில் தேர்கள் செய்வதில் அனுபவசாலி. 

எங்களுடைய சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம். தொழிலுக்காகச் சென்னைக்கு வந்து விட்டோம். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். தச்சுத் தொழில் சார்ந்து இதுவரை 10 புத்தகங்கள் எழுதியுள்ளேன். மரமும் மனிதமும், தச்சர்களின் கையேடு, பெருந்தச்சர்களின் டைரி, காலத்தின் சாரம் போன்றவை புத்தகங்களில் முக்கியமானவை. இந்தப் புத்தகங்களில் அதிகம் எழுத்துகள் இருக்காது. கோடுகளும், ஓவியங்களும் தான் இருக்கும். பெரும்பாலும் தச்சுத் தொழிலை கொண்டவர்கள் அதிகம் படிக்காதவர்கள். மேலும் தச்சுத் தொழில் என்றால் சிறுவயதில் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பா வேலை செய்யும் இடம், வீடு எல்லாம் எனக்கு ஒரே இடம் தான். சிறுவயதில் விளையாடியது உளி, சுத்தி, வாள் வைத்துதான். 

உளி, சுத்தியல் வைத்து இவர்களால் என்ன செய்துவிட முடியும் என நினைப்பவர்கள் மத்தியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். முதலில் மரத்தால் சைக்கிள் செய்தேன். அதை ரோட்டில் ஓட்டி செல்லும் போது நான் நினைத்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது. என்னை மக்கள் சூழ்ந்து கொண்டு ஒரு மணி நேரம் விடவில்லை. அதனைத் தொடர்ந்து மரத்தால் பைக் செய்தேன்.  அடுத்து ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். 

கார் உருவாக்கும் எண்ணம் வந்தது. இரண்டு ஆண்டுகள் எப்படிச் செய்வது என்று திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கினேன். இரண்டு மாதத்தில் செய்து முடித்தேன். மரத்தால் ஆன கார் 80 கி.மீ வேகத்தில் ஓடும். நான் தயாரித்த காரிலேயே கேரளா வரை சென்று வந்தேன். இதற்கென உரிமம் கிடையாது என்பதால் இதைத் தொடர்ச்சியாக உருவாக்கி விற்பனை செய்ய முடியவில்லை. 

இது தவிர எங்கள் வீட்டில் காபி சாப்பிடும் டம்ளர், சாப்பாடு தட்டு, அஞ்சறை பெட்டி, மின் விசிறி என அனைத்துமே மரத்தால் ஆனது தான். இது மட்டுமல்லாமல் அகப்பை, மரப்பாச்சி பொம்மை போன்ற வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தும் செய்து வைத்திருக்கிறார்கள்.

இப்போது சமையலுக்குத் தேவையான எத்தனையோ அகப்பை வந்தாலும் நமது முன்னோர்கள் கொட்டாங்குச்சியால் செய்த அகப்பையின் மகிமையே தனிதான். இது 240 டிகிரி வெப்பத்தைத் தாங்கும். இந்தக் குச்சி  சமையல் செய்யும் போது கரைந்து கொண்டே இருக்கும். அவை வயிற்றுக்கு நல்லது. குழந்தைகளுக்கு வயிற்றுவலி என்றால் இந்தக் கொட்டாங்குச்சியை உரசி நாக்கில் தடவுவார்கள். இதனுடைய வடிவம் வேறு எங்கும் காண முடியாது.  இது போன்று இசைக்கருவி, ஏர் கலப்பை போன்றவற்றை நமது முன்னோர்கள் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் தச்சுக் கலைஞர்களுக்கான மரியாதை யாரும் கொடுப்பதில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. 

தச்சு கலைஞரான என்னுடைய அப்பாவுக்குக் கிராமத்தில் மரியாதை அதிகம். நான் 10 வகுப்பு படிக்கும் போது அவருடன் டீக்கடைக்குச் செல்வேன். அப்பாவை கண்டதும் அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லுவார்கள். கடைக்காரர் அப்பாவுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதைப் பார்த்து வளர்ந்த எனக்குச் சென்னை வந்த பிறகு பெரும் ஏமாற்றம். இங்கு தச்சுத் தொழிலாளர்களை யாரும் மதிப்பதில்லை. ஒரு கூலிக்காரனாக மட்டுமே பார்க்கிறார்கள். ஓர் ஆசாரி செய்து கொடுக்கும் வாசற் கதவு பல ஆண்டுகள் நமக்குப் பயன் தருகிறது. ஆனால் அதைச் செய்து கொடுத்த ஆசாரியை மறந்து விடுகிறார்கள். என்னுடைய தாத்தா செய்த தேர் 60 ஆண்டுகளைத் தாண்டி இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அதை யார் செய்து கொடுத்தார் என்பதைப் பொருட்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் 36 ஆயிரத்து 814 கோயில்கள் உள்ளன. இதனை வடிவமைத்த சிற்பி பற்றி தகவல் தெரிவதில்லை.

