நாவூறும் சுவையில் 4 வடநாட்டு இனிப்பு, காரம்!

சென்னையில் கடந்த 20 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் food & beverages துறையில் அனேக வளர்ச்சிகளை கண்கூடாக நாம் பார்க்கிறோம்.
Pani poori
Pani poori

சென்னையில் கடந்த 20 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் food & beverages துறையில் அனேக வளர்ச்சிகளை கண்கூடாக நாம் பார்க்கிறோம். முன்பு எல்லாம் குறிப்பிட்ட உணவு அந்தந்த ஊரில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் இப்போது எல்லைகள் தாண்டி உணவுகள் பரவலாகக் கிடைக்கின்றன.

ஒவ்வொரு தெருவிலும் பானி பூரித் தள்ளுவண்டிக் கடைகள் மாலையில் திடீரென முளைக்கும். அந்த பானிபூரி விற்பவரைச் சுற்றி சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை கையில் ஒரு வெள்ளை நிற டிஸ்போசபிள் கப்புடன் நின்றிருப்பார்கள்.

பெரும்பாலும் பானி பூரி விற்பவர்கள் இளம் வயதினராகத்தான் இருக்கிறார்கள். வேகமாக அவர்கள் பானி பூரியை சுழற்சி முறையில் அனைவரின் பாத்திரத்திலும் எண்ணிக்கை மாறாமல் வைப்பதே ஒரு தனி அழகு. சுவை என்று எடுத்துக் கொண்டால், பானி பூரி ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும். வாய் நிறைய சிரிப்புடன் அச்சா ஹை என பதில் சொல்வார்கள். பானி பூரி மட்டுமல்லாமல் தெருவோரக் கடைகளிலிருந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த 4 வட இந்திய உணவுகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்.

வட பாவ்

வட பாவ் மும்பை மக்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் சாட் உணவு. மும்பையில் மட்டுமல்ல, தற்போது நாடு முழுவதும் உள்ள சாட் பிரியர்களுக்கு பிடித்த உணவாகிவிட்டது. காரணம் இதன் வித்யாசமான சுவை, நினைத்தாலே நாவூறச் செய்துவிடும். சிறப்பான மாலை நேரச் சிற்றுண்டியான வடபாவ், பச்சை நிற சட்னியுடன் பரிமாறப்படுகிறது.

ரசகுல்லா

நாட்டின் மிகச் சிறந்த இனிப்புகளில் ஒன்றான ரஸகுல்லாவின் பூர்வீகம் கொல்கத்தா என்றாலும் நாடு முழுவதும் உள்ள இனிப்பு பிரியர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம். திருமண விழாக்கள், விருந்திலும் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. பால் மற்றும் சர்க்கரையுடன் தயாரிக்கப்பட்ட சிறிய வெள்ளை பந்து போல இருக்கும் இந்த ரசகுல்லா,  பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். வாயில் போட்டவுடன் சர்க்கரை சிரப் கரைந்து இதயம் வரை இனிக்கும்.

சோளா பட்டூரா

தலைநகர் தில்லியில் பரவலாக ரசித்து உண்ணப்படும் இந்த உணவு, சென்னைக்கு வந்து செட்டிலாகி நீண்ட காலமாகிறது. அதன் சுவை வட இந்தியா முழுவதும் பல இதயங்களை வென்றுள்ளது. சோளா பூரியும் அதற்கு இணை உணவாக சென்னா மசாலாவும், பச்சை வெங்காயம், சிறு துண்டு லெமனுடன் சேர்த்து பரிமாறப்படும் போதே பாதி பசி தீர்ந்துவிடும். அதன் பின் கைக்கும் வாய்க்கும் மட்டும்தான் பேச்சு.

மலாய் பேடா

ஆக்ரா நகரத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு தாஜ்மஹால் என்றால் அதற்கு அடுத்தது பேடாவாகத்தான் இருக்க முடியும். சுவை என்றால் அப்படியொரு சுவை. சொல்லில் அடங்காது. இந்த வரலாற்று நகரத்தில் தோன்றிய பேடாவை நிச்சயம் உணவு பிரியர்கள் ருசித்துப் பார்க்க வேண்டும். இந்த இனிப்பு வகை பல சுவைகளில் நாடு முழுவதும் கிடைக்கிறது என்றாலும் ஆக்ராவில் மட்டுமே அசல் சுவையுடன் கூடிய பேடாவைப் பார்க்க முடியும். என்கிறார்கள் நிபுணர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com