இவ்வளவு ருசியான சாட் உணவுகளா?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "த ஸ்பிரிங்' ஹோட்டலில் சிகிரி குலோபல் கிரில் சார்பில் "ஸ்டிரீட் ஃபுட் பெஸ்டிவல்' நடைபெற்று வருகிறது.
இவ்வளவு ருசியான சாட் உணவுகளா?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "த ஸ்பிரிங்' ஹோட்டலில் சிகிரி குலோபல் கிரில் சார்பில் "ஸ்டிரீட் ஃபுட் பெஸ்டிவல்' நடைபெற்று வருகிறது. நவம்பர் 20 வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் முக்கிய உணவுகளாக நியூ தில்லியின் தெருக்களில் பிரபலமாக உள்ள மாலை உணவுகளான தில்லி டிக்கி சோலே, பானிபூரி, பேல்பூரி, சமோசா, கச்சோரி, பாலக் பட்டா சாட், மேத்தி மிர்ச்சி ஆலு, தில்லி வாலே சோலே குல்ச்சா போன்ற பலவகையான சாட் உணவுகள் இடம் பெறுகிறது. அதிலிருந்து சில சாட் உணவுகளின் செய்முறைகள் இதோ:

தில்லிவாலே ஆலு டிக்கி

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 2
கார்ன் பவுடர் - 1 தேக்கரண்டி
மசாலாவிற்கு:
கடலை பருப்பு - 1 கிண்ணம்
சீரகம் - 1தேக்கரண்டி
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்த்தூள் - அரைதேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
உப்பு - 2-3 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் மசாலா செய்து கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை நன்கு வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் சீரகத்தை வதக்கவும். பின்னர் மேலே கொடுத்துள்ள மசாலா தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கடலை பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும். கொத்துமல்லி தூவி இறக்கிக் கொள்ளவும்.

பின்னர் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் கார்ன் பவுடர், சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும் அடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையாக எடுத்து லேசாக குழிப் போல் செய்து அதனுள்ளே கடலைப்பருப்பு மசாலாவை வைத்து மூடி கட்லட் போன்று வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும். தவாவில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அதன்மீது மெலிதாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்துமல்லி வைத்து அலங்கரிக்கவும். சுவையான தில்லிவாலே ஆலு டிக்கி தயார்.

சன்னா குல்ச்சா

தேவையானவை:

கடலை பருப்பு - 1 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
பால் பவுடர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 துண்டு
கொத்துமல்லி - சிறிது

செய்முறை: கடலைப்பருப்பை வேக வைத்து மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மிதமான சுடுநீரில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். பின்னர் ஈஸ்ட் சேர்த்து கரைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும். ஈஸ்ட் நுரைத்து வந்ததும், அதனுடன் மைதா மாவு மற்றும் கோதுமை மாவு, பால் பவுடர், உப்பு, வெண்ணெய் , பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது சேர்த்து தண்ணீர் அல்லது பால் கொண்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் மெல்லிய ஈர துணியில் சுற்றி 1 மணி நேரம் மூடி வைக்கவும். அடுத்து அதன் மீது லேசாக மைதா தூவி உருண்டைகளாக உருட்டி அதன் உள்ளே மசித்த கடலைப் பருப்பு மாவை சிறிது வைத்து சப்பாத்தியாக வேண்டிய வடிவில் திரட்டிக் கொள்ளவும். பின்னர் ஈர துணியில் மூடி வைக்கவும். 10 நிமிடத்தில் சப்பாத்தி துண்டுகள் லேசாக உப்பலாக இருக்கும். இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், அதில் சிறிது வெண்ணெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை வதக்கவும். அதில் ஒரு சப்பாத்தி துண்டை வைத்து சுட்டெடுக்கவும். மற்ற சப்பாத்தி துண்டுகளையும் இதுபோன்று சுட்டெடுக்கவும். சுவையான சன்னா குல்ச்சா தயார்.

பனீர் ராவல்பின்டி

தேவையானவை:

துண்டுகளாக நறுக்கிய பனீர் - 2 கிண்ணம்
தயிர் - 2-3 தேக்கரண்டி
கஸþரி மேத்தி - ஒன்றரை தேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லி - சிறிது
சாட் மசாலா அரை தேக்கரண்டி
மசாலாவிற்கு:
சீரகம், ஓமம் - தலா அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - 1
தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 துளி
தக்காளி பியூரி - 1 கிண்ணம்
பிரஷ் க்ரீம் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லித்தழை - சிறிது
எண்ணெய், நெய் - 2 1/2 தேக்கரண்டி

செய்முறை: ஒரு கிண்ணத்தில் பனீர் துண்டுகளை போட்டு அதில் தயிர், சாட் மசாலா தூள், கஸ்தூரி மேத்தி, கொத்துமல்லி தழை, தக்காளி விழுது, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

இதற்கிடையில் பனீருக்கு தேவையான கிரேவி தயார் செய்து கொள்ளலாம்.  வாணலியில் எண்ணெய், நெய் விட்டு அதில் சீரகம், ஓமம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, தக்காளி பியூரி, மேலே கொடுத்துள்ள மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், மசாலாவில் புரட்டி வைத்துள்ள பனீர் துண்டுகளை தோசைக்கல்லில் ஈட்டு எண்ணெய்விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து அதனை மசாலா கலவையில் சேர்த்து வதக்கவும். சுவையான பனீர் ராவல்பின்டி தயார்.

பேல்பூரி

தேவையானவை:

பொரி - 1 கிண்ணம்
ஓமப்பொடி - 1 தேக்கரண்டி
பானி பூரிக்கான பூரி அல்லது தட்டுவடை- 4
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய மாங்காய் - 1 தேக்கரண்டி
புதினா/கொத்துமல்லி சட்னி - தேவையான
அளவு
தக்காளி சாஸ் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/4 தேக்கரண்டி
சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது

செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் பொரியைப் போட்டு, அதில் பானிபூரியை அல்லது தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com