என்னுடைய குருநாதர் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி. கன்னியாகுமரி கடல் நடுவே வைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவர். சென்னையிலுள்ள அண்ணா ஆர்ச், வள்ளுவர் கோட்டம், காந்தி மண்டபத்தை வடிவமைத்தவர். உலகம் முழுவதும் 560 கோயில்களை வடிவமைத்தவர். அவரிடமிருந்து நான் ஏராளமான கலைகளைக் கற்றுக்கொண்டேன். தான் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுத்தவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் கொண்டவர் கணபதி ஸ்தபதி.  அவர் 5 லட்சத்து 95 ஆயிரம் செலவில் தான் அண்ணா வளைவை உருவாக்கினார். ஆனால் அதை இடிப்பதற்கு அரசாங்கம் 95 லட்ச ரூபாய் செலவு செய்தது. ஆனாலும் இடிக்க முடியவில்லை. மும்பையிலிருந்து பொறியாளர்கள் வந்து வளைவை ஒன்றும் செய்ய முடியவில்லை. இது தான் அவர் உருவாக்கிய படைப்பின் உன்னதம்.

சென்னை விமான நிலையத்தில் பூம்புகார் நிறுவனத்தினர் கேட்டு கொண்டதன் பெயரில் தமிழ்த் தேர் ஒன்று செய்து கொடுத்துள்ளேன். அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேர் செய்யும் பணியின் போது விமான நிலையம் சென்று பார்த்தேன். கட்டட வடிவம் தவறாகக் கட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன். அதனால் தான் இன்றுவரை இடிந்துவிழுவது தொடர்கிறது. இனியும் தொடரும். எங்களைப் போன்ற கலைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தால், இதற்கான செலவில் பாதி ரூபாயிலேயே பிரம்மாண்டமான கட்டடம் கட்டியிருப்போம். ஆனால் எங்களை போன்ற கலைஞர்கள் படிக்கவில்லை. டெண்டர் விவரம் தெரியாது. அரசாங்கத்திடம் எப்படி விண்ணப்பம் செய்வது என்பது தெரியாது என்பதால் படித்தவர்கள் எளிதாக அந்தப் பணியை வாங்கிவிடுகிறார்கள். 

என்னுடைய ஆசை என்பது மரத்தினால் பிரம்மாண்டமான கோயில் ஒன்றை உருவாக்க வேண்டும். அதனை மக்கள் அனைவரும் பார்த்து வியக்க வேண்டும். அது விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன். மேலும் இந்திய அரசாங்கத்திற்குத் தேர் வடிவம் கொண்ட கார் ஒன்றை செய்து கொடுக்க வேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற  நாட்களில் மக்கள் தலைவர் அந்தக் காரில் தான் வர வேண்டும். இந்தக் காரை முழுக்க ரோஸ் வுட்டால் உருவாக்கலாம். மணிக்கு 25 கி.மீ வேகத்தில் ஓடும்.

அந்தக் காரில் இந்திய கலாசாரம் அத்தனையும் இடம் பெற்றிருக்கும். உலக நாட்டுத் தலைவர்கள் அந்த தேரை பார்த்து வியக்க வேண்டும். அதற்காக ஸ்பெஷல் தேரை வடிவமைத்துள்ளேன். என்னிடம் அந்தளவு பண வசதி இல்லை. அதனால் அரசாங்கம் உதவி செய்தால் அந்தத் தேர் போன்ற காரை செய்து கொடுப்பேன்.

இது போன்று தமிழ்நாடு அரசிற்கும் அனைவரும் வியக்கும் வண்ணம் மரத்தால் வாகனம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். 

கலாசாரம் என்ற மிகப்பெரிய மரத்தின் ஆணிவேர்கள் நாங்கள். ஆனால் பூமிக்குள் வெளியே தெரியாமல் மறைந்து இருக்கிறோம்'' என்கிறார் லட்சுமணன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com