'கண்ணாடிகளை இறக்கிவிட்டு கார்களில் சென்றால் 80% அதிகமாக காற்று மாசு பாதிப்பு'

கண்ணாடிகளை இறக்கிவிட்டு கார்களில் செல்வோர் மற்றவர்களைவிட 80 சதவிகிதம் அதிகமாக மாசுபட்ட காற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கண்ணாடிகளை இறக்கிவிட்டு கார்களில் செல்வோர் மற்றவர்களைவிட 80 சதவிகிதம் அதிகமாக மாசுபட்ட காற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகம் முழுவதும் கார்களில் செல்வோர், காற்றுக்காக ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டுச் செல்லும்போது, குறிப்பாக, மாசுபட்ட பெருநகர்களில், மற்றவர்களைவிட அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தத் தகவல்கள், பிரிட்டனிலுள்ள சர்ரே பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் முடிவில்  வெளியிடப்பட்டுள்ளன.

பல்கலை.யின் தூய காற்று ஆய்வுக்கான பன்னாட்டு மையத்தின் தலைமையில் உலகளவிலான வல்லுநர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் விவரங்கள் யாவும் சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட் (ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பற்றிய அறிவியல்) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, உலகில் ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசு காரணங்களால் மட்டுமே 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 10-ல் 9 பேர் மிக மோசமாக மாசுபட்ட காற்றைத்தான் சுவாசிக்கின்றனர்.

உலகின் பத்து வெவ்வேறு நகர்களில் - வங்கதேசத்தில் டாக்கா, இந்தியாவில் சென்னை, சீனாவில் காங்சௌ, கொலம்பியாவில் மெடல்லின், பிரேசிலில் சா பாலோ, எகிப்தில் கெய்ரோ, இராக்கில் சுலைமானியா, எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபா, மலாவியில் பிளான்டயர், தான்சானியாவில் தார் அஸ் சலாம் - இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நகர்களில் இடைப்பட்ட நேரங்களைத் தவிர, காலை, மாலை வேளைகளில்தான் காற்று மாசு மிக அதிகமாக இருக்கிறது. குளிர்சாதனத்தை இயக்கும்போதும் அல்லாமல் கண்ணாடிகளை இறக்கிவிட்டுச் செல்லும்போதும் எந்த அளவுக்கு காரை ஓட்டுவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஆய்வுக் குழுவினர் அளவிட்டுள்ளனர்.

உலகின் மிகவும் ஏழ்மையான நகரங்களில் சிலவற்றில்தான் ஓட்டுநர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எந்த நகராக இருந்தாலும் எந்த வகை கார்களாக இருந்தாலும் கண்ணாடிகளை இறக்கிவிட்டுச் செல்லும் கார்களில் காற்று மாசு பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. பரபரப்பற்ற நேரங்களில் கார் ஓட்டுபவர்களிடம் காற்று மாசால் ஏற்படும் தாக்கமானது காலை நேரங்களைவிட 91 சதவிகிதமும் மாலை நேரங்களைவிட 40 சதவிகிதமும் குறைவாக இருக்கிறது. காரில் செல்லும் மற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

கார்களில் குளிர்சாதன வசதி போன்றவற்றைப் பயன்படுத்துவோரைவிட கண்ணாடிகளைத் திறந்துவைத்துப் பயணங்களை மேற்கொள்வோர் ஏறத்தாழ 80 சதவிகிதம் அதிகமாக காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர்.

"இயன்றவரை குறைவான கார்களே சாலைகளில் இயக்கப்பட வேண்டும், இயக்கப்படும் கார்களும் சூழல் மாசு ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும். ஆனால், இன்னமும் வளர்ச்சியுறா நாடுகள் பலவற்றில் இவற்றை நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால், உலகின் 10 நகர்களில் நாங்கள் எடுத்துள்ள தரவுகள் மிகவும் துல்லியமானவை" என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் ஆய்வு இயக்குநர் பேராசிரியர் பிரசாந்த் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com