மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது எது?

வாழ்க்கையில் பணத்திற்காக போராடுவதை விட்டுவிட்டு நல்ல மன ஆரோக்கியத்திற்காக போராடுங்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது எது?

வாழ்க்கையில் பணத்திற்காக போராடுவதை விட்டுவிட்டு நல்ல மன ஆரோக்கியத்திற்காக போராடுங்கள் என்றும் அதுவே மனிதனுக்கு அதீத மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மனிதனின் அடிப்படைத் தேவைகள் கூட வியாபாரமாகியுள்ள இந்த உலகத்தில் பணம் அவசியம்தான். அதேநேரத்தில் பணம் இருந்தும் பல வியாதிகளால் மனிதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதவனாக இருக்கிறான். உடல் நோய்களுக்கு பல சிகிச்சை முறைகளை பெற்றாலும் அதன்பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அவர்களால் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை. எனவே, வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்கு போராடாமல் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வழிகளைத் தேடுங்கள். அந்த வகையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனிதன் உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதாகவும், உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 

அதன்படி, உடற்பயிற்சி செய்வது ஒரு நபரை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்குகிறது என்று 'தி ஹில்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக்ஸ்போர்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்  12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். ஆய்வு முடிவில், பணத்தை பொருட்படுத்தாமல் தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

அவ்வப்போது மட்டுமே சுறுசுறுப்பாக இருப்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் மிகவும் மோசமான உடல்நலத்துடன் வாழ்கின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, பணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன, உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தின் மூலமே மனிதன் மகிழ்ச்சியை முழுவதும் பெறுகிறான் எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஆதலால், பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; அதன் அவசியம் அறிந்து செலவு செய்ய வேண்டும். நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதைவிட அதனை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆகவே, தேவைக்கேற்ப பணம் சம்பாதித்து செலவு செய்யுங்கள். அதைவிட உடல்நலத்தில் கவனம் செலுத்தி ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுங்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